Type Here to Get Search Results !

13th & 14th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை திட்டம்: துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
  • பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
  • தமிழகத்தில் மொத்தம் 84 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 52 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்களை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
  • மேலும், 2019-2020ஆம் கல்வியாண்டில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணாக்கர்களுக்கு 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணாக்கர்களின் சுய விபரங்களை பதிவு செய்யும் வசதியுடன் திறன் அட்டைகள் (Smart Cards) தயாரிக்கப்பட்டுள்ளன.
3 மாவட்ட கலெக்டர்களுக்கு பசுமை விருதுகள் வழங்கல்
  • நீலகிரி கலெக்டர் இன்னசன்ட் திவ்யா, ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், துாத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்துாரி ஆகியோருக்கு பசுமை விருதுகள் ஜூன் 13 வழங்கப்பட்டன. 
  • பிளாஸ்டிக் கழிவுகளை சிறப்பாக கையாளுதல் உள்ளிட்ட பசுமை நடவடிக்கைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
  • அதேபோல, ஐஏஎஸ் அதிகாரிகள் அமுதா, ஷில்பா மற்றும் பிரபாகர் உள்ளிட்டோருக்கும் பசுமை விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.



குடிமராமத்துத் திட்டம்: ரூ.499.68 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு
  • குடிமராமத்துத் திட்டப் பணிகளுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.499.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வாரி நீரைச் சேமிக்க வசதியாக குடிமராமத்துத் திட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை சோதனை அடிப்படையில் செய்து பார்க்க முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. 
  • இதைத் தொடர்ந்து, 2017-18-ஆம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 65 பணிகளுக்கு ரூ.331.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட 1,511 பணிகளில் 979 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்காக செலவிடப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.185.42 கோடியாகும்.
  • நிகழ் நிதியாண்டுக்கு நிதி: நிகழ் நிதியாண்டிலும் (2019-20) குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் புதிய பணிகளை அடையாளம் கண்டு பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர்கள் அரசுக்குப் பரிந்துரை அனுப்பியுள்ளனர். 
  • அதன்படி, 29 மாவட்டங்களில் ஆயிரத்து 829 குடிமராமத்துப் பணிகளுக்காக ரூ.499.68 கோடி நிதி ஒதுக்கவும் கேட்டுக் கொண்டனர். இந்தப் பரிந்துரைகளை தீவிரமாக ஆய்வு செய்த தமிழக அரசு, 1,829 பணிகளுக்குத் தேவையான ரூ.499.68 கோடிக்கான நிர்வாக ஒப்புதலை அளித்துள்ளது.
தமிழ் எழுத்தாளர்கள் இருவருக்கு சாகித்ய அகாடமி விருது
  • தமிழில் 'வால்' என்ற கவிதைத் தொகுப்புக்காக சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதும், குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்காக எழுத்தாளர் தேவி நாச்சிப்பனுக்கு 'பால புரஸ்கார்' விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியை திணிக்கும் சுற்றறிக்கை வாபஸ்: தெற்கு ரயில்வே பணிந்தது
  • தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் பேச வேண்டும்; தாய்மொழியில் பேசக் கூடாது என பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் அறிவித்துள்ளார். 
  • சென்னையில் திமுக எம்பி தயாநிதி மாறன் தலைமையிலான திமுகவினர் தெற்கு ரயில்வே பொதுமேலாளரை முற்றுகையிட்ட மனு அளித்ததைத் தொடர்ந்து சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
காவல்துறையில் புகார் அளிக்க DIGICOP 2.0 செயலி அறிமுகம்
  • காவல்துறையினரின் பணியினை துரிதமாக்கும் பொருட்டு DIGICOP 2.0 செயலியை பொதுமக்கள் அனைவரும் காலம் தாழ்த்தாமல் பதிவிறக்கம் செய்து புகார்களை விரைந்து அளிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • DIGICOP செயலியானது கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த செயலியில் காணாமல் போகும் அல்லது திருடப்படும் அலைபேசிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் பதிவு செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
  • இந்நிலையில், இன்று அறிமுகம் செய்யப்பட்ட DIGICOP 2.0 என்ற செயலியானது CCTNS என்னும் நவீன தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுவான அனைத்து புகார்களையும் பொதுமக்கள் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 



பிரியங்கா சோப்ராவுக்கு மனிதாபிமான விருது - யுனிசெஃப் அறிவிப்பு
  • இந்திய நடிகையும், குழந்தைகள் உரிமைக்கான கௌரவ தூதராகவும் உள்ள பிரியங்கா சோப்ராவுக்கு மனிதாபிமான விருதை வழங்க முடிவு செய்திருக்கிறது யுனிசெஃப் அமைப்பு. 
  • குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு கல்வி,சுகாதாரம் மற்றும் உரிமைகளை ஏற்படுத்த உருவான அமைப்பாகும். 
  • இந்த அமைப்பில் 2006 ல் இணைந்த நடிகை பிரியங்கா சோப்ரா அன்று முதல் குழந்தைகள் உரிமைகளுக்காக தொடர் குரல் கொடுத்து வருகிறார். 
  • உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் நலனுக்கான தூதராக நியமிக்கப்பட்ட பிரியங்கா சோப்ராவின் சிறப்பான செயல்பாட்டுக்காக டேனி காய் விருது வழங்கி சிறப்பிக்கவிருக்கிறார்கள்.
ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக தம்மினேனி ஸ்ரீனிவாஸ் ஒருமனதாக தேர்வு
  • ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக தம்மினேனி ஸ்ரீனிவாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில் தம்மினேனி ஸ்ரீனிவாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
17ந்தேதி 17வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடக்கம்: ஜூன் 16-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம்
  • 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் 17ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், ஜூன் 16-ம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருப்பதாக நாடாளுமனற் விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
  • அன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக இடைக்கால சபாநாயகரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். அதைத்தொடர்ந்து, சபாநாகர் தேர்தல் மற்றும் குடியரசு தலைவர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இஎஸ்ஐ பங்களிப்பு தொகை 4 சதவீதமாக குறைப்பு
  • தொழிலாளர் காப்பீட்டு திட்டமான (ESI) மீதான பங்களிப்பு, தொகையை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தொழிலாளர்களும், முதலீட்டாளர்களும் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
  • தொழிலாளர் காப்பீட்டு திட்ட சட்டத்தின்படி, செலுத்த வேண்டிய 6.5 சதவீதம் என்ற மதிப்பிலான மொத்த தொகை, 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • இதன்படி, தொழில் உரிமையாளர் செலுத்த வேண்டிய தொகை 4.75 சதவீதத்திலிருந்து, 3.25 சதவீதமாக குறையும். தொழிலாளி செலுத்த வேண்டிய பங்குத் தொகை, 1.75%லிருந்து 0.75%மாக குறைந்துள்ளது.
  • 15 ஆயிரம் வரை மாதச் சம்பளம் பெறுவோருக்கு மட்டுமே இஎஸ்ஐ சலுகைகள் வழங்கப்பட்ட நிலையை மாற்றி, 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல், ரூ.21,000 வரை ஊதியம் பெறுவோருக்கு இஎஸ்ஐ சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
  • 2018-19ம் நிதியாண்டு நிலவரப்ப்டி, 12,85,392 ஊழியர்கள் இஎஸ்ஐ வசதி பெற்றுள்ளனர். 2015-16ல் இது 7,83,786 என்ற அளவில் இருந்தது. தற்போதைய நிலவரப்படி, 3.6 கோடி மக்களுக்கு இஎஸ்ஐ பலன்கள் சென்றடைகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய சேவை பயன்பாட்டில் உலகளவில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!
  • ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால், இணைய சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், உலகளவில் இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • உலகளவில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரில் இந்தியர்களின் எண்ணிக்கை 12%. இந்த விஷயத்தில், அமெரிக்காவின் பங்கே வெறும் 8% என்பதையும் கவனிக்க வேண்டும்.
  • உலகளவில், இணையதள சேவைப் பயன்பாட்டில் சீனாவே முன்னிலை வகிக்கிறது. அந்நாட்டின் பங்கு 21%. 



மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்திய விற்பனை பிரிவு தலைவராக சந்தோஷ் ஐயர் நியமனம்
  • உலக அளவில் ஆடம்பர சொகுசு கார் பிரிவில் மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவம் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் விதத்தில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவில் 2019-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் மாற்றங்களை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
  • அதன் ஒரு பகுதியாக, தற்போது வாடிக்கையாளர் சேவை மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை துணைத் தலைவராக இருக்கும் சந்தோஷ் ஐயரை, மெர்ஸிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்புதிய நியமனம் வரும் ஜூலை-1 முதல் அமலுக்கு வருகிறது.
இலங்கை தேசிய புலனாய்வு சேவைக்கு புதிய தலைவர் நியமனம்
  • தேசிய புலனாய்வு சேவை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • ஜுன் மாதம் முதலாம் தேதி முதல் இந்த நியமனம் அமலுக்கு வரும். தேசிய புலனாய்வு சேவை அதிகாரியாக கடமையாற்றிய முன்னாள் பிரதி போலீஸ் மாஅதிபர் சிசிர மெண்டீஸ், தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.
ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்
  • விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கணினி தரவுகளை ஹேக் செய்த புகாரில் விசாரணையை எதிர்கொள்ளும் விதமாக அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கிர்கிஸ்தானுடன் இந்தியா ஒப்பந்தம்
  • பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - கிர்கிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கிர்கிஸ்தானில், நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, பிஸ்கெக் சென்றுள்ளார். 
  • இந்நிலையில், பிரதமர் மோடி, கிர்கிஸ்தான் அதிபர் சூரன்பே ஜீன்பெகோவ் முன்னிலையில், இந்தியா - கிர்கிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • பிரதமர் மோடி தெரிவித்ததாவது: பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக போராடும். எந்த நிலையிலும் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது என்பதையை உலகுக்கு உணர்த்துவது அவசியமானது.
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று சேர்ந்து போரிடுவோம்- அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
  • இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் தொடங்கியது.
  • இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பிஷ்கேக் சென்று அடைந்தார். இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (9-ந்தேதி) நான் இலங்கை பயணத்தின்போது, அங்குள்ள (கொழும்பு) புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு நான் பயங்கரவாதத்தின் கொடூர முகத்தைக் கண்டேன்.
  • ஒவ்வொரு மனிதாபிமான சார்பு சக்திகளும், அனைத்து நாடுகளும் தங்களுடைய கட்டுப்பட்ட களத்தில் இருந்து வெளியே வரவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுவதற்கான வழிவகைகள் குறித்து விவாதிப்பதற்கு உலக அளவிலான ஒரு மாநாட்டை நடத்த வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.



இந்திய வம்சாவழி நபருக்கு பாலஸ்தீனத்தின் உயரிய விருது
  • இந்தியா-பாலஸ்தீனத்துக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய இந்திய வம்சாவழி நபர் ஷேக் முகமது முனீர் அன்சாரிக்கு (91), "ஸ்டார் ஆஃப் ஜெருசலேம்' விருது வழங்கி கெளரவிக்கப்படும் என பாலஸ்தீன அரசு தெரிவித்திருந்தது. 
  • ஜெருசலேமிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலமான "இந்தியன் ஹாஸ்பிஸ்' மையத்தின் இயக்குநராக அன்சாரி உள்ளார். "ஸ்டார் ஆஃப் ஜெருசலேம்' என்பது, பாலஸ்தீன அரசால் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகும்.
இந்திய ஆண்கள் வில்வித்தை அணி டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி
  • உலக சாம்பியன்ஷிப் வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி ரிகர்வ் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது. 
  • இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றது. தருண்தீப் ராய், அட்டானு தாஸ், பிரவீண் ஜாதவ் கொண்ட அணி 5-3 என கனடாவை வீழ்த்தி தகுதி பெற்றது.
பிபா கால்பந்து தரவரிசை - இந்தியாவுக்கு 101-வது இடம்
  • உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) கால்பந்து அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இந்தியா 101-வது இடத்தில் உள்ளது. 
  • ஆசிய நாடுகளான ஈரான் 20-வது இடத்திலும், ஜப்பான் 28-வது இடத்திலும், கொரியா 37-வது இடத்திலும், கத்தார் 55-வது இடத்திலும் உள்ளன.
கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கனடா டொரன்டோ ராப்டர்ஸ் அணி வரலாற்று சாதனை வெற்றி
  • அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்காவின் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியை கனடா டொரன்டோ ராப்டர்ஸ் அணி வென்று சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றுள்ளது. இது டொரன்டோ அணியின் மாபெரும் சாதனை வெற்றியாகும்.
  • கலிபோர்னியாவில் என்பிஏ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதன் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியும், கனடா டொரன்டோ ராப்டர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் அனல் பறந்தது. இந்த போட்டியில் டொரன்டோ ராப்டர்ஸ் அணி வீரர்கள் ஆவேசமாக விளையாடினர். இதனால் ஒரு வரலாற்று சாதனையும் நிகழ்த்தப்பட்டது.
  • டொரன்டோ ராப்டர்ஸ் அணி இந்த போட்டியில் 114 புள்ளிகள் பெற்று வரலாற்று சாதனை வெற்றியை பெற்றது. சர்வதேச அளவில் டொரன்டோ ராப்டர்ஸ் அணி பிரபலமான இந்த சாம்பியன் ஷிப் கோப்பையை பெறுவது முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • டொரன்டோ ராப்டர்ஸ் அணியிடம் இருந்து கடும் சவாலை சந்தித்த அமெரிக்காவின் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணி 110 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தைதான் பெற முடிந்தது. டொரன்டோ ராப்டர்ஸ் அணி இந்த மாபெரும் வெற்றியை கனடா மக்கள் வெகு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel