வான் கண்காணிப்புக்கு 2 பால்கன் விமானங்கள்: இஸ்ரேலிடம் வாங்க மத்திய அரசு முடிவு
- வான்பரப்பில் கண்காணிப்பு திறனை அதிகரிக்கும் விதமாக இஸ்ரேல் தயாரிப்பான பால்கன் ரக கண்காணிப்பு விமானங்களை இந்தியா வாங்க உள்ளது. ஏற்கனவே இந்தியாவிடம் 3 பால்கன் விமானங்கள் உள்ளன.
- இவற்றில் உள்ள அதிநவீன தொழில்நுட்பமானது, வான்பரப்பில் நுழையும் எதிரி நாட்டு விமானங்களை சில விநாடிகளில் கண்டறிந்து எச்சரிக்கையை அனுப்பும். அதாவது 7 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் வரும் எதிரிகளின் விமானங்களையும் துல்லியமாக அடையாளம் காணும் திறன் கொண்டது. இந்த பால்கன் விமானம் மணிக்கு 973 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது இந்த விமானம்.
- தற்போது உலக நாடுகளால் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு விமானங்களில் பால்கன் ரக விமானங்கள்தான் மிகவும் திறன் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- இந்த விமானங்களை வாங்கஇஸ்ரேல் அதிகாரிகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதற்கான, 1.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்துக்கு, மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
கின்னஸில் இடம் பிடித்த உலகின் மிக வயதான காதல் தம்பதி
- தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் வசித்து வரும், ஜூலியோ சீசர் மோரா, 110, மற்றும் வால்ட்ராமினா குயிண்டேரோ, 104, தம்பதியினர், உலகின் வயதான தம்பதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
- இவர்களின் பெயர்கள், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த தம்பதியினர், 1941ல், காதலித்து திருமணம் செய்துள்ளனர்.ஜூலியோ காதல் திருமணத்திற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் கிடைக்கவில்லை.
- இருப்பினும் அவர்கள் அனைவரையும் உதறி தள்ளிவிட்டு குயிண்டரோவை கரம்பிடித்தார். 79 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்த காதல் தம்பதிக்கு 4 மகன்/மகள்களும், 11 பேரன்களும், 25 கொள்ளு பேரன்களும், 1 பேரன் வயிற்று பேரனும் உள்ளனர்.
4ஆம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகள் - மத்திய அரசு அறிவிப்பு
- கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
- இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
- இந்நிலையில், நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது.
- அதில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
- மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- இதையடுத்து, 9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம். ஆனால் கட்டாயமல்ல என்றும் கூறியுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- மேலும், வெளிநாட்டு விமான சேவை தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தேசிய விளையாட்டு தினம்: காணொலி காட்சி வாயிலாக விளையாட்டு விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்
- தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, தேசிய விளையாட்டு விருதுகளை காணொலி காட்சி மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்துள்ளார்.
- ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்தின் பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருதுகளை ஜனாதிபதி வழங்குவார்.
- அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி மூலமாக தேசிய விளையாட்டு மற்றும் சாகசங்களுக்கான விருதுகளை வழங்கினார்.
- விக்யான் பவனில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்திர துருவ் பாத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இதேபோல் நாட்டின் பல்வேறு விளையாட்டு ஆணைய மையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்று விருதுகளை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி நடைபெற்ற அனைத்து இடங்களிலும் சுகாதார அமைச்சத்தின் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன.
- ரோகித் சர்மா, மாரியப்பன், மணிகா பத்ரா, வினேஷ் போகத், ராணி ஆகியோர் இந்த ஆண்டின் மிக உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதுவரை இல்லாத வகையில், 5 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
- இவர்களில் ரோகித், வினேஷ் போகத் தவிர தவிர மற்ற மூவருக்கும் இன்று விருது வழங்கப்பட்டது. இஷாந்த் சர்மா, தீப்தி சர்மா, அடானு தாஸ், திவிஜ் சரண் உள்ளிட்ட 27 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
- தேசிய விளையாட்டு விருது வழங்கும் நிகழ்ச்சியானது கொரோனா அச்சம் காரணமாக முதல் முறையாக காணொலி வாயிலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது