புதுதில்லியில் 36-வது சர்வதேச புவியியல் மாநாடு
- 36-வது சர்வதேச புவியியல் மாநாடு புதுதில்லியில் வரும் 20 முதல் 22ம் தேதி வரை மெய்நிகர் வடிவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான கருப்பொருள் “புவி அறிவியல் - நிலையான வருங்காலத்துக்கான அடிப்படை அறிவியல்” என்பதாகும்.
- மத்திய சுரங்கங்கள் அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம், இந்திய தேசிய அறிவியல் அகாடமி, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் அறிவியல் அகாடமிகள் சேர்ந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
- ஒலிம்பிக் புவிஅறிவியல் என்று கூறப்படும் இந்த மாநாடு, நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் வரை பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள்.
- 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெறவிருந்த இந்த மாநாடு கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
உலகின் மிக நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல மின்சார வாகனத்தை திரு நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
- உலகின் மிக நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல மின்சார வாகனமான டொயோட்டா மிராய்-ஐ மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
- டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும், வாகனத் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையமும் இணைந்து ஆய்வு நடத்தி, உலகின் மிக நவீனமான எரிபொருள் மின்கல மின்சார வாகனமான டொயோட்டா மிராயை, வடிவமைத்துள்ளனர்.
- இந்த வாகனம் ஹைட்ரஜனால் இயங்கக் கூடியது மட்டுமில்லாமல் இந்திய சாலைகள் மற்றும் பருவநிலைக்கு ஏற்றதாகும். இந்தியாவில் இந்த வகையில் இது முதலாவது முன்னோடி திட்டமாகும்.
- பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான சுற்றுச் சூழலை நாட்டில் உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்கலத்தின் தனித்துவ பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- புதைபடிம எரிபொருட்களை சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையான எரிசக்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முக்கிய முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இதன் மூலம் இந்தியாவை 2047 ஆம் ஆண்டில் எரிசக்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டதாகும்.
- பசுமை ஹைட்ரஜனை உயிரி எரிபொருட்களைக் கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக உருவாக்கலாம். பசுமை ஹைட்ரஜன் வளத்தை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தியாவுக்கான தூய்மையான குறைந்த விலையிலான எரிசக்தி பாதுகாப்பை உருவாக்க முடியும்.
ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
- ராணுவத்தினருக்கான, ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு 2015ல் அறிவித்தது. 'இத்திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.
- ஆனால், 'இதை ஆண்டுதோறும் மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். 2013ம் ஆண்டை அடிப்படையாக வைத்து ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதை, 2014ம் ஆண்டை அடிப்படையாக வைத்து மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்' என, முன்னாள் வீரர்கள் இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்துள்ளது. அத்தகைய முடிவு அரசாங்கத்தின் கொள்கை வகுப்பதற்கான அதிகார வரம்பிற்குள் உள்ளது.
- எனவே மத்திய அரசு வகுத்த திட்டத்தை நீதிமன்றம் உறுதி செய்கிறது. ஐந்தாண்டுகள் முடிவடைந்த பின்னரும், இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள மறுசீரமைப்பு பணியை, 2019 ஜூலை 1 முதல் மேற்கொள்ள வேண்டும்.
போரை நிறுத்த வேண்டும் - ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
- ரஷ்யா போர்குற்றத்தில் ஈடுபடுவதாக கூறி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட சர்வதேச நீதிமன்றம், போருக்கு எதிராக 13 வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், சமீபத்தில் ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
என்எல்சி, சோலார் எனர்ஜி நிறுவனங்களுடன் 2,900 மெ.வா. மின்சாரம் வாங்க டான்ஜெட்கோ ஒப்பந்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
- சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) ஒப்பந்தம் மேற் கொண்டது.
- என்எல்சி நிறுவனம் 800 மெகாவாட் திறன் கொண்ட 3 மின் உற்பத்தி அலகுகளை ஒடிசாவின் தலபிராவில் அமைக்கிறது. அதில் 11,500 மெகாவாட் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 2026-27-ல் உற்பத்தி தொடங்கும்.
- நிலக்கரி சுரங்கத்துக்கு அருகில்இருப்பதால் என்எல்சி, யூனிட்டுக்குரூ.3.06 கட்டணம் நிர்ணயித்துள்ளது. 2026-27 முதல் 1,500 மெகாவாட் மின்கொள்முதல் செய்வது தொடர்பாக என்எல்சியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- மேலும் டான்ஜெட்கோவுக்கு தனி நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்படும் என்றும், 2,700 மெகாவாட் கூடுதல் மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவன உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், தமிழகத்தின் புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் கொள்கைபடி ஒரு யூனிட் ரூ.2.61 விலையில் 1,000 மெகாவாட் சூரிய மின் சக்தியை வாங்குவதற்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த மின்சாரம் 2022-23-ம் ஆண்டு இறுதியில் கிடைக்கும்.
- இதேபோல, பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன், 4 நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகின. இதன் மூலம் 24 மணி நேரமும் 400 மெகாவாட் மின்சாரம், ஒரு யூனிட் ரூ.3.26 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இதன் ஒப்பந்தக் காலம் 3 ஆண்டுகள்.
ரூ.100 கோடி செலவில் மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி
- சர்வதேச செஸ் கூட்டமைப்பின் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வரும் ஜுலை மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
- ஆனால் ரஷ்யா, உக்ரைன் போர்சூழ்நிலை காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி மாஸ்கோவில் நடைபெறாது என சர்வதேச செஸ் கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்தது.
- இதைத் தொடர்ந்து போட்டியை நடத்தும் உரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகளில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, தமிழக அரசுடன் இணைந்து செயல்பட்டது.
- இதற்கான ஏலத்தில் போட்டியை நடத்துவதற்கான இடமாக சென்னை நகரை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தேர்வுசெய்தது. இதன்படி மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாத இறுதியில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சி.ஐ.ஐ., தென் மண்டல தலைவராக சுசித்ரா தேர்வு
- இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவராக, பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் துணை நிறுவனர் சுசித்ரா கே எல்லா பொறுப்பேற்றார்.
- இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவராக, 'கவின் கேர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.கே.ரங்கநாதன் இருந்தார்.
பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்பு
- பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து, இம்மாநிலத்தின் புதிய முதல்வராக பக்வந்த் மான் பதவியேற்றார்.
- சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்விக கிராமமான ஷாகித் பகத்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கட்கர்கலனில் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு - உச்ச நீதிமன்றம் அனுமதி
- சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
- இந்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தனியார் மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தனர்.
- இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
- அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டு வழங்கலாமா, வேண்டாமா என்பது தொடர்பான இடைக்கால தீர்ப்பை வழங்க வழக்கை ஒத்தி வைத்திருந்தது.
- இந்நிலையில், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், 'தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம்' என அனுமதி அளித்து உத்தரவிட்டது.
- இந்த ஆண்டு தமிழக அரசின் அரசாணைப்படி அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கலந்தாய்வு நடத்தவும் அனுமதி வழங்கு உத்தரவிட்டது.