ஏஎம்என் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் இணையம் மூலம் நடத்தப்பட்ட பரத நிகழ்ச்சிக்கு கின்னஸ் விருது
- ஏஎம்என் சர்வதேச குழுமத்தின் அங்கமான ஏஎம்என் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட பரதக் கலைஞர்களை இணையம் மூலம் ஒன்றிணைத்து, ஒரே நேரத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நடத்தப்பட்டது.
- 3 நிமிடம் 20 நொடிகள் பாடப்பட்ட பாடலுக்கு அனைவரும் பரதநாட்டியம் ஆடினர். ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் இணையம் மூலம் பங்கேற்று நடனம் ஆடியதால் இந்நிகழ்ச்சிக்கு ஆக.29 கின்னஸ் விருது கிடைத்துள்ளது.
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் : இந்தியா - ரஷ்யா இணைந்து சாம்பியன்
- இந்தியா – ரஷியா அணிகள் மோதிய ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதல் சுற்றை தவிர அனைத்து சுற்றுகளும் இன்டர்நெட் பிரச்சினையில் இரண்டு இந்திய வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் காய்களை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.
- இதனால் ரஷியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா இதனை எதிர்த்து முறையிட்டது. இதனால் கடைசியில் இந்தியாவும், ரஷியாவும் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் சுற்று 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
- கொரோனா தொற்று காரணமாக போட்டி ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது.
ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல் இந்தியா திட்டம்
- கடற்படையில் அதிகரித்து வரும் சீனாவின் பலத்தை எதிர்கொள்ள, ஆறு நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
- சீனா, தன் கடற்படையின் வலிமையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, ராணுவ அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
- 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், ஆறு நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 'புராஜெக்ட் 75' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு, 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடன், இந்த நீர்மூழ்கி கப்பல்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன.இதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிந்துவிட்டன.
- இந்த நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான டெண்டர், அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும்.நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க, இரண்டு இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஆறு நிறுவனங்களை, ராணுவ அமைச்சகம் தேர்வு செய்து உள்ளது.
68வது 'மனதின் குரல்' (மான் கி பாத்) நிகழ்ச்சி
- உலகளவில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கும் பொம்மை தயாரிப்பு தொழில் துறையில் இந்தியா மிகவும் பின்தங்கி இருப்பது பற்றி கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பொம்மை தயாரிப்பில் இந்தியாவை உலகின் மையமாக மாற்றும்படி தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் 'மனதின் குரல்' (மான் கி பாத்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். கடந்த 2014ல் அவர் ஆட்சிக்கு வந்தது முதல், இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறார்.
- நமது பண்டிகைகளும், சுற்றுச்சூழலும். இந்த இரண்டுக்கும் இடையே ஒரு மிக ஆழமான தொடர்பு உள்ளது. இந்த வாரத்தில் ஓணம் பண்டிகை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இது நமது விவசாயத்தோடு தொடர்புடைய பண்டிகை.
- விவசாயிகளின் ஆற்றலால் மட்டுமே நமது வாழ்க்கை, நமது சமூகம் ஆகியவை இயங்குகின்றன. நமது விவசாயிகள், கொரோனா நிலவும் இந்தக் கடினமான சூழ்நிலைகளிலும் தங்கள் ஆற்றலை நிரூபித்துள்ளனர்.
- நமது நாட்டில் இந்த முறை முன்பட்டப் பயிர் விதை நடவை, கடந்த ஆண்டை விடவும் 7 சதவீதம் அதிகம் செய்து இருக்கிறார்கள். இதற்காக, அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன், அவர்களின் உழைப்பைப் போற்றுகிறேன்.
- இந்திய விளையாட்டுப் பொருட்கள். இந்திய நாட்டுக் குழந்தைகளுக்குப் புதிய புதிய விளையாட்டுப் பொருட்களை எப்படி அளிப்பது, உலக விளையாட்டுப் பொருட்களின் சந்தையில் இந்தியாவை எப்படி மையப்புள்ளியாக மாற்றுவது என்பது பற்றி அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. உலகளவிலான விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில் துறையின் ஆண்டு சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகம்.
- ஆனால், இதில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவு. அதனால், பொம்மை தயாரிப்பில் இந்தியாவையும் உலகின் மையப்புள்ளியாக மாற்ற, தொழில் முனைவர்கள் முன்வர வேண்டும்.
- குடிசைத் தொழிலோ, குறு-சிறு தொழிலோ, பெரிய தொழில்களோ, தொழில் முனைவோரோ அனைவரும் இதன் வட்டத்திற்குள் வர வேண்டும். எனவே, பொம்மை தயாரிக்க புதிய தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கிறேன். அனைவரும் உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுக்கும் நேரம் இது.
- நமது சிறார்களுக்காக, புதியதொரு வகையிலான, நல்ல தரம் வாய்ந்த விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்போம். கம்ப்யூட்டரும், ஸ்மார்ட் போனும் உள்ள இந்த காலக்கட்டத்தில் கணிப்பொறி விளையாட்டுக்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.
