உலகத் தரம் மிக்க புலிகள் காப்பகமாக ஆனைமலை, முதுமலை காப்பகங்களுக்கு அங்கீகாரம்
- கோவை மாவட்டம் ஆனைமலை மற்றும் நீலகிரி முதுமலை புலிகள் காப்பகங்களை உலகத் தரமிக்கபுலிகள் காப்பகமாக அங்கீகரித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
- இந்தியாவில் 20 மாநிலங்களில் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றில் உலக அளவிலான புலிகள் பாதுகாப்பு தரநிலைகளை உறுதிப்படுத்துதல் ஆய்வினை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2020-ம் ஆண்டு செயல்படுத்தியது.
- அதில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம், புலிகள் பாதுகாப்புக்கான மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் ஈடுபாடு ஆகியன கணக்கிடப்பட்டன.
- புலிகள் வாழும் 20 மாநிலங்களில் உள்ள 28 புலிகள் காப்பகங்கள் தேர்வு செய்யப்பட்டு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் 14 புலிகள் காப்பகங்களுக்கு புலிகள் பாதுகாப்பு தரநிலையை உறுதிப்படுத்தி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் ஹாக்கி - இந்திய மகளிர் அணி முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி
- டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஹாக்கிப் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
- கடந்த 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய அணி அறிமுகமாகியது. அப்போது மகளிர் பிரிவில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றன.
- ரவுண்ட் ராபின்முறையில் நடந்த அந்த போட்டியில் இந்திய அணி 4-வது இடத்தைப் பிடித்தது. அதன்பின் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணி லீக் சுற்றோடு வெளியேறிவிட்ட நிலையில் ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
இந்திய கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என்.கோர்மேட் பொறுப்பேற்பு
- இந்திய கடற்படையில் 1984-ல் இணைந்த வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட், கடற்படையின் பல்வேறு போர்க் கப்பல்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.
- ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா, நீர்மூழ்கி மீட்புக் கப்பல் ஐஎன்எஸ் நிரீக்ஷக், கண்ணிவெடிகளை கண்டறியும் ஐஎன்எஸ் ஆலப்புழா ஆகிய கப்பல்களில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். இந்நிலையில் கடற்படை துணைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக தலைமைப் பொறுப்பை ஏற்கும் இந்தியா
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரல்லாத நாடு, மாதம் ஒருமுறை கவுன்சிலுக்கு தலைமைப் பொறுப்பேற்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரல்லாத நாடாக 2 ஆண்டுகளுக்கு இந்தியா இடம்பெற்றிருப்பதற்கான காலம் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கியது.
- இந்நிலையில் முதல்முறையாக ஆகஸ்ட் 2-ஆம்தேதி முதல், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக தலைமைப்பொறுப்பை வகிக்கும் இந்தியா, கடல்பகுதி பாதுகாப்பு, அமைதி, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய முக்கிய அம்சங்களை முன்னெடுத்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,828 கோடி ரூபாய் நிதி மாநிலங்களுக்கு விடுவிப்பு
- மாநிலங்களுக்கு உதவும் வகையில் கொரோனா அவசரகால நிதி தொகுப்பின்கீழ் ஒதுக்கப்பட்ட, 12 ஆயிரத்து, 185 கோடி ரூபாயில் இருந்து முதற்கட்டமாக, 15 சதவீதம் தொகை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்காக விடுவிக்கப்படுகிறது.
- இதன்படி, 1,827.80 கோடி ரூபாய் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த நிதி நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
சீரம் நிறுவன தலைவருக்கு 'லோகமானிய திலக்' தேசிய விருது
- கரோனா பேரிடரில் சைரஸ் பூனாவாலாவின் பணி போற்றுதலுக்குரியது. அவரின் அயராத அரும்பணியால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியானது பல்லாயிரக்காணக்கான உயிா்களை காப்பாற்ற பெரிதும் உதவியது.
- குறைந்த விலையில் பல்வேறு வகையான தடுப்பூசிகளை தயாரிப்பதில் சைரஸ் பூனாவாலா முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறாா். எனவே, அவரது சேவையைப் போற்றும் விதமாக 2021-ஆம் ஆண்டுக்கான லோகமான்ய திலக் தேசிய விருதை சைரஸ் பூனாவாலாவுக்கு வழங்கி கெளரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத சுதந்திர தூதராக இந்தியர் ரஷாத் ஹூசைன் நியமனம்
- அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றபிறகு, இந்திய வம்சாவளியினர் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை பெற்று வருகிறார்கள்.
- இதன் அடுத்த கட்டமாக இந்திய-அமெரிக்க வழக்கறிஞரான ரஷாத் ஹூசைனை சர்வதேச மத சுதந்திரத்துக்கான தூதராக நியமிக்க பைடன் பரிந்துரைத்துள்ளார்.
- 'மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை' என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 41 வயதான ஹுசைன் தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டாண்மை மற்றும் உலகளாவிய ஈடுபாட்டிற்கான இயக்குநராக உள்ளார்.
வேலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய அரசின் 'காயகல்ப்' விருது
- நாடு முழுவதும் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் மூலமாக தூய்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகத்துடன் செயல்படும் அரசு மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆண்டு தோறும் 'காயகல்ப்' விருதுடன் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
- இந்நிலையில்,; 2020-21 ஆம் நிதியாண்டில் சிறப்பாக செயல்படும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- அதன்படி, 2020-21ம் ஆண்டில் தமிழக அளவில் சிறப்பான பராமரிப்புக்காக வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 'காயகல்ப்' விருதுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.