வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க 14 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு
- கொரோனா காலத்தில், மாநிலங்களின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, தவணை முறையில் மத்திய அரசு நிதியை விடுவித்து வருகிறது.
- இந்நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட, 14 மாநிலங்களுக்கு ஆறாவது தவணையாக, 6,195 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்துக்கு, 335.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
- இந்த, 14 மாநிலங்களில், அதிகபட்சமாக கேரளாவுக்கு, 1,276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்கும் வகையில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சீனா இடையே 'மினி' பஞ்சசீலம் கொள்கை
- காஷ்மீரின் லடாக் பகுதியில், சமீப காலமாக சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், ஜூனில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டபோது, இந்திய வீரர்கள், அவர்களை தடுத்து நிறுத்தினர்.
- அப்போது சீன வீரர்கள் தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு நடந்தது. இதில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக, பதற்றம் தணிந்தது.
- இந்நிலையில், இம்மாத துவக்கத்தில் சீன ராணுவம், மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதால், எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு இடையே நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன், எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து பேச்சு நடத்தினார்.
- நீண்ட நேரம் நடந்த பேச்சின் முடிவில், எல்லையில் பதற்றத்தை தணிக்க, இரு தரப்புக்கும் இடையே ஐந்து அம்ச திட்டத்தை பின்பற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- தற்போது எல்லையில் நிலவும் சூழல், இரு நாடுகளுக்கும் ஏற்றதாக இல்லை. இதன் காரணமாக, எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு வீரர்களும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்
- எல்லை பகுதியில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை, பெரிய விவகாரமாக்கி சர்ச்சையை ஏற்படுத்தும் சூழலை, இரு தரப்பும் உருவாக்கக் கூடாது
- ஏற்கனவே, இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சின் அடிப்படையில், பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காணும் நடவடிக்கைகளை தொடர வேண்டும்
- இரு நாடுகளுக்கு இடையே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி, எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதற்காக தொடர் பேச்சு நடத்த வேண்டும்
- எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு சூழலுக்கும், இரு நாடுகளும் வாய்ப்பு அளிக்கக் கூடாது.
- புதிய கல்விக் கொள்கை 2020-ஐ முன்னெடுத்துச் செல்லும் உறுதியோடு '21-ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி' என்னும் இரண்டு நாள் மாநாடு நிறைவுற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.
- மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய கல்வி இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, உயர்கல்வி செயலாளர் அமித் காரே மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
- பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் கலந்து கொண்ட விவாதங்கள் இந்த மாநாட்டில் நடைபெற்றன. இதில் பேசியவர்கள், நாட்டை கல்வி மற்றும் இதர துறைகளில் முன்னெடுத்து சொல்வதற்கான திட்டங்கள் புதிய கல்விக் கொள்கை மூலம் வகுக்கப்பட்டுள்ளன என்றும், அதை அனைவரும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
- புதிய உயர்நோக்கங்களை நிறைவு செய்வதாகவும், புதிய இந்தியாவில் புதிய வாய்ப்புகளை அளிப்பதாகவும் தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
- மாநாட்டில் பேசிய பிரதமர், இந்தியாவின் 21வது நூற்றாண்டுக்குப் புதிய திசையைக் காட்டுவதாக தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்று கூறினார். நாட்டின் எதிர்காலத்துக்கு அடித்தளமிடும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
- கடந்த மூன்று தசாப்த காலங்களில் நமது செயல்பாடுகளில் எதுவுமே பழைய நிலையிலேயே இல்லாமல் மாறியுள்ளன என்ற நிலையில், நமது கல்வித் திட்டம் மட்டும் பழைய நடைமுறையிலேயே இருக்கிறது.
- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் கடந்த மே 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- தமிழக தொல்லியல் துறையின் அகழாய்வு கள இயக்குநர் பாஸ்கர், தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆய்வு மாணவர்கள், தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆதிச்சநல்லூரில் 72 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகழாய்வு பணியில் தற்போது மக்கள் வாழ்விடங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தோண்டப்பட்ட குழியில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட வடிகால் போலவே இந்த அமைப்பும் காணப்படுகிறது. இதன் மூலம் இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனை தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.