ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்ட 28 புதிய அறிவிப்புகள்
- 5,780 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஊரக சாலைகளை மேம்படுத்துதல், பலப்படுத்துதல் மற்றும் 121 பாலங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் 2,097 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- நிலத்தடி நீரை அதிகரிக்கவும், நீர் பாசன தேவைகளை நிறைவேற்றவும் 1149 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள், உறிஞ்சு குழிகள், கிணறுகள் மற்றும் இதர பசுமையாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள பழைய சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள், குடிநீர் கட்டமைப்பு, தெருவிளக்குகள் போன்றவைகளை சீரமைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 12,565 நூலகங்கள் படிப்படியாக புதுப்பிக்கப்படும்.
- 916.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் சொத்துக்களை உருவாக்கி, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
- சிறப்பான சேவைகள் வழங்குவதற்காக 550 கிராம ஊராட்சி அலுவலக கட்டடங்கள், 15 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் மற்றும் 500 அங்கன்வாடி மைய கட்டடங்கள் 233.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
- திட்ட கண்காணிப்பு பணியை வலுப்படுத்துவதற்காக மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு 68 புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
- ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
- சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது தோற்றுவிக்கப்பட்டு, மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் 37 கிராம ஊராட்சிகளுக்கு தலா 7.5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், முன்மாதிரி கிராம விருது மற்றும் கேடயம் வழங்கப்படும். மேலும், மாநில அளவில் சிறப்பாக செயல்படும் 3 முன்மாதிரி கிராமங்களுக்கு விருதுகள் வழங்கி, அதற்கான கேடயமும் தலா 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
- பாதுகாக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்யும் பொருட்டு, நீரின் தரத்தை பரிசோதிப்பதற்காக ரூபாய் 10.92 கோடி மதிப்பீட்டில் 12,525 ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 62,625 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
- ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள கணக்குகள் பதிவர்கள் மற்றும் படிவங்கள் எளிமைப்படுத்தப்பட்டு முறைப்படுத்தப்படும்.
- ஊரகப் பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு 84.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாழ்வாதார வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விவரங்கள் பெறுவதற்கு பிரத்யேக தொலைபேசி உதவி சேவை மையம் துவக்கப்படும்.
- சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் வழங்கப்படும்.
- சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு விற்பனை மையம் அமைத்தல், தனி முத்திரை பெறுதல் மற்றும் மின்னணு வர்த்தக இணையதளம் உருவாக்குதல் போன்றவற்றிற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழிவகை செய்யப்படும்.
- ஊரக தொழில்களை மேம்படுத்த, மகளிர் தொழில் முனைவோருக்கு உரிய சேவைகள் வழங்கும் 30 ஓரிட சேவை மையங்கள் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- 31,900 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொகுதி அடிப்படையில் மதிப்புக்கூட்டல் மேற்கொள்ள 1.86 கோடி ரூபாய் மதிப்பில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
- கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 20 ஆயிரம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு அமைத்திடவும், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான பயிற்சிகள் அளிக்கவும் 87.80 கோடி ரூபாய் வழங்கப்படும்.
- இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர் வன்மத்தை பேணிக் காக்கவும், உள்ளூர் சுய உதவிக்குழு பெண்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
- உள்ளூர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு மிக முக்கிய தேவையாக கருதப்படும் பொது உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட வாழ்வாதார பூங்காக்கள் உருவாக்கப்படும்.
- மகளிர் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்தினை உறுதி செய்ய இரண்டு லட்சம் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- 5,000 மகளிர் விவசாயிகளை உள்ளடக்கிய 50 இயற்கை பண்ணை தொகுப்புகள் உருவாக்கப்படும்.
- கிராமப்புறத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளாண் தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு போன்ற இணை தொழில்கள் 37 கோடி ரூபாய் மானியத்தில் 185 பண்ணை தொகுப்புகளாக ஒருங்கிணைக்கப்படும்.
- 1,860 தனிநபர் மற்றும் 2,717 குறு தொழில் நிறுவனங்களை உருவாக்கவும், ஊரகத் தொழில் முனைவு ஏற்படுத்தவும் 51.25 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
- மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கும் உற்பத்தியாளர்கள், குழுக்களின் மூலம் உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்க 100 சான்று பெற்ற விதை உற்பத்தி தொகுப்புகளுக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கி ஊக்குவிக்கப்படும்.
- மகளிர் சுய உதவிக்குழுக்களின் நுண் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பங்கு மூலதனம் மூலம் செம்மைப்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், 36 சிறு தொழில் தொகுப்புகளுக்கு 10.80 கோடி ரூபாய் நிதி மானியம் ஏற்படுத்தப்படும்.
- சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை வலுப்படுத்த 188 கோடி ரூபாய் சுழல் நிதி மற்றும் சமுதாய நிதி வழங்கப்படும்.
- கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு உயர்த்தி வழங்கப்படும்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சாதனம் - பாகிஸ்தான் வெற்றிகர சோதனை
- 'எதிரி நாட்டின் பகுதிகளை ஃபதே-1 மூலம் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும். தரையிலிருந்து செலுத்தப்பட்டு தரையில் உள்ள இலக்கை இதன் ஏவுகணைகள் தாக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஃபதே-1 ஏவுகணை செலுத்தும் தளவாடத்தை கடந்த ஜனவரியில் முதல்முறையாக பாகிஸ்தான் ராணுவம் பரிசோதித்தது. 'ஃபதே-1 செலுத்தும் ஏவுகணைகள் 140 கி.மீ. தொலைவு சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டவை
- ஃபதே-1 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டைத் தொடா்ந்து, ராணுவத்தினருக்கும் விஞ்ஞானிகளுக்கும் அதிபா் ஆரிஃப் ஆல்வி, பிரதமா் இம்ரான்கான், ராணுவ தலைமை தளபதி கமா் ஜாவேத் பஜ்வா ஆகியோா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
கோலாகலமாக தொடங்கிய பாராலிம்பிக் போட்டி - இந்திய அணிக்கு தேக்சந்த் தலைமை தாங்கினார்
- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் உற்சாகமாக தொடங்கியுள்ளது.
- 164 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள போட்டியில், இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு தடகளம், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட ஒன்பது வகையான விளையாட்டுகளில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
- பாரா ஒலிம்பிக் போட்டியில் தகுதிச்சுற்றுகள் ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27-ஆம் தேதிகளிலும், காலிறுதி மற்றும் இறுதிப்போட்டி முறையே ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
- டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்த்து இருந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால், மாரியப்பனுக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் தேக்சந்த் தேசிய கொடி ஏந்தி சென்றார். மாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள்
- தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து மேலும் 6 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று பேரவையில் நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவித்தாா்.
- 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகா்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021-ஆம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள்தொகையில் நகா்ப்புற மக்கள்தொகை சுமாா் 53 சதவீதமாக உயா்ந்துள்ளது எனக் கருதப்படுகிறது.
- தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூா் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூா், கடலூா் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளா்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயா்த்தப்படும்.
- திருச்சி, நாகா்கோவில், தஞ்சாவூா், ஓசூா் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னாா்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளா்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும்.
- பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூா், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூா், சோளிங்கா், இடங்கனசாலை, தாரமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூா், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூா், கோட்டக்குப்பம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூா், கொல்லன்கோடு, முசிறி, லால்குடி ஆகிய பேரூராட்சிகள் அதன் அருகே வளா்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும். மேலும், புஞ்சை புகளூா் மற்றும் புகளூா் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூா் நகராட்சியாக அமைக்கப்படும்.
இந்தியாவின் கரோனா தடுப்பூசி "ஹக்கோ19' - முதல்கட்ட பரிசோதனையில் வெற்றி
- கரோனா நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்ற, பாரம்பரிய முறையில் உருவான "ஹக்கோ19' (ஏஎஇஞ19) தடுப்பூசியின் முதல்கட்ட பரிசோதனையை மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஏற்றுக் கொண்டுள்ளது.
- மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை தன்னுடைய உயிரி தொழில்நுட்ப தொழிலக ஆய்வு உதவி கவுன்சில் என்கிற லாப நோக்கமற்ற பொதுத் துறை நிறுவனத்தை அமைத்துள்ளது.
- இந்த நிறுவனம் கரோனா பாதுகாப்புக்கான இயக்கத்தில் புணேவை சேர்ந்த ஜென்னோவா பயோ ஃபார்மசூட்டிகல்ஸ் என்கிற தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து, தடுப்பூசி தயாரிப்பு ஆய்வுகளை மேற்கொண்டது. இதற்கு மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை நிதி உதவியும் அளித்தது.
- இந்த "ஹக்கோ19' தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளைவிட வேறுபட்டது. "எம்ஆர்என்ஏ' அடிப்படையில் இந்திய பாரம்பரிய முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தூண்டும்விதமான தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆய்வை மேற்கொண்டு, முதல்கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
- இதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஹெச்டிடி பயோ கார்ப்பரேஷன் நிறுவனமும் உதவ முன்வந்துள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு "ஹக்கோ19' எனப் பெயரிடப்பட்டுள்ளது.