தமிழக வீராங்கனை தனலட்சுமி தேசிய தடகளப் போட்டியில் சாதனை
- கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கப் சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியில், தேசிய சாதனை படைத்த வீரர் டூட்டி சந்த்தை முந்தி, முதலிடம் பிடித்து சாதித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை எஸ்.தனலட்சுமி.
- திருச்சியைச் சேர்ந்த 22 வயதான தனலட்சுமி, ஒடிசாவின் டூட்டியை விட (11.58) குறைந்த விநாடிகளில் (11.39) ஓடி என்ஐஎஸ் (NIS) வளாகத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, `அதிவேகப் பெண்மணி' என்ற பெருமை பெற்றுள்ளார்.
- மற்றொரு தமிழக ஓட்டப்பந்தய வீராங்கனையான அர்ச்சனா சுசீந்திரன் 11.76 விநாடிகளில் ஓடி மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
வங்கதேசத்தில் சுதந்திர தின பொன் விழா கொண்டாட்டம் தொடக்கம்
- வங்கதேசத்தில் சுதந்திர தின பொன் விழா, "வங்கபந்து' ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாட்டம் புதன்கிழமை தொடங்கியது.
- பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கேதசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும்வகையில் பொன் விழா, தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த தின நூற்றாண்டு விழா ஆகியவை 10 நாள்கள் கொண்டாடப்படவுள்ளன. இக்கொண்டாட்டம் புதன்கிழமை தொடங்கியது.
- இதில், பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி டாக்காவுக்கு புதன்கிழமை வந்தார். அவரை வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது வரவேற்றார்.
- டாக்காவின் புறநகரில் தேசிய நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்துக்கு இப்ராஹிம் முகமது சோலி சென்று மரியாதை செலுத்தினார்.
- ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மூத்த மகளும் பிரதமருமான ஷேக் ஹசீனா பேசும்போது, சர்வதேச அரங்கில் வங்கதேசத்தை அதிக உயரத்துக்கு கொண்டுசெல்ல அனைவரும் கைகோக்க வேண்டும்.
- நாட்டை அடுத்த தலைமுறைக்குப் பாதுகாப்பானதாகவும், அமைதியானதாகவும் மாற்றுவதற்காக உறுதியேற்போம். பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி, வங்கதேசத்தை பசி மற்றும் வறுமையில்லாத, வளர்ந்த, வளமான தேசமாக உருவாக்க அரசு அயராது உழைத்து வருகிறது என்றார்.
- முன்னதாக, வங்கபந்து நினைவு அருங்காட்சியகத்தில் அதிகாலையில் நடைபெற்ற விழாவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மான் உருவப்படத்துக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பொன்விழாவை முன்னிட்டு, பல்வேறு உலகத் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் விடியோவில் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
- இக்கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபட்ச 2 நாள் பயணமாக மார்ச் 19ஆம் தேதியும், நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி 2 நாள் பயணமாக 22ஆம் தேதியும், பூடான் பிரதமர் லோடே ஷெரிங் 24ஆம் தேதியும் வரவுள்ளனர். இந்தியப் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இம்மாதம் 26ஆம் தேதி வரவுள்ளார்.