அறிவியல், தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு - இந்தியா சிங்கப்பூா் ஒப்பந்தம்
- இந்தியா-சிங்கப்பூா் இடையிலான தொழில்நுட்ப உச்சி மாநாடு-2022 புதன்கிழமை தொடங்கியது. இணையவழியில் நடைபெறும் இந்த மாநாட்டை, சிங்கப்பூா் வா்த்தகம், தொழில்துறை அமைச்சகம், இந்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை, இந்திய தொழிலக கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
- இந்நிலையில், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமானது.
- பரஸ்பர நலன்களுக்காக மேற்கண்ட துறைகளில் ஒருங்கிணைந்த திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.
உக்ரைன் போரின் முதல் நாள் வெற்றிகரமாக முடிந்துள்ளது - ரஷ்ய ராணுவம்
- உக்ரைன் படையெடுப்பின் முதல் நாள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- முதல் நாளில் மட்டும் 11 விமானப்படைத் தளங்கள் உட்பட 74 ராணுவ தளங்களை அழித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா ராணுவம் காலை முதல் குறைந்தது 203 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் போலீஸ் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.
- செர்னோபில்லில் உள்ள அணுமின் நிலையத்தை ரஷிய படையினர் கைப்பற்றியதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் 1986, ஏப்ரலில் ஏற்பட்ட அணு உலை வெடிப்பின் காரணமாக ஐரோப்பாவுக்கு கதிரியக்கம் பரவியது.
உக்ரைன் விவகாரத்தில் மாநில ஒருங்கிணைப்பு அலுவலராக ஜெசிந்தா லாசரஸ் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
- உக்ரைனில் உள்ள தமிழர்கள், டெல்லி தமிழ்நாடு இல்லத்தையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியா திரும்பும் தமிழக மாணவர்களுக்கு உதவ டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- இந்த உக்ரைன் விவகாரத்தில் மாநில ஒருங்கிணைப்பு அலுவலராக வெளிநாட்டு தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜெசிந்தா லாசரஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் நல வாரியக் குழு அமைந்தது தமிழக அரசு அரசாணை வெளியீடு
- செய்தித்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் 'பத்திரிகையாளர் நல வாரியம்' ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது.
- இந்த நல வாரியத்தின் தலைவராக செய்தித்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர், வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆணையர், நில நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்/துணைச் செயலர் உள்ளிட்டோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மேலும், சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன் (தினத்தந்தி), ஆர்.எம்.ஆர்.ரமேஷ் (தினகரன்), பி.கோலப்பன் (தி இந்து), எஸ்.கவாஸ்கர் (தீக்கதிர்), எம்.ரமேஷ் (புதிய தலைமுறை), லட்சுமி சுப்பிரமணியன் (தி வீக் வார இதழ்) ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
- விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி சத்திரப்பட்டி சாலையின் மேற்குப்பகுதியில் கிராமமான அரசியார்பட்டி பகுதியில் கல்திட்டை, முதுமக்கள் தாழிகள், குத்துக்கல் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
- அரசியார்பட்டியில் செம்மண் நிலத்தின் மேற்பரப்பில் அருகருகே புதைந்தநிலையில் சிறிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் உள்ளன.
- இதில் ஒரு தாழியின் வாய்ப்பகுதியின் விட்டம் 43 செ.மீ. உள்ளது. மேற்பகுதி அரைவட்டமாக உள்ள, 1 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சில பலகைக்கற்கள், தாழிகள் இருக்கும் பகுதியில், தனித்தனியாகக் காணப்படுகின்றன.
- இவை சேதமடைந்த கல்திட்டையின் எஞ்சிய கற்கள். மேலும் 3 மீட்டர் உயரமுள்ள ஒரு குத்துக்கல் ஒன்றும் கீழே சாய்ந்த நிலையில் கிடக்கிறது. இவை சுமார் 3000 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நீடித்த நகரங்கள் இந்தியா திட்டம்’ செயலாக்கத்தில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உலக பொருளாதார அமைப்பும் தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன
- எரிசக்தி, போக்குவரத்து போன்ற துறைகளில் கரியமில வாயு வெளியேற்றப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலம், நகரங்களுக்கு உகந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் நோக்கில், ‘நீடித்த நகரங்கள் இந்தியா திட்டம்’ செயலாக்கத்தில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உலகப் பொருளாதார அமைப்பும் தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.
- 2070-க்குள் இந்தியாவில் கரியமில வாயு (கார்பன்) வெளியேற்றத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்துவது என, கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதி அளித்துள்ள நிலையில், இந்த முன்முயற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- குறிப்பாக இந்திய நகரங்களை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நகரங்களாக மாற்ற, இந்தத் திட்டம் கூட்டாக உருவாக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ரூ.5722 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்
- மத்தியப் பிரதேசத்தில் ரூ.5722 கோடி மதிப்பிலான மொத்தம் 534 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
- இந்த நிகழ்ச்சிக்கு மத்திய இணையமைச்சர் ஜென்ரல் வி கே சிங், முதலமைச்சர் திரு சிவ்ராஜ் சௌகான், மக்களவை முன்னாள் தலைவரும், பிஜேபி மூத்த தலைவருமான திருமதி சுமித்ரா மகாஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.