விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து தயாரித்த ஃபால்கன்-9 ராக்கெட், புளோரிடாவின் கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
- இந்த ராக்கெட்டில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், நாசா விஞ்ஞானிகள் இரண்டு பேர், ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் என 4 விண்வெளி வீரர்கள் சென்றனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று இவர்கள், தங்களது பணியை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்வெளிக்குச் சென்ற வீரர்கள் தங்களது ஆய்வை முடித்த பின்னர், அவர்கள் சென்ற அதே ராக்கெட்டில் உள்ள கேப்சூலில் பூமிக்கு திரும்பி வரவுள்ளனர். இது வெற்றிகரமாக அமைந்தால், விண்வெளிப்பயண வரலாற்றில் புதிய சாதனையாக இருக்கும் என கூறப்படுகிறது.
நாட்டில் உள்ள 80 கோடி ஏழைகளுக்கு மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசம்
- கரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கும் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.26 ஆயிரம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்த பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
- இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவல் தீவிரமடைந்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து பதிவாகி வருகிறது.
- வைரஸ் பரவலை தடுப்பதற்காக சில மாநிலங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும், பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தீவிர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பல்வேறு மாநிலங்கள் பரிசீலித்து வருகின்றன.
'இந்தியா ரேட்டிங்ஸ்' கணிப்பு வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும்
- நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 10.1 சதவீதமாக இருக்கும் என, திருத்தி அறிவித்து உள்ளது, இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம். இந்நிறுவனம், இதற்கு முன், வளர்ச்சி, 10.4 சதவீதமாக இருக்கும் என, கணித்திருந்தது.
- அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் குறைந்த வேகத்தில் போடப்படும் தடுப்பூசி ஆகியவை வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள் ஒரே சமயத்தில் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது என்றும், இரண்டாவது அலை, மே மாதத்தின் நடுப்பகுதியில் குறைய துவங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
- இந்த மாத துவக்கத்தில், ரிசர்வ் வங்கி, வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. ஆனாலும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், அதிகரித்து வரும் நோய் தொற்று, பொருளாதார மீட்சிக்கு தடையாக இருக்கக்கூடும்.
கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் 'விராஃபின்' மருந்தை பயன்படுத்த ஒப்புதல்
- ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் 'விராஃபின்', பெகிலேட்டட் இன்டர்ஃபெரான் ஆல்பா -2 பி, மருந்துகளை மிதமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் அளித்துள்ளது.
- முன்னதாக, கொரொனா நோய் தொற்று தடுக்கும் வகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- இதில் கோவிஷீல்டை இங்கிலாந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் சீரம் நிறுவனம் அதன் விலையை அரசுக்கு 400 ரூபாயாகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாயாகவும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 பதக்கங்கள் வென்று சாதனை
- போலாந்து நாட்டின் கீல்ஸ் மாநகரில் நடப்பாண்டிற்கான AIBA யூத் மென் அண்டு விமென் வேர்ல்டு பாக்ஸிங் சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியினர் 5 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில் ரஷ்யா, பிரான்ஸ் போன்ற அணிகளுடன் மோதிய இந்திய குத்துச்சண்டை பெண்கள் அணியினர் 7 தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தினர்.
- அதில் கீதிகா (48 கிலோ), நோரம் பேபிரோஜிசனா சானு (51 கிலோ), பூனம் (57 கிலோ), விங்கா (60 கிலோ), அருந்ததி (69 கிலோ), சனமச்சா சானு (75 கிலோ), மற்றும் அல்ஃபியா பதன் (+81 கிலோ) உள்ளிட்ட வீராங்கனைகள் வெவ்வேறு எடை பிரிவின் கீழ் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளனர்.