2024 மக்களவை தேர்தலில் உதவி செய்ய பிராந்திய ஆணையர்களை நியமிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
- வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த 1951ம் ஆண்டு நடந்த முதலாவது மக்களவை பொது தேர்தலின்போது தலைமை தேர்தல் ஆணையருக்கு உதவியாக மும்பை, பாட்னாவில் பிராந்திய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு நடந்த பொது தேர்தல்களில் இவர்கள் நியமிக்கப்படவில்லை.
- இந்நிலையில், சட்டம் மற்றும் பணியாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, மக்களவையில் சமீபத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், 'தேர்தலின்போது தேர்தல் ஆணையத்துக்கு போதுமான ஊழியர்கள், அதிகாரிகள் இருக்க வேண்டும்.
- தலைமை தேர்தல் ஆணையருக்கு உதவியாக பிராந்திய தேர்தல் ஆணையர்களை நியமிக்க அரசியல் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
- எனவே, 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இந்த ஆணையர்களை நியமிக்க வேண்டும்,' என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- அரசியல் சட்டம் 324(4)வது பிரிவின் கீழ் ஒவ்வொரு பொது தேர்தல்கள், மாநில சட்டபேரவை தேர்தல்கள், சட்டமேலவை இடைத்தேர்தல்கள் நடப்பதற்கு முன்பாக, தலைமை தேர்தல் ஆணையரின் ஆலோசனையின்படி பிராந்திய தேர்தல் ஆணையர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வான் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
- போர்க் காலங்களில் தொலைதூரத்தில் வரும் எதிரி நாட்டின் விமானத்தை தரையில் இருந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) அண்மையில் தயாரித்தது.
- சென்சார், ரேடார் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலம் பலாசோரில் சோதித்து பார்க்கப்பட்டது.
- இதற்காக வான் பரப்பில் தொலைதூரத்தில் அதிவேகமாக செல்லும் விமானம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, ஏவுகணையை இயக்கியவுடன் அது தரையில் இருந்து பாய்ந்து சென்று குறிப்பிட்ட நேரத்தில் அந்த விமானத்தை துல்லியமாக தாக்கி அழித்தது.
ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டி இறுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் தோல்வி
- ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியின் இறுதி ஆட்டம் செயின்ட் ஜேக்கப்ஷேல் நகரில் நடைபெற்றது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரணாய், உலகின் எட்டாம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார்.
- சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 12-21, 18-21 என்ற நேர் செட் புள்ளி கணக்கில் ஜோனதன் வெற்றி பெற்றார்.
- ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டி இறுதிச் சுற்று போட்டியில் இந்திய நட்சத்திர வீரரான எச்.எஸ். பிரணாய், இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியிடம் தோல்வியடைந்தார்.
ஸ்விஸ் ஓபன் பட்டம் - தாய்லாந்து வீராங்கனையை வென்று சாம்பியன் ஆனார் பி.வி.சிந்து
- ஸ்விஸ் ஓபன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.
- இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான் ஆகிய இருவரும் பலப்பரீட்சை நடத்தினர்.
- முதல் சுற்றின் முடிவில் 21-16 புள்ளிகளுடன் அந்த செட்டை சிந்து தன்வசமாக்கினார்.
- 21-8 என்ற கணக்கில் 2வது செட்டையும் கைப்பற்றினார். இரண்டு செட்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து.
- 2019ல் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பி.வி.சிந்து பெற்ற 2வது பட்டம் இதுவாகும்.
மீன்வளம் குறித்த இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஐந்தாவது கூட்டம் மெய்நிகர் வடிவில் நடைபெற்றது
- மீன்வளம் குறித்த இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஐந்தாவது கூட்டம் கடந்த 25-ந்தேதி மெய்நிகர் வடிவில் நடைபெற்றது.
- இந்தியக் குழுவுக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை செயலர் திரு ஜதிந்திரநாத் ஸ்வைன் தலைமை வகித்தார்.
- மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வள அமைச்சகம் , வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு, புதுச்சேரி அரசு, இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
- இலங்கைத் தரப்புக்கு அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சகத்தின் செயலர் திருமிகு ஆர்.எம்.ஐ. ரத்னாயகே தலைமை வகித்தார்.
- இந்தியா, இலங்கை இடையே நீண்டகாலமாக இருந்து வரும் மீனவர்கள், மீன்பிடி படகுகள் பிரச்சினை உள்பட இருதரப்பு விஷயங்கள் பற்றி கூட்டுப் பணிக்குழு விரிவான விவாதம் நடத்தியது.
- கடற்படை, கடலோரக் காவல் படை கூட்டு ரோந்து, கடத்தல் தடுப்பு, இருதரப்பு மீனவர்களின் கவலைகளைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட இருதரப்பு விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
- கூட்டுப் பணிக்குழுவின் முதல் கூட்டம் 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி புதுதில்லியில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் கொழும்பில் 2017 ஏப்ரல் 7-ல் நடந்தது. மூன்றாவது கூட்டம் அதே ஆண்டில் அக்டோபர் 13-ந்தேதி புதுதில்லியிலும், நான்காவது கூட்டம் 2020 டிசம்பர் 30-ந்தேதி மெய்நிகர் வடிவிலும் நடைபெற்றன.