புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிப்பு
- ஈரோடு மாவட்டம், நம்பியூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்தில், திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர் ஆய்வு நடத்தினர்.
- அப்போது, பண்டைய தமிழர் வீரத்தை விளக்கும் வகையிலான நடுகல் கண்டெடுக்கப்பட்டது. பண்டைய தமிழர்கள், கால்நடைகளை பெரும் செல்வமாக போற்றி பாதுகாத்தனர். மாடுகளை பாதுகாக்க கிராமம் தோறும் வீரர்கள் இருந்தனர்.
- வேட்டையாட வரும் புலியிடம் இருந்து, கால்நடைகளை பாதுகாப்பது இவர்களது கடமையாக இருந்தது. புலிகளுடன் சண்டையிடும்போது, வீரமரணம் எய்தும் வீரர்களுக்கு நடுகல் எழுப்பி, தெய்வமாக வழிபட்டு வந்தனர்.
- நம்பியூர் கோவில் வளாகத்தில், 80 செ.மீ., உயரம், 65 செ.மீ., அகலம் கொண்ட நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவீரர் ஒருவர், வலது கையில் ஓங்கிய வாளுடன், இடது கையில் கேடயம் பிடித்தபடி, புலியுடன் சண்டையிடுவது போல் நடுகல் அமைந்து உள்ளது. எழுத்து பொறிப்பு இல்லாத இந்த நடுகல், 600 ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- புதிதாக காவல் ஆணையம் ஒன்றைத் தற்போது அமைத்திடவும், அந்தக் காவல் ஆணையத்திற்கு மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் திரு.சி.டி. செல்வம் அவர்களைத் தலைவராகவும், திரு.கா. அலாவுதீன், இ.ஆ.ப., (ஓய்வு), முனைவர் திரு.கே.இராதாகிருஷ்ணன், இ.கா.ப., (ஓய்வு), மனநல மருத்துவர் திரு.சி.இராமசுப்பிரமணியம், மேனாள் பேராசிரியர் முனைவர் திருமதி நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும், காவல் துறை (குற்றப்புலனாய்வு) கூடுதல் இயக்குநர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களை உறுப்பினர்-செயலராகவும் நியமனம் செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
- இந்த ஆணையம், காவலர்களின் நலன் மற்றும் காவல்துறையின் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசுக்குத் தனது பரிந்துரைகளை அளிக்கும்.
- காவல்துறையின் செயல்பாடுகளைச் சிறப்பாக மேம்படுத்துவதற்கும், இணையவழிக் குற்றங்களைத் தடுத்திடவும், சேவை வழங்குவதில் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுகுவதற்கும், உரிய நடவடிக்கைகள் மூலமாக காவல்துறையினரின் சேவையை மேலும் வலுவூட்டுவதற்கும், இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் அமைந்திடும்
வட்டிக்கு வட்டி, 6 மாதங்களுக்கு ஊக்கத்தொகை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி அளித்திருந்தது.
- ஆனால், அந்தச் சலுகை காலத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல், ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது.
- உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு ரூ.2 கோடி வரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்தது.
- இந்தநிலையில் குறிப்பிட்ட சில கடன் கணக்குகளின் கீழ் வழங்கப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஊக்கத்தொகையாக 6 மாதங்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குறிப்பிட்ட சில கடன் கணக்குகளின் கீழ் (01.03.2020 முதல் 31.08.2020 வரை) வழங்கப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஈடுகட்ட கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக 6 மாதங்களுக்கு ரூ.973.74 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- திருவனந்தபுரத்தில் வசித்து வரும் எழுத்தாளர் நீல பத்மநாபன் "இலை உதிர்காலம்” என்னும் நாவலுக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
- கடந்த 1970-ஆம் ஆண்டு வெளிவந்த இவரின் "பள்ளிகொண்டபுரம்" என்னும் நாவல் தற்போது ரஷ்ய மொழியில் டாக்டர் லூபா பைச்சினா (Dr. Luba Pichina) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலத்தை 31.03.2022-க்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு நீடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 3 ஆண்டு கால நீடிப்புக்கான மொத்த செலவு சுமார் ரூ.43.68 கோடியாக இருக்கும். இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதால் நாட்டில் உள்ள துப்புரவு தொழிலாளர்களும் மனிதக் கழிவுகளை அகற்றுவோரும் பயன்பெறுவார்கள். 31.12.2021 கணக்கெடுப்பின்படி மனிதக் கழிவுகளை அகற்றுவோர் எண்ணிக்கை 88,098-ஆக இருந்தது.
- இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையில் ரூ 1500 கோடி முதலீட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- சுமார் 10,200 பணி-வருடங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், வருடத்திற்கு சுமார் 7.49 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கவும் இந்த முதலீடு உதவும்.
- இந்திய அரசு, கூடுதலாக ரூ 1500 கோடி முதலீடு செய்வதன் காரணமாக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை கீழ்காணும் பலன்களை பெறும்:
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ 12000 கோடி கடன் வழங்க முடியும், இதன் மூலம் 3500-4000 மெகாவாட் கூடுதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனுக்கான கடன் தேவை நிறைவு செய்யப்படும்.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்திய அரசின் இலக்குகளை எட்டுவதற்கு பங்காற்றும் வகையில் அத்துறையின் நிகர மதிப்பை அதிகரித்து கூடுதல் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திட்டங்களுக்கு கூடுதல் நிதிவசதி ஏற்படும்.
- கடன் வழங்கும் மற்றும் கடன் பெறும் செயல்பாடுகளுக்கு வசதியளிக்கும் வகையில், மூலதனத்தையும் ஆபத்தையும் சரிபார்த்து மதிப்பீடு செய்த சொத்து விகிதாச்சாரம் மேம்படும்.
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மினி ரத்னா (வகை-1) நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கெனத் தனியாக , வங்கி அல்லாத நிதி நிறுவனமாக, 1987-ல் உருவாக்கப்பட்டது.
- 34 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்நுட்ப-வணிக நிபுணத்துவம் கொண்ட இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களூக்கான நிதியளிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிபொருட்களுக்கான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதென, இந்தியா - டென்மார்க் நாடுகளின் அறிவியல் & தொழில்நுட்ப கூட்டுக் குழுவின் கூட்டத்தில் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
- காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய அளவிலான முக்கியமான முன்னுரிமை திட்டங்கள் மற்றும் இருநாடுகளிலும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, குறிப்பாக பசுமை ஆராய்ச்சி, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் பசுமைத் திட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
- ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை ஒரு இயக்கமாக இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் மேற்கொள்ள இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
- இரு நாடுளின் பிரதமர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பசுமை செயல்திட்ட ஒத்துழைப்புக்கான, 2020-25 செயல் திட்டத்தில் ஒப்புக்கொண்டபடி, பருவநிலை மாற்றம், பசுமைத் திட்டங்களுக்கு மாற்றம், எரிசக்தி, தண்ணீர், கழிவு, உணவு போன்ற துறைகளில் கூட்டாக செயல்பட வலியுறுத்தப்பட்டது.
- இந்தக் கூட்டத்திற்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவு ஆலோசகர் மற்றும் தலைவர் திரு எஸ் கே வர்ஷ்னீ மற்றும் டென்மார்க் அரசின் உயர்கல்வி மற்றும் அறிவியல் முகமையின் துணை இயக்குநர் டாக்டர் ஸ்டைன் ஜோர்ஜென் சென் ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர்.