விவசாயிகள் தங்களது பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, 2016 –ம் ஆண்டு ஏப்ரல் 14 –ம் தேதி 21 மண்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை தொடங்கப்பட்டது.
தற்போது இது 14 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 479 மண்டிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஈ-நாம் வலைதளம் தற்போது 8 மொழிகளில் (இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, வங்கமொழி மற்றும் ஒடியா) உள்ளது. 6 மொழிகளில் (இந்தி, ஆங்கிலம், வங்கமொழி, குஜராத்தி, மராத்தி, மற்றும் தெலுங்கு) நேரடி வர்த்தக வசதி கிடைக்கிறது.
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் விவசாயிகள் பங்கு குறிப்பாக இந்த கோவிட்-19 காலத்தில் அளப்பரியது. விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட e-NAM தளத்தில் இந்தியா முழுவதும் 1.67 கோடி விவசாயிகள், 1.45 லட்சம் வர்த்தகர்கள் உள்பட 1.69 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.
e-NAM எனப்படும் தேசிய வேளாண் சந்தை என்னும் வேளாண் பொருட்களுக்கு தற்போது உள்ள சந்தைகளை ஒருங்கிணைக்கும் ஒரு நாடு ஒரே சந்தை திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழகத்தில், 2.15 லட்சம் விவசாயிகள், 2912 வர்த்தகர்கள், 98 விவசாயிகள் உற்பத்தி அமைப்புகள், 33 கமிசன் முகவர்கள் உள்பட 2.19 லட்சம் பேர் இதில் பதிவு செய்து உள்ளனர்.
நோக்கம்
வேளாண் பொருள்களுக்காக ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்குவது என்பதே e-NAM தளத்தின் முக்கிய நோக்கம். தற்போதைய ஒருங்கிணைந்த சந்தைகளின் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வேளாண் சந்தைப்படுத்துதலில் ஒரே சீரான நடைமுறையை உருவாக்க முடியும் என நம்பப்படுகிறது.
எனவே விவசாயிகள் அல்லது வர்த்தகர்கள் http://www enam.gov.in அல்லது கைபேசி செயலி மூலம் e-NAM தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நேரடிச் சந்தை மண்டி பதிவு மூலமும் பதிவு செய்யலாம்.
பாசுமதி அரிசி, கோதுமை, பார்லி, குதிரை தானியம் உள்ளிட்ட 26 உணவுப் பொருட்கள், ஆமணக்கு, பருத்தி, கடுகு, வேம்பு போன்ற 14 எண்ணெய் வித்துக்கள், கொய்யா, மா, பலா, வாழை, ஆப்பிள் திராட்சை போன்ற பழங்கள், தக்காளி, உருளை, வெங்காயம், பூசணி, இஞ்சி போன்ற 50 காய்கறிகள், மிளகு, ஏலக்காய், மஞ்சள் போன்ற 16 மசாலா பொருட்கள் உள்ளட்டவை இதில் அடங்கும். இதன் மூலம் அதிக விற்பனையாளர்கைள அணுகக் கூடிய வாய்ப்பு விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
ஈ-நாம் மொபைல் செயலி
விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கான ஒட்டுமொத்த செயல்பாடுகளும் பயனாளிகளுக்கு உகந்தவையாக அமையும் வகையில் பல்நோக்கு அம்சங்களுடன் செல்போன் செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் சிக்கலான நடைமுறைகளில் ஒன்றான சந்தை நுழைவு நடைமுறையை, மண்டி உரிமையாளர்களே ஈ-நாம் மொபைல் செயலி மூலம் நேரடியாக மேற்கொள்ள முடியும்.
பீம் பணம் செலுத்தும் வசதி
பீம் செயலி மூலம் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் வசதி (யு.பி.ஐ.) ஏற்படுத்தப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கு பணம் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் மற்றும் ஒரு மயில்கல்லாக அமைந்துள்ளது.
இது பொருள்களை கொள்முதல் செய்வோரின் கணக்கிலிருந்து தொகுப்புக் கணக்கிற்கு பணம் பெறுவதற்கான காலத்தையும் குறைப்பதுடன், விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படும் காலத்தையும் குறைக்கும்.
மின்னணு கற்றல் அம்சங்களுடன் புதிய மேம்படுத்தப்பட்ட வலைதளம்
சந்தை நுழைவு அடிப்படையில் மின்னணு தேசிய வேளாண்சந்தைகளின் செயல்பாடு, புதிய தகவல்கள், பயிற்சி அட்டவணை போன்றவற்றுடன் கூடிய புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலாண்மை தகவல் நடைமுறை தொகுப்பு
வர்த்தக நுண்ணறிவு சார்ந்த மேலாண்மை தகவல் நடைமுறை தொகுப்பு, ஒவ்வொரு மண்டியின் பொருள்கள் வருகை மற்றும் வர்த்தகம் குறித்த செயல்பாடுகளை ஆழமாக நோக்க உதவும்.
மண்டி செயலாளர்களுக்கான குறைதீர்ப்பு மேலாண்மை நடைமுறை
இந்த நடைமுறை மண்டி செயலாளர்கள், வலைதளம் / மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப பிரச்சினைகளை எழுப்பவும் இணையதளம் மூலமாகவே குறைதீர்ப்பு நிலையை அறிந்து கொள்ளவும் உதவும்.
விவசாயிகள் புள்ளி விவரங்களுடன் ஒருங்கிணைத்தல்
ஈ-நாம் நடைமுறையினால் மத்திய விவசாயிகள் பற்றிய புள்ளி விவரங்கள் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம், பதிவு நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மண்டிக்குள் நுழைந்தவுடன் விவசாயிகளை எளிதில் அடையாளம் கண்டு அவர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க உதவும்.