- இவற்றில் பெரும்பாலான விளையாட்டுக்களின் மையக்கரு அந்நிய நாடுகளின் கலாச்சாரத்தைத் தழுவி அமைந்திருக்கிறது. நமது பாரம்பரியம் மிகவும் வளமானது. இவற்றை அடியொற்றி இந்தியாவுக்கான விளையாட்டுக்களை வடிவமையுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
- கொரோனா பரவல் உள்ள இந்த தருணத்தில் நமது ஆசிரியப் பெருமக்கள் படிப்பில் தொழில்நுட்பத்தை எத்தனை அதிக அளவு பயன்படுத்தலாம் என்பதை இயல்பாக கையாண்டனர். நாட்டின் வளர்ச்சி பயணத்தில் மக்கள் அனைவரும் இடம் பெற வேண்டும்.
- நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே கொரோனாவை வீழ்த்த முடியும். ஒரு மீட்டர் இடைவெளி, முகக்கவசம் நீ அணி என்ற உறுதிப்பாட்டைப் பின்பற்றுங்கள். நீங்கள் நல்ல உடல்நலத்தோடு இருங்கள்.
- மோடி மேலும் பேசுகையில், ''இந்தியாவில் சில இடங்கள் விளையாட்டுப் பொருட்களின் மையங்கள் என்ற வகையில் மேம்பாடு அடைந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, கர்நாடகா மாநிலம் ராமநகரத்தில் உள்ள சன்னபட்னா, ஆந்திர மாநிலம் கிருஷ்ணாவில் இருக்கும் கொண்டப்பள்ளி, தமிழ்நாட்டின் தஞ்சாவூர், அசாமின் துப்ரி, உத்தர பிரதேசத்தின் வாரணாசி என இப்படிப்பட்ட இடங்கள் பலவற்றைக் கூறலாம்,'' என்றார்.
- மோடி மேலும் பேசுகையில், ''இந்திய ராணுவத்தில் உள்ள சோபி, விதா ஆகிய நாய்களுக்கு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நாய்கள் பல குண்டு வெடிப்புகளையும், தீவிரவாத சூழ்ச்சிகளையும் முறியடிப்பதில் மிக முக்கிய பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன.
- பேரிடர் மேலாண்மையிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் நாய்களின் பங்கு மிகப்பெரியது. இந்திய ரக நாய்களில் முதோல் ஹவுண்டுகள், ஹிமாச்சலி ஹவுண்டுகள் இருக்கின்றன. ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை போன்ற மிக அருமையான இந்திய ரக நாய்கள் உண்டு. இவை இந்திய சூழலுக்கு ஏற்ப உள்ளன,'' என்றார்.
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை முழுமையாக ரத்து, அனைத்து வழிபாட்டு தலங்களையும் நிபந்தனையுடன் திறக்க அனுமதி தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
- தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ-பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும்.
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் தரிசனம் இரவு 8.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.
- மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- வணிக வளாகங்கள் அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன், மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயக்க தடை தொடரும்.
- சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
- அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
- சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தவிர்க்க இயலாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
- உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
- திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 21.9.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
- தற்போது 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள், 1.9.2020 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். எனினும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களிலும், தொழிற்சாலை போன்ற பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை தொடர்பு அலுவலராக நியமித்து, முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதையும், நோய்த் தொற்று உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
- நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்படுவர்.
- திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
- ஞாயிற்றுக் கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு, செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.
- மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட 15.9.2020 வரை அனுமதியில்லை. 15.9.2020க்குப் பிறகு, தமிழ்நாட்டிற்குள் பயணியர் இரயில்கள் அனுமதிப்பது பற்றி, சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்.
- விமானப் போக்குவரத்து மூலம் பயணிக்கும் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள், இரயில் போக்குவரத்து மூலம் பயணிக்கும் பிற மாநில பயணிகள், தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்றை கண்டறிதலுக்கான புதிய நடைமுறை வெளியிடப்படும்.
- தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.
- பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரபோபேங்கின் குளோபல் டாப் 20 பட்டியலில் நுழைந்த முதல் இந்திய பால் நிறுவனமாகியது "அமுல்"
- ரபோபேங்கின் குளோபல் டாப் 20 பால் நிறுவனங்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்திய பால் நிறுவனமாக மாறியுள்ளது "அமுல்". 5.5 பில்லியன் டாலர் வருட வருவாயுடன் இந்த பட்டியலில் 16வது இடத்தைப்பெற்றுள்ளது அமுல்.
- அமுல் (குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) நிறுவனம், ரபோபேங்கின் உலகளாவிய சிறந்த 20 பால் நிறுவனங்களின் பட்டியலில் நுழைந்த முதல் இந்திய பால் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
- 22.1 பில்லியன் டாலர் வருவாயுடன் சுவிட்சர்லாந்தின் நெஸ்லே நிறுவனம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.