Type Here to Get Search Results !

டிஜிட்டல் இந்தியா திட்டம் - ஒரு பார்வை / DIGITAL INDIA PROJECT - AN OVERVIEW

 

  • மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பெறவேண்டிய பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை எளிதாக டிஜிட்டல் முறையில் பெறுவதில் தொடங்கி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மற்றும் நில உரிமை ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது போன்ற நோக்கங்களில் செயல்பட்டு வருகிறது 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்.
  • டிஜிட்டல் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது மற்றும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது போன்ற பல நடவடிக்கைகள் முன்பே எடுக்கப்பட்டிருந்தாலும், இந்தத் திட்டத்தின் மூலம் தொலைதூர கிராமங்களுக்கும் இணையதள வசதிகளை கொண்டு செல்வது மற்றும் விவசாயிகள் கூட பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் வசதிகள் உருவாக்குவது போன்ற முயற்சிகளை முன்னெடுத்தது 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்.
  • சாமானிய மக்களுக்கு 'ஜன் தன்' வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர்களுக்கு ஏடிஎம் மூலம் பணத்தை பெரும் வசதி ஏற்படுத்தியது போன்ற நடவடிக்கைகள் பல சர்ச்சைகளை உருவாக்கின. 
  • பாமர மக்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு போன்ற வசதிகளை பயன்படுத்துவார்களா என்ற கேள்வி எழுந்தது. அப்படிப் பயன்படுத்தினால், அதன்மூலம் அவர்களுடைய பணம் மோசடியாக களவாடப்பட வாய்ப்பு உள்ளது என்றும், வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு வைக்காவிட்டால் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது.
  • அதேநேரத்தில் 'ஊரக வேலைவாய்ப்பு திட்டம்' போன்ற நலத் திட்டங்களுக்கான நிதி நேரடியாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குக்கு சென்றால், ஊழல் தவிர்க்கப்படும் என பதில் வாதம் முன்வைக்கப்பட்டது. நவீன முறைகளில் பாமர மக்கள் ஏமாற்றப்பட்டு அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் களவாடப்படும் நிகழ்வுகள் ஒருபுறம் நடைபெற்றாலும், அரசு மானியங்கள் நேரடியாக சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்குகளுக்கு செல்வதன் மூலம் இடைத்தரகர்களின் ஊழல் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.
  • விவசாயிகளுக்கு வருடத்துக்கு மூன்று தவணைகளாக அளிக்கப்படும் 6000 ரூபாய் மானியம் இந்த முறையிலேயே நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வங்கிக் கணக்குடன் பயனாளிகளுக்கு காப்பீடு வசதி மற்றும் சிறுசேமிப்பு வசதிகள் கிடைப்பதும் சிறப்பு. படிப்பறிவு குறைவாக உள்ள தொலைதூர கிராமங்களை சேர்ந்தவர்கள் ஏடிஎம் வசதிகளை பயன்படுத்தத் தெரியாத நிலையில் இன்னமும் உள்ளார்கள் என்பதே இந்த வசதியின் பாதகமாக உள்ளது.
  • சமையல் எரிவாயு உருளைகளுக்கான மானியமும் நேரடியாக வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. இந்த மானியம் தற்போது அளிக்கப்படுவதில்லை. கடந்த ஒரு வருடமாக அதிக தாமதம் ஏற்படுகிறது. இதனால் பயனாளிகள் முழு விலை கொடுத்து சமையல் எரிவாயு உருளைகளை வாங்கி பின்னர் மானியம் தங்கள் வங்கிக் கணக்குகளில் வந்து சேர்வதற்காக காத்திருக்கிறார்கள் என்பது 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் பாதகங்களில் ஒன்றாகவே உள்ளது.
  • சமீபத்தில் வங்கிகள் ஏடிஎம் வசதிகளை நான்கு முறைக்கு அதிகமாக ஒரு மாதத்தில் பயன்படுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளும் ஏழை மக்களுக்கு கவலை உண்டாக்குவதாக அமைந்துள்ளன.
  • நெடுஞ்சாலைகளில் வாகனங்களை பயன்படுத்தும்போது செலுத்தப்படும் 'டோல்' கட்டணம் ஃபாஸ்டாக் முறையில் வசூலிக்கப்படுகிறது. ரொக்கப்பணம் ஏற்கப்படாது என்றும், ஃபாஸ்டாக் முறையை பயன்படுத்தாதவர்கள் 100 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது. இதனால் வாகனங்களை நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் வாகனங்களில் ஃபாஸ்டாக் வசதியை பொருத்தி, அந்த கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறித்தும் புகார்கள் எழுகின்றன. எப்போதோ ஒருமுறை நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோர் எதற்காக தங்கள் பணத்தை முடக்கிவைக்க வேண்டும் என்று கேள்வி எழும் நேரத்திலே, இதனால் டோல்கேட் வசதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் தவிர்க்கப்படுகிறது என்றும், சமயம் வீணாகாமல் இருக்கிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • ரயில் பயணச் சீட்டுகள் பெரும்பாலும் தற்போது டிஜிட்டல் முறையிலேயே பயணிகளின் ஸ்மார்ட்போனுக்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன. இதனால் ரயில் நிலையங்களுக்கு சென்று வரிசையில் நின்று முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
