ஆத்மநிர்பார் பாரத் என்ற சுயசார்பு பொருளாதார முயற்சியில் 101 வகையான பாதுகாப்பு தளவாடங்களின் தடை
- ஆத்மநிர்பார் பாரத் என்ற சுயசார்பு பொருளாதார முயற்சியில் மிகப்பெரிய முன்னெடுப்பை செய்ய பாதுகாப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.
- அதன் அடிப்படையில் ராணுவம் மற்றும் ராணுவத் தொழில்துறையினரின் ஆலோசனைகளுக்குப் பிறகு, 101 வகையான பாதுகாப்பு தளவாடங்களின் தடை பட்டியலை தயாரித்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
- கடந்த 2015 முதல் தற்போது வரை மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன ரேடார்கள், சோனார் கருவிகள், துப்பாக்கிகள், போக்குவரத்து விமானங்கள் உள்ளிட்ட 260 வகையான தளவாடங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செயப்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் உள்நாட்டிலேயே தளவாடங்களை கொள்முதல் செய்ய 52 ஆயிரம் கோடி ரூபாயை பாதுகாப்புத்துறையில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
- இதனால், தளவாட இறக்குமதிக்கான தடையை நடப்பாண்டு ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை படிப்படியாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
- அதன்படி, சக்கரம் பொருத்திய பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள், குண்டு துளைக்காத கவச உடைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் லாஞ்சர்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்ட 69 தளவாடங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே தடை விதிக்கப்படுகிறது.
- எடை குறைவான இயந்திர துப்பாக்கிகள், டீசல் மற்றும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பல்கள், பீரங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட 11 தளவாடங்களுக்கு 2021 டிசம்பர் முதல் இறக்குமதி தடை விதிக்கப்படுவதோடு, எடை குறைந்த ராக்கெட் லாஞ்சர்கள், கப்பல் ஏவுகணை உள்ளிட்ட இதர தளவாடங்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் இறக்குமதி தடை விதிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த வகையில் அடுத்த 7 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கடனுதவி வழங்கும் திட்டம் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்
- வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காணொலி மூலமாக தொடக்கி வைத்தாா்.
- விவசாயிகள் ஏா் கலப்பையை வழிபடும் தினமான பலராமா் ஜயந்தியையொட்டி, பிரதமா் மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இணையவழிக் கூட்டம் நடைபெற்றது.
- வேளாண் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக, ரூ.1 லட்சம் கோடி சிறப்பு கடனுதவி அளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியில் ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும். நிகழாண்டில் ரூ.10,000 கோடியும், அடுத்த 3 ஆண்டுகளில் தலா ரூ.30,000 கோடியும் கடனுதவி வழங்கப்படும்.
- தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், விவசாய குழுக்கள், வேளாண் உற்பத்தி அமைப்புகள் ஆகியவற்றின் மூலமாக இந்த கடனுதவி வழங்கப்படும். இதற்காக, 12 பொதுத் துறை வங்கிகளில் 11 வங்கிகள், வேளாண் துறை அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
- கிராமப்புறங்களில் நவீன வசதிகளுடன் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதனால், கிராமங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- அத்திவாசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் வேளாண் பொருள்களை இருப்பு வைக்க வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முதலீடு செய்வதற்கு அதிக அளவில் யாரும் முன்வருவதில்லை.
- விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 8.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.17,000 கோடி ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது.
- தில்லியில் வேளாண் உள்கட்டமைப்பு கடனுதவி வழங்கும் தொடக்க நிகழ்ச்சிக்கு இடையே, 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 உதவித்தொகையை அவா்களின் வங்கிக் கணக்கில் பிரதமா் மோடி நேரடியாக செலுத்தினாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகையை 3 தவணைகளாக வழங்கும் திட்டம், கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. 6-ஆவது தவணை தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்குழிகள் கண்டுபிடிப்பு
- மதுரை மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் முதுமக்கள் தாழி, பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள், கல்வட்டங்கள், எலும்புகள், விதவிதமான குடுவைகள் உள்ளிட்டவை அதிகளவில் கிடைத்துள்ளதாக அப்பகுதிகள் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
- இந்த நிலையில் மேலும் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்குழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதாவது நானூத்து பைபத்தி என்ற கிராமத்தில் மலைவார பகுதியில் பழமையான கற்குழிகள், இரும்பு உலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் முதல் 4 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கற்கால ஆயுதங்கள், சங்ககால ஆயுதங்கள், இரும்பு ஆயுதங்கள், சுண்ணாம்பு குவியல்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் என பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
ஆகஸ்ட் 9: உலக பழங்குடியினர் தினம்:
- சர்வதேச பழங்குடிகள் தினம் 1982ம் ஆண்டு முதல் 39 ஆண்டாக ஆகஸ்ட் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்பூர்வகுடியினர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில் பழங்குடி மக்களின் வாழ்வியல், கலை, கலாச்சாரம், மொழி, மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றது. உலகெங்கிலும் பழங்குடியினர் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் மற்றும் பழங்குடியின மக்கள் இது தொடர்பான கண்காட்சிகள், கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா கோரப்பிடியில் உலக நாடுகள் சிக்கி தவிக்கும் சூழலில் ‘’கோவிட் 19 - பழங்குடி மக்களின் மீள்திறனும்’’ எனும் தலைப்பில் காணொளி கருத்தரங்கமாக மட்டுமே நடைபெறும் சூழல் உள்ளது.