இந்தியாவில் வேலையின்மை விகிதம் உயர்வு - இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்
- கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு, வேலையின்மை விகிதம் கடந்த டிசம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது .
- கடந்த டிசம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.9 ஆக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் 7 சதவீதமாக இருந்த எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் 7.9 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணக்கீட்டில் தெரிய வந்துள்ளது.
- இதனால், மீண்டும் வேலையின்மை விகிதம் உயர்ந்து வருகிறது. (கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.86% ஆக இருந்த எண்ணிக்கை, தற்போது 7.91 % ஆக உயர்ந்துள்ளது)
- கடந்த டிசம்பர் மாத கணக்கின் படி, இந்த வேலையின்மை பட்டியலில் 34.1 சதவிகிதத்துடன் ஹரியானா முதல் இடத்தில் உள்ளது. 27.1% பெற்று ராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும், 17.3 % பெற்று ஜார்கண்ட் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
- 1.4 சதவிகிதத்துடன் கர்நாடகா கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 6.9 % பெற்று தமிழ்நாடு 11ஆம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதப் போா் கூடாது - 5 நாடுகள் கூட்டறிக்கை
- அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடையிலும், பிற நாடுகள் மீதும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்பது தலையாய கடமையாகக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
- அணு ஆயுத அச்சுறுத்தலை கவனத்தில் கொள்வது, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது, ஆயுதங்கள் இருப்பை குறைப்பது தொடா்பாக இருதரப்பு, முத்தரப்பு ஒப்பந்தங்களை 5 நாடுகளும் பின்பற்றும். அணு ஆயுதப் போரில் வெற்றிபெற முடியாது. அந்தப் போரில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோக் ராஜினாமா
- வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த சூடான் நாட்டில் ராணுவ தளபதியாக இருந்தவர் ஒமர் அல் - பஷீர்; இவர் 1989ல் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றினார்.
- 30 ஆண்டுகளாக சூடான் அதிபராக அசைக்க முடியாத சர்வாதி காரியாக விளங்கினார். இந்நிலையில் 2019ல் ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியது. இதைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதையடுத்து ராணுவத்தின் ஒத்துழைப்புடன் சூடான் பிரதமராக அப்துல்லா ஹம்டோக் பதவியேற்றார்.
- இந்நிலையில் 2021 அக்டோபரில் மீண்டும் ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியது. இதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை இரும்புக் கரம் கொண்டு ராணுவம் அடக்க முற்பட்டது.
- உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்த ராணுவம் 2021 நவ., 21ல் மீண்டும் அப்துல்லா ஹம்டோக்கை பிரதமர் பதவியில் அமர்த்தியது. இது தொடர்பாக ராணுவத்துக்கும், அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது.
- எனினும் சூடானில் முழுமையான ஜனநாயக அரசு அமைய வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வந்தன. அவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் பதவியை அப்துல்லா ஹம்டோக் ராஜினாமா செய்துள்ளார்.
15 முதல் 18 வயது நபர்களுக்கு தடுப்பூசி - முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
- தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையவர்கள், 33.20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளியில், இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
- தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடைய 33.20 லட்சம் பேரில் 26 லட்சம் பேர் பள்ளிகளில் படிக்கின்றனர்.
- சண்டிகர் பல்கலைக்கழகத்தில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்பனா சாவ்லா ஆராய்ச்சி மையத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஜனவரி 3, 2022 அன்று தொடங்கி வைத்தார்.
- முப்படைகளையும் சேர்ந்த வீரர்களின் குழந்தைகளுக்கான ரூ.10 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.