தமிழகத்தில் முதல்முறையாக "ரேபிட் டெஸ்ட் கருவி" மூலம் கொரோனா பரிசோதனை - சேலத்தில் துவக்கம்
- கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும், பரிசோதனைகள் மிகக் குறைவாக இருப்பதால் நோய்த் தொற்றின் தாக்கம் சரிவரத் தெரியவரவில்லை எனக் கூறப்படுகிறது.
- கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தற்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர்.
- பிசிஆர் கருவிகள் நோய்த்தொற்றை உறுதிப்படுத்த எடுக்கப்படும் சோதனைக் கருவி. ஆனால் ரேபிட் கிட்கள் பரவலாக அனைத்துத் தரப்பினரையும் முதற்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தும் கருவி. இதன் மூலம் அரை மணிநேரத்தில் தொற்று உள்ளவர்கள், தொற்று சந்தேகம் உள்ளவர்களை சாதாரண பொதுமக்களிடமிருந்து வகைப்படுத்தலாம்.
- அதற்காக தமிழக அரசு 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் ஆர்டர் செய்தது. இதற்கிடையே மத்திய அரசின் மூலமே இவை வாங்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்கா இடையில் புகுந்து ரேபிட் கருவிகளை வாங்கிவிட்டது என்பதாலும் தமிழகத்துக்கு ரேபிட் கருவிகள் வரவில்லை எனக் கூறப்பட்டது.
- இந்நிலையில் நேற்று சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வர வேண்டிய ரேபிட் கிட்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்று தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- இந்நிலையில் ரேபிட் கிட் மூலம் நோயாளிகளை பரிசோதனை செய்யும் முறை இன்று சேலம் அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ராமன் இந்த நவீன முறையை அறிமுகப்படுத்தி வைத்தார்.
- இதன் மூலம் நோய்த் தொற்று உள்ளதா என ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படும். இந்த பரிசோதனை முடிவுகள் 15 நிமிடத்தில் அறிவிக்கப்படும்.
அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி கட்டாயம்: மத்திய அரசு
- கரோனா வைரஸ் நோய்த் தொற்று சீனாவைப் பாதிக்கத் தொடங்கி, உலகளவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது. இந்த நோய்த் தொற்று காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் இழப்புகளையும் சரிவையும் சந்திக்க நேரிடவுள்ளது.
- இதனைக் கருத்தில் கொண்டு விற்பனையில் சரிவைச் சந்தித்து வரும் நிறுவனங்களை, சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாக ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அந்நிய நேரடி முதலீடுகளுக்கான விதிமுறையை கடுமையாக்கின.
- இந்த நிலையில், இந்தியாவும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அரசின் முன் அனுமதி கட்டாயம் என்ற வகையில் திருத்தம் செய்துள்ளது.
- "இந்தியாவின் எல்லையோர நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அல்லது இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனர் ஏதேனும் எல்லையோர நாட்டு குடிமகனாக இருந்தாலோ அல்லது இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனர் ஏதேனும் எல்லையோர நாட்டில் இருப்பவராக இருந்தாலோ, அரசின் ஊடாகவே முதலீடு செய்ய முடியும்" என்று தெரிவித்துள்ளது.
ஆல்ப்ஸ் மலையில் இந்திய தேசியக்கொடி: சுவிஸ் மரியாதை
- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- உலகமே கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான மேட்டர்ஹார்ன் மலைச் சிகரத்தில் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு இரவும் வார்த்தைகள் அல்லது உருவங்கள் அடங்கிய ஒளிவடிவில் வெளியிட்டு வருகிறது.
- அந்த வகையில், சுவிட்சர்லாந்தின் கொடியுடன் தொடங்கிய ஒளிக்காட்சிகள், 'நம்பிக்கை', 'ஒற்றுமை', 'வீட்டில் இருங்கள்' போன்ற சொற்களும் ஒளிரப்பட்டன.
- இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் இந்திய மூவர்ண தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டது.
ஏப்ரல் 20 க்கு பிறகு தொழில்களுக்கு அனுமதி பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு
- ஏப்ரல் 20ம் தேதிக்குப் பின்னர் அனுமதிக்கப்படும் தொழில்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய பட்டியலில் குறைந்த ஊழியர்களுடன் நகர்ப்புற கட்டுமானத் தொழில்களுக்கு அனுமதி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் இயங்க அனுமதி, பேக்கேஜிங், மூங்கில் விற்பனை, தேங்காய் விவசாயம், வனப் பொருட்கள் போன்றவற்றுக்கும் இதில் கூடுதலாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, பொருளாதாரத்தை மேம்படுத்த சரக்குகளை தடையின்றி கொண்டு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது, விவசாயப் பணிகள், மீன்பிடித்தொழில், உணவுப் பதப்படுத்துதல், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உற்பத்தி, நிலக்கரி, தாமிரம் மற்றும் எண்ணெய் உற்பத்தி இதற்கு மத்திய அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 47,648 கோடி டாலராக அதிகரிப்பு
- ஏப்ரல் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு சிறப்பான வகையில் 182 கோடி டாலா் அதிகரித்து 47,648 கோடி டாலரை எட்டியுள்ளது.
- இது, முந்தைய ஏப்ரல் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 90 கோடி டாலா் குறைந்து 47,466 கோடி டாலராக காணப்பட்டது. இதற்கு முந்தைய வாரத்தில் கையிருப்பு 565 கோடி டாலா் உயா்ந்து 47,556 கோடி டாலராக இருந்தது.
- ஆண்டுக் கணக்கில் பாா்க்கும்போது ஏப்ரல் 10 நிலவரப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு 6,160 கோடி டாலா் அளவுக்கு அதிகரிப்பைக் கண்டுள்ளது.
- மாா்ச் 6 ஆம் தேதி வாரத்தில் இந்த கையிருப்பானது முன்னெப்போதும் கண்டிராத அளவில் 48,723 கோடி டாலராக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஏப்ரல் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 122 கோடி டாலா் உயா்ந்து 44,033 கோடி டாலராக காணப்பட்டது.
- ஆண்டுக் கணக்கில் இது 5,357 கோடி டாலா் உயா்ந்துள்ளது. ஏப்ரல் 3-ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் சொத்து மதிப்பு 55 கோடி டாலா் சரிந்து 43,911 கோடி டாலராக காணப்பட்டது.
- தங்கத்தின் கையிருப்பு 59 கோடி டாலா் உயா்ந்து 3,113 கோடி டாலராக இருந்தது. ஆண்டுக் கணக்கில் இது 783 கோடி டாலா் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.
நார்ட்டன் நிறுவனத்தை கையகப்படுத்திய டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம்
- டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த, நார்ட்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது.
- டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், 153 கோடி ரூபாய் கொடுத்து, இந்நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. நார்ட்டன், பிரிட்டனின் மிகப் பிரபலமான பிராண்டுகளில் ஒன்றாகும்.
- இந்நிறுவனம், 1898ம் ஆண்டு, ஜேம்ஸ் லான்ஸ்டவுன் நார்ட்டன் என்பவரால் துவக்கப்பட்டதாகும்.நார்டன் மோட்டார்சைக்கிள்கள் அதன் உன்னதமான மற்றும் ஆடம்பர மாடல்களால் மிகவும் புகழ் பெற்றது.