முதன்முறை காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி பெருங்களத்தூர் பேரூராட்சி அசத்தல்
- தமிழகத்திலேயே முதன் முறையாக, தாம்பரம் அடுத்த பெருங்களத்துார் பேரூராட்சியில், காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மனித வாழ்விற்கு அவசியமான தண்ணீரின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பருவநிலை மாறுபாடு, காடுகள் அழிக்கப்படுவது, சுற்றுச்சூழல் மாசு உட்பட, பல்வேறு காரணங்களால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
- இதனால், 15 ஆண்டுகளுக்கு முன், இலவசமாக கிடைத்த குடிநீர், தற்போது, லிட்டர், 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மக்களுக்கு, தரமான குடிநீர் வழங்க வேண்டிய அரசே, குடிநீரை விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- ஆறு, குளம், ஏரி என, அனைத்து நீர் நிலைகளும் மாசடைந்து வருவதால், மக்கள் குடிப்பதற்கு, 'கேன்' தண்ணீரை வாங்குவது அதிகரித்து வருகிறது.
- கேன் குடிநீருக்காக, விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீரை எடுப்பது அதிகரித்துள்ளதால், பல மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்று வருகிறது.
- நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாப்பதை, 2018ல் பொய்த்த வடகிழக்கு பருவமழை, நமக்கு உணர்த்தியது.அந்த ஆண்டு, மழை இல்லாததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் வறண்டன.
- நிலத்தடி நீரும் கிடைக்காததால், 2019 ஏப்., மற்றும் மே மாதங்களில், சென்னை மற்றும் புறநகரில், கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. ஓட்டல்கள், ஐ.டி., நிறுவனங்கள் பலவற்றிற்கு, விடுமுறை அளிக்கப்பட்டது.
- அரசின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளால், அடுத்த சில நாட்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.அதேநேரம், வரும் காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க, நீர்நிலைகளை துார் வாரி பராமரிப்பது மட்டுமின்றி, மாற்று வழிகளையும் யோசிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதற்கேற்ப, பெருங்களத்துார் பேரூராட்சியில், காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் முறை, ஆறு மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிறைவேறியது 'பிரெக்சிட்' மசோதா; பிரிட்டன் ராணி ஒப்புதல்
- ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்காக அமைக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில், 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது.
- இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.
- அதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, பார்லி.,யில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இரண்டு முறை பார்லி.,க்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்கள் மாறினர்.
- தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், 'பிரெக்சிட்' மசோதா அந்நாட்டு பார்லி.,யில் ஜன.,23 நிறைவேற்றப்பட்டது.
- இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். அதனையடுத்து வரும் ஜன.,31ம் தேதி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது.
- இதைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நாணயம்: பிரெக்சிட் வெற்றியை குறிக்கும் வகையில், 31ம் தேதி இரவில், சிறப்பு நாணயம் வெளியிடப்பட உள்ளது.
- அதில், 'அனைத்து நாடுகளுடனும் அமைதி, வளம் மற்றும் நட்பு' என, குறிப்பிடப்பட உள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து, வரும், 31ம் தேதி பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது. இருப்பினும் மற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் முடிக்க, இந்தாண்டு இறுதி வரை அதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வருடத்துக்கு 4 சதவிகிதம் அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோயாளிகள் ஐந்தாம் இடத்தில் தமிழகம்
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலொன்றை சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
- அதில், மார்பகப் புற்றுநோயாளிகள் அதிகமுள்ள மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல், `தேசிய புற்றுநோய் பதிவு திட்டம்' என்ற தளத்தில் இடம் பெற்றுள்ளது.
- தனது செய்தியில், 2018-ம் ஆண்டு தமிழகத்திலிருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 10,269 எனக் குறிப்பிடப்பட்டிருந்தார் அமைச்சர். இதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான தகவல்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 4 சதவிகிதம் புற்றுநோயாளிகள் அதிகரிப்பதை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
- 2018 - ம் ஆண்டு கணக்குப்படி, மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மூன்று மாநிலங்களாக உத்தரப்பிரதேசம் (24,181 நோயாளிகள்), மகாராஷ்ட்ரா (16,358 நோயாளிகள்), மேற்கு வங்காளம் (12,234 நோயாளிகள்) ஆகியவை உள்ளன.