தமிழக அரசின் 47-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜீவ் ரஞ்சன்
- தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம் 2019 ஜூலை 1ம் தேதி பதவி ஏற்றார். அவர் கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்தார்.
- இந்த நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் நவம்பர் மாதம் முதல் மேலும் 3 மாதத்திற்கு அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவர் ஓய்வு பெற்றார்.
- இந்தநிலையில் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் ரஞ்சன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், 1985ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். துணை ஆட்சியராக பணியை தொடங்கிய ராஜிவ் ரஞ்சன் மாநில மற்றும் மத்திய அரசுகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
- கடந்த 1995 முதல் 1997 வரை ராஜீவ் ரஞ்சன் திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தமிழக அரசின் நிதி மற்றும் தொழில்துறையில் இணை செயலாளராகவும், பின்னர் தொழில்துறையின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
- தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறையின் முதன்மைச் செயலாளராகவும் பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் ராஜீவ் ரஞ்சன் பணியாற்றியுள்ளார்.
- பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட ராஜீவ் ரஞ்சன் 2018 முதல் 2020 வரை சரக்கு மற்றும் சேவை வரிகள் துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றினார். மத்திய அரசின் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 27ம் தேதி தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.
சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்று தமிழக அணி சாதனை
- 12ஆவது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழகமும் - பரோடா அணியும் இறுதிப் போட்டியில் மோதின.
- தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழக அணி விளையாடியது. டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.
- 121 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியது. 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 123 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது தமிழ்நாடு.
- தமிழக அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 35 ரன்கள், பாபா அபர்ஜித் 29 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் சையத் முஷ்டாக் அலி கோப்பையை தமிழக அணி 2 ஆவது முறையாக கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே 2007இல் தமிழக அணி கோப்பை வென்றது நினைவுக்கூரத்தக்கது.
ஜி.எஸ்.டி., வசூல் ஜனவரியில் ரூ 1.19 லட்சம் கோடியாக சாதனை
- நாடு முழுவதும் கொரோனாவால் கடந்த ஆண்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியா மட்டுமில்லாது உலக பொருளாதாரத்தையே கொரோனா புரட்டிப் போட்டது.
- இந்நிலையில் சாதனை அளவாக இது வரை இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரியில் ஜிஎஸ்டி 1.19 லட்சம் கோடி வசூலானது. இது கடந்த டிசம்பர் மாதம் ரூ 1.15 லட்சம் கோடியாக இருந்தது.
- இம்முறை அதையும் தாண்டி ரூ 1,19,847 கோடியாக சாதனை படைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக ஜி.எஸ்.டி., வசூல் ஒரு லட்சம் கோடியாக இருந்து வந்தது.
- ஜனவரியில் ஜி.எஸ்.டி., வசூல் அதிகரித்திருப்பது நாட்டின் பொருளாதாரம் சீராக செல்வதை குறிககிறது. , மத்திய ஜி.எஸ்.டி., ரூ 21,923 கோடியாக உள்ளது. மாநில ஜிஎஸ்டியின் வருவாய் 29,014 கோடியாக உயர்ந்துள்ளது.
உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் டாய் ட்ஸூ யிங் சாம்பியன்
- பாங்காக்கில் நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினுடன் மோதிய டாய் ட்ஸூ யிங் 14-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடிய அவர் 21-8 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.
- இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால் இழுபறியாக நீடித்த போட்டியில் டாய் ட்ஸூ யிங் 14-21, 21-8, 21-19 என்ற கணக்கில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார்.
- இது உலக டூர் பைனல்சில் அவர் பெறும் 3வது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.