
டிக்டாக், ஹலோ உட்பட 59 சீன ஆப்களுக்கு தடை
- கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
- இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க முயற்சித்த சீனா மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் சீனா பொருட்களை தவிர்ப்பது, சீன ஆப்களை மொபைலில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் மக்கள் தாங்களாகவே முன்வந்து செய்கின்றனர்.
- வெளிநாட்டை சேர்ந்த சில மொபைல் ஆப்கள், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி முறைகேடு செய்வதாக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுபோன்ற தகவல் திருட்டுகள் தேச பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திடும்.
- எனவே நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, தேச பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கினை கருத்தில் கொண்டு 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
- தகவல் தொழில்நுட்ப சட்டம் 2009ன் பிரிவு 69ஏவின் கீழ், அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஐசிசி உயர்மட்ட நடுவர் குழுவில் இடம்பெற்ற இந்திய நடுவர் நிதின் மேனன்
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உயர்மட்ட நடுவர் குழுவில் (எலைட் பேனல்) சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்படும் நடுவர்கள் ஆண்டுதோறும் சேர்க்கப்படுவார்கள்.
- போட்டிகளில் அவர்களது செயல்பாடு நன்றாக இருந்தால் அந்த பொறுப்பில் தொடர முடியும். அந்த வகையில், வரும் சீசனுக்கான (2020-21) ஐ.சி.சி. சிறந்த நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார்.
- அவரை ஐ.சி.சி. நடுவர் தேர்வு கமிட்டியினர் தேர்வு செய்து இருக்கிறார்கள். இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் நைஜெல் லாங் ஐ.சி.சி. நடுவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நிதின் மேனனுக்கு இடம் கிடைத்து இருக்கிறது.
- இதன் மூலம் ஐ.சி.சி.உயர்மட்ட நடுவர் குழுவில் இடம் பிடித்த 3-வது இந்தியர் நிதின் மேனன் ஆவார். ஏற்கனவே முன்னாள் கேப்டன் வெங்கட்ராகவன், சுந்தரம் ரவி ஆகியோர் இந்த நடுவர் குழுவில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.
- தற்போது இந்த நடுவர் குழுவில் அலீம் தார் (பாகிஸ்தான்), குமார் தர்மசேனா (இலங்கை) உள்பட 12 பேர் இடம் வகிக்கின்றனர். இதில் இளம் வயது நடுவர் நிதின் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.
நீா் மின் நிலைய திட்டம் இந்தியா பூடான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
- இந்திய அரசின் உதவியுடன் பூடானில் நீா் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இந்தியா-பூடான் இடையேயான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் அமைக்கப்படவுள்ள 5-ஆவது நீா் மின் உற்பத்தி நிலையம் இதுவாகும்.
- கிழக்கு பூடானின் திரசியாங்ட்ஸீ மாவட்டத்தில் பாயும் கோலோங்சு நதியில் நீா் மின் நிலையத்தை அமைப்பதற்கு இந்தியாவும் பூடானும் ஒப்புக்கொண்டன. அதற்கான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அரசுகளும் திங்கள்கிழமை கையெழுத்திட்டன.
- இதற்காக, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பூடான் வெளியுறவு அமைச்சா் தண்டி டோா்ஜி ஆகியோா் பங்கேற்றனா்.
- 600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நீா் மின் நிலையம் கோலோங்சு நதியில் அமைக்கப்படவுள்ளது. இது அணையுடன் இணைந்த நீா் மின் நிலையமாக அல்லாமல் நதிநீா் பாய்வதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. மின் உற்பத்திக்காக 150 மெகா வாட் திறன் கொண்ட 4 டா்பைன்கள் நிறுவப்படவுள்ளன.
- இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கோலோங்சு நீா் மின் உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இந்தியாவைச் சோந்த சட்லஜ் நீா் மின் உற்பத்தி நிறுவனமும் பூடானைச் சோந்த திரக் பசுமைவழி மின் உற்பத்தி நிறுவனமும் கூட்டாக இணைந்து முதலீடு செய்யவுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா-பூடான் இடையேயான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் ஒட்டுமொத்தமாக 2,100 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 நீா் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
பொதுமுடக்க தளர்வு 2.0 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு
- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது ஜூலை 31 வரையில் ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- கொரோனா உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூலை 31 வரையில் பொதுமுடக்கம் நீட்டிப்பு.
- இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரையில் பொதுமக்கள் வெளியேவர தடை.
- நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளை திறக்க ஜூலை 31 வரையில் தடை.
- அனுமதிக்கப்பட்ட விமானங்களை தவிர மற்ற விமான சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு தடை.
- சினிமா தியேட்டர், மால், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களை திறக்க ஜூலை 31 வரையில் தடை.
- அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு கலைநிகழ்ச்சிகள், மத கூட்டங்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஜூலை 31 வரையில் தடை தொடரும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவித்தார் மம்தா பானர்ஜி
- தேசிய மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
- நாடு முழுவதும் தன்னலம் கருதாது சேவையாற்றி வரும் மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
- இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும். ஆண்ட்ரியா தினம் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
- மேலும், கரோனா முன்களப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- மேற்குவங்கத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த மருத்துவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர் பிதான் சந்திர ராய், அவரது பிறந்த தினம் மற்றும் நினைவு தினமான ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேசிய புள்ளியியல் தினம் - ஜூன் 29:
- தேசியப் புள்ளியியல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29 அன்று சமூகப் பொருளாதார திட்டமிடுதல் மற்றும் திட்டம் இயற்றுதலில் புள்ளியியலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
- 2018-ன் கருத்துரு - “பணித்துறையின் புள்ளியல் தரத்திற்கான உத்திரவாதம்“ (Quality Assurance in official Statistics).
- புள்ளியியல் துறை, புள்ளியியல் அமைப்பு மற்றும் பொருளாதாரத் திட்டமிடுதல் ஆகியத் துறைகளில் மறைந்த பேராசிரியர் பிரசாந்த சந்த்ரா மகல்நோபிஸ் அவர்களின் பங்களிப்பினை பறைசாற்றுவதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- 1933-ல் இவர் இந்தியாவின் முதல் புள்ளியியல் பத்திரிக்கையான சங்க்யாவைத் தொடங்கினார். அதுமட்டுமின்றி மகல்நோபிஸ் தொலைவு (Mahalnobis Distance) என்ற புள்ளியியல் அளவையினைக் கண்டறிந்ததற்காகவும் இவர் நினைவு கூறப்படுகிறார்.
- இவர் இந்தியப் புள்ளியில் நிறுவனத்தைத் தொடங்கினார். பெரிய அளவிலான மாதிரி ஆய்வுகளை வடிவமைக்க இவர் பெரும் பங்காற்றினார்.
- மத்திய அரசாங்கமானது புள்ளியியல் துறையில் முன்னாள் பேராசிரியர் PC மகலநோபிஸீ-ன் குறிப்பிடத்தக்க பங்குகளை நினைவுகூறும் பொருட்டு ஜூன் 29-ஆம் தேதியை தேசிய புள்ளியியல் தினமாக அனுசரிக்கிறது.
- இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் மகலநோபிஸின் கணித விளக்கங்களை நம்பியிருந்தது.
- இந்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமானது இந்தியாவில் கனரக தொழிற்சாலைகளை மேம்படுத்துவதை ஊக்குவித்தது. பின்னர் இது நேரு மகலநோபிஸ் மாதிரி அல்லது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைத் தொழிற்சாலை யுக்தி என்று அழைக்கப்படுகிறது.