மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
- சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற நுகர்வோர் சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- இந்த மின் நுகர்வோர் மையம் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும். நுகர்வோரின் குறைகளைப் பெறுவதற்காக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
- பொதுமக்கள் அளிக்கும் புகார்களை பெற்று, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மின்விநியோக அலுவலகங்களுக்கு தெரிவித்து, குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
- இதன் மூலம் ஒருங்கிணைந்த முறையில் புகார்களுக்குத் தீர்வு காணப்படும். மின் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
- 1912 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதில் குறைபாடுகள் இருப்பதால் இந்த புதியஎண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நுகர்வோர் 1912 எண்ணை தொடர்பு கொண்டால், அந்த அழைப்பு புதிய எண்ணுக்கு மாற்றம் செய்யப்படும்
ரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி தமிழகத்துக்கு தருகிறது 'நபார்டு'
- நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், 3,000 கோடி ரூபாய் வரை உதவி வழங்குவது குறித்து விவாதித்தார். கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கு, நிதி உதவிகளை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
- நடப்பு நிதியாண்டில், தமிழகத்திற்கு நபார்டு வங்கி உதவி, 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டு 27 ஆயிரத்து, 40 கோடி ரூபாயாக இருந்தது.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் ஊரக பகுதிகளில், 'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற லட்சியத்தின் அடிப்படையில், நபார்டு வங்கிக்கும், எஸ்.பி.ஐ., வங்கிக்கும் இடையே, சிந்தலா முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் செல்வராஜ், எஸ்.பி.ஐ., தமிழக தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சுடுமண் குழாயின் இணைப்பு கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
- கீழடி தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகள் என்பதால், தண்ணீரை கடத்த சுடுமண் இணைப்பு குழாய்களை பயன்படுத்தியுள்ளனர். தற்போது கணேசன் என்பவரது நிலத்தில் நடந்த அகழாய்வின் போது இணைப்பு குழாயின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இங்கும் நீளமான இணைப்பு குழாய் இருந்திருக்க வாய்ப்புள்ளது. காலப்போக்கில் சிதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே கீழடியில் மேலும் இணைப்பு குழாய்கள் உள்ளனவா என ஆய்வு பணிகள் தொடர்கின்றன.
தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த சீனா
- கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
- கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் உலகம் முழுவதும் பல விதமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சீனாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- கடந்த மாதம் 50 கோடியாக இருந்த தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை அடுத்த ஒரு மாதத்திற்கு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்நிலையில், இதுவரை நாட்டில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.