மொஹாலி ஆக்கி ஸ்டேடியத்திற்கு பல்பீர் சிங் பெயர் : பஞ்சாப் மாநில விளையாட்டு அமைச்சர் அறிவிப்பு
- இந்திய ஆக்கி அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கியவரும், ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் 3 முறை அங்கம் வகித்தவருமான பல்பீர் சிங் சீனியர் மரணமடைந்தார்.
- கடந்த 2 வருடங்களாக நுரையீரல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர், அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 8-ந் தேதி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போதே அவருக்கு 3 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் உடல் நிலை மிகவும் மோசமானது.
- தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை 6.30 மணியளவில் உயிரிழந்தார். 95 வயதான பல்பீர்சிங்குக்கு ஒரு மகள், 3 மகன்கள் இருக்கின்றனர்.
- மரணமடைந்த பல்பீர் சிங் அவர்களுக்கு விளையாட்டு உலகினர் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, மாலையில் சண்டிகாரில் உள்ள மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
- தொடர்ந்து மொகாலி ஸ்டேடியத்துக்கு பல்பீர் சிங் பெயர் சூட்டப்படும் என்று பஞ்சாப் மாநில விளையாட்டு மந்திரி ரானா குர்மித் சிங் சோதி அறிவித்துள்ளார்.
ரயில்வே சுகாதார சேவை தலைமை இயக்குநராக பிஷ்ணு பிரசாத் நந்தா நியமனம்
- இந்திய ரயில்வே சுகாதார சேவையில் தலைமை இயக்குநராக பிஷ்ணு பிரசாத் நந்தாநியமிக்கப்பட்டுள்ளார். இது ரயில்வே வாரியத்தின் சுகாதாரத்துறையின் உச்சபதவியாகும்.
- இதற்கு முன்பு, இவர் தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மருத்துவ இயக்குநராகப் பணியாற்றி வந்தார். புதிய பதவிக்கு குடியரசு தலைவர் அனுமதியுடன் ரயில்வே அமைச்சகம் மூலமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பதி கோவில் சொத்துக்களை விற்க கூடாது ஆந்திர மாநில அரசு அதிரடி உத்தரவு
- உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் லட்சக்கணக்கில் நிதி உதவி அளிப்பதும், காணிக்கை அளிப்பதும், நகை, பொருட்கள், நிலங்களை வழங்குவதும் வழக்கம். இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக திருப்பதி கோவில் இருக்கிறது.
- இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நிலங்களை விற்பனை செய்ய அந்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. பயன்படாத, பராமரிக்க இயலாத சொத்துகளை ஏலம்விட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
- நிதி நிர்வாகத்தை சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சிறு சிறு நிலங்களை விற்க முடிவு எடுக்கப்பட்டது. மொத்தம் 50 அசையா சொத்துக்கள், 17 வேறு சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் இந்த கோவிலுக்கு சொந்தமாக இருக்கும் சில நிலங்களையும் விற்க முடிவு செய்யப்பட்டது .
- அதே சமயம் இது தொடர்பாக பக்தர்கள், இந்து தலைவர்களிடம் கருத்து கேட்கும்படி தேவஸ்தானம் போர்டுக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது.
- இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் சொத்துக்களை விற்க கூடாது என்று தேவஸ்தான போர்டுக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை பரிசீலிக்க வேண்டும். அதனால் மறு உத்தரவு வரும் வரை சொத்துக்களை விற்க கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜப்பானில் அவசர நிலை முழுவதுமாக நீக்கம்: பிரதமர் சின்சோஅபே
- உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. முன்னதாக தொற்றுப் பாவலை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் காரணமாக, பிரதமர் சின்சோ அபே இந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.
- பின்னர் நோய்த்தொற்றின் தீவிரம் கணிசமான அளவு குறையத் துவங்கியவுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டன.
- ஆனாலும் டோக்யோ, சிபா, கனகவா மற்றும் சிடமா, வடக்கு ஹொக்கைடோ மாகாணங்களில் அவசர நிலைக் கட்டுப்பாடுகள் நீடித்து வந்தது. இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக ஜப்பானில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை முழுவதுமாக நீக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே அறிவித்துள்ளார்.
- சத்தீஸ்கரில் 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் போத்காட் பாசன திட்டத்துக்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- 'தெற்கு பஸ்தா் பகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள போத்காட் பாசன திட்டம் ரூ.22,653 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ளது.
- இந்தத் திட்டத்தின் மூலம் தண்டேவாடா, சுக்மா, பிஜாபூா் மாவட்டங்களில் 3.66 லட்சம் ஹெக்டோ விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
- இது தவிர 300 மெகாவாட் நீா்மின்சக்தியும் உற்பத்தி செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், தந்தேவாடா மாவட்டத்தின் பா்சுா் கிராமத்தில் உள்ள இந்திராவதி நதியில் அணை கட்டப்படவுள்ளது.
- போத்காட் திட்டத்துக்கான முதல்கட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், அந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
- இதையடுத்து இந்தத் திட்டத்துக்கான நில அளவை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இந்தத் திட்டம் 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது' என்றாா்.
- மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் காணொலி மூலம் சமீபத்தில் பேசிய சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், போத்காட் பாசன திட்டம் குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தாா். இந்நிலையில் அந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆன்லைன் மூலமாக மளிகைப் பொருட்கள் விற்பனையை ரிலையன்ஸ் நிறுவனம் துவங்கி உள்ளது. அமேசான், பிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில் ஜியோமார்ட் என்ற பெயரில் ரிலையன்ஸ் தன் விற்பனையை துவங்கி உள்ளது.
- இதற்கு முன்னோட்டமாக மும்பையின் சில பகுதிகளில் கடந்த மாதம் முதலே பொருட்கள் வழங்கும் சேவையை துவங்கியது. முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த சேவை துவங்கப்பட உள்ளது.
- ஜியோ நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்தில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா , ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., ஆகிய 5 நிறுவனங்கள் மொத்தம் 78 ஆயிரத்து 562 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.