தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் குதிர் கண்டுபிடிப்பு
- கொற்கையில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு வாய்ந்த துறைமுகம் இருந்துள்ளது. பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியான இங்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதியும், இங்கிருந்து ஏற்றுமதியும் நடந்துள்ளது.
- 1966-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் நாகசாமி குழுவினர் இங்கு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
- இந்நிலையில், சுமார் 52 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் குழாய் அமைப்பு, செங்கல் கட்டுமான அமைப்பு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பழங்கால கட்டுமானங்கள் மற்றும் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
- தற்போது சுமார் 5 அடி உயரமுள்ள குதிர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அலுவலர்கள் கயிறு கட்டி மேலே எடுத்தனர். நெல் உள்ளிட்ட தானியங்களை சேமித்து வைக்க இக்குதிர் பயன்படுத்தப்பட்டதா என தொல்லியல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்
- கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக பஞ்சாப் காங்கிரஸில் அவருக்கும் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டுவந்த நிலையில் கட்சி மேலிட அறிவுரையின்படி அவர் இன்று ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.
- இதற்கிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சிலம்பம் இணைப்பு
- தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும், ஒன்றிய அரசின் 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சிலம்ப விளையாட்டை சேர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி ஒன்றிய அரசிடம் கோரப்பட்டது.
- அதை ஏற்று, சிலம்பம் விளையாட்டினை ஒன்றிய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து 'புதிய கேலோ இந்தியா' திட்டத்தின் கீழான 'விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்' என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளது.
- தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.