  • அதுபோலவே சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் எப்போதும் படிப்பதற்கு வசதியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, புத்தகங்கள் கைவசம் இல்லாவிட்டாலும் இணையதள வசதி இருந்தால் மாணவர்கள் படிப்புக்கு இடையூறு இருக்காது என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
  • நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது மூலம் நிலம் யாருக்கு சொந்தம் என்று அடிக்கடி ஏற்படும் தகராறுகள் தவிர்க்கப்படுகின்றன. போலி ஆவணங்களை தயாரித்து, நில அபகரிப்பில் ஈடுபடுபவர்களை இந்த வசதி தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அனைத்து மாநிலங்களிலும் இந்த வசதி இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதே நிதர்சனம்.
  • விவசாயிகளை பொறுத்தவரை, அவர்களுக்கு தேவையான பல்வேறு தகவல்கள் தற்போது டிஜிட்டல் முறையில் அளிக்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன் வசதி மூலம் சுலபமாக பருவநிலை தொடர்பான தகவல்கள் போன்றவை விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகின்றன. எந்தெந்த பயிர்களுக்கு எந்த மாதிரியான உரங்களை பயன்படுத்துவது தகுந்ததாக இருக்கும் போன்ற விவரங்களும் டிஜிட்டல் முறையில் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் இந்த வசதி அமைந்துள்ளது. அதுபோலவே பயிர்களுக்கு நியாயமான விலை என்ன என்பதை விவசாயிகள் அறுவடை காலத்தில் தெரிந்து கொள்வதற்கான வசதியும் டிஜிட்டல் முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்தப் பயிருக்கு எந்த மாநிலத்தில் அதிக தேவை உள்ளது என்பதும் வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்புகொண்டு விற்பனை செய்யலாம் போன்றவை சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ள டிஜிட்டல் வசதிகள் ஆகும்.
  • இப்படி சாமானிய மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவிட் பெருந்தொற்று காலத்திலேயே டிஜிட்டல் வசதிகள் அதிக பயனளிக்கும் வகையில் அமைந்தன. ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் மூலமாக தொற்று பரவும் என மக்கள் அஞ்சிய நிலையில், அலைபேசி மூலம் மளிகைகடை மற்றும் பால் கடை போன்ற மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்தது. அலைபேசி மூலம் காய்கறி பணம் செலுத்தியது போன்ற அனுபவங்கள் பெருந்தொற்று காலத்தில் மக்கள் டிஜிட்டல் ஆற்றலை நேரடியாக உணர வாய்ப்பளித்தது.
  • அதுமட்டும் அல்லாமல், பொது முடக்க காலத்தில் ஈ-பாஸ் பெறுவது போன்ற நடவடிக்கைகளுக்கும் டிஜிட்டல் வசதிகள் உறுதுணையாக இருந்தன. இப்போதுகூட கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ள டிஜிட்டல் முறையில் 'கோவின்' இணையதளத்தில் பதிவு செய்து மக்கள் டிஜிட்டல் தாக்கத்தின் பலனை உணர்கிறார்கள். "ஆரோக்கிய சேது" உள்ளிட்ட செயலிகளும் டிஜிட்டல் தொழில்நுட்ப தாக்கத்தின் உதாரணங்களாக உள்ளன. பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் எந்த மருத்துவமனைகளிலேயே கிடைக்கும் என்பது கூட டிஜிட்டல் முறையில் இணையதளம் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
  • இப்படி பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் சக்தி மக்களுக்கு உறுதுணையாக இருந்தாலும், அன்றாடம் மக்கள் நாடும் பிறப்புச் சான்றிதழ் பெறுவது போன்ற வசதிகள் 'டிஜிட்டல் இந்தியா' எப்படி மக்களின் நேரம் வீணாகாமல் தடுக்கிறது என்பதற்கு நாடு முழுவதும் காணப்படும் உதாரணமாக உள்ளன. ரேஷன் கடை தொடங்கி மெட்ரோ ரயில் சேவை வரை மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் கார்டு போன்ற வசதிகள் டிஜிட்டல் தாக்கம் மூலம் மேலும் எளிமை பெறும் என்ற நம்பிக்கை உண்டாக்குகின்றன. வரும் காலங்களில் "ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு" போன்ற திட்டங்கள் அமலுக்கு வந்தால் அதன் முதுகெலும்பாக டிஜிட்டல் சக்தி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  • தொழில்நுட்பங்கள் விரைவாக முன்னேறி வருவதால் இனி டிஜிட்டல் பாதையில் இந்தியா பின்னோக்கிப் போகாது என்று நம்பலாம். மக்களின் கையில் உள்ள அலைபேசி பல்வேறு சேவைகளை பெறுவதற்கான மையமாக மாறிவருவது 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் தாக்கத்துக்கு சான்றாக உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel