புதுச்சேரி அரசின் நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- புதுச்சேரி அரசின் நிர்வாகத்தில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை என்றும் அமைச்சரவையின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுகிறார். இது அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அரசு ஆவணங்களை கோருவதற்கும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
- இந்த உத்தரவால் புதுச்சேரி துணை நிலை ஆளுநரான கிரண்பேடி, அரசின் அன்றாட செயல்பாடுகளில் தேவையில்லாமல் தலையிடுகிறார். அரசு நிர்வாக நடவடிக்கையில் குறுக்கீடு செய்கிறார்.
- ஆய்வு என்ற பெயரில் அரசின் செயல்பாடுகளில் தலையிடுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகளுக்கு அவரே தன்னிச்சையாக உத்தரவுகளை பிறப்பிக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆளுநரே ஆய்வுக்கூட்டங்களை நடத்துவதும், அரசு ஆவணங்களை அதிகாரிகளிடம் கேட்டுப்பெற்றும் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்.
- அவரது செயல்பாடுகள் அனைத்தும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு எதிராக உள்ளது. இதனால், அரசு நிர்வாகத்தை நடத்துவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடு, மசோதா நிறைவேற்றம் போன்ற முடிவுகளிலும் தலையிடுவதால் நிர்வாகம் செயலிழந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- எனவே, அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் ஆளுநருக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
நெல்லை பல்கலைக்கு சிறந்த பல்கலைக்கழகங்களில் 93ம் இடம்
- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு எம்.எஸ்.சி.,மற்றும் எம்.காம்.,வகுப்புகள் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது.
- இதற்காக 11.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதில் 60 சதவீத நிதி உதவியை மத்திய அரசு வழங்குகிறது. நடப்பு கல்வியாண்டு முதல் நெல்லை பல்கலைக்கழகத்தில் 65 மாணவர்களை கொண்ட தேசிய மாணவர் படை என்.சி.சி.,யில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
- மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுதுறையின், தேசிய தரமேம்பாட்டு மையம் என்ஐஆர்எப் மேற்கொண்ட கணக்கெடுப்பில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 93 இடத்தை பிடித்துள்ளது.
- உலக சாம்பியன்ஷிப் குத்து சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற கவுரவ் பிதூரி மற்றும் ஆசிய விளையாட்டு குத்து சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற அமித் பங்கால் ஆகியோரது பெயர்களை அர்ஜுனா விருதுக்கு இந்திய குத்து சண்டை கூட்டமைப்பு பரிந்துரைத்து உள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில் ராஜீவ் கேல்ரத்னா, அர்ஜுனா விருதுகளுக்கு வீரர்கள் பெயர்கள் பரிந்துரை
- இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில் ஆசிய சாம்பியன் பஜ்ரங் புனியா, ஆசிய போட்டி சாம்பியன் வினேஷ் போகட் ஆகியோரது பெயர்கள் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கும், ராகுல் அவாரே, ஹர்ப்ரீத் சிங், திவ்யா காகரன், பூஜா திண்டா ஆகியோரது பெயர்கள் அர்ஜுனா விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- இந்திய துப்பாக்கி சுடும் சம்மேளனம் சார்பில் கேல் ரத்னா விருதுக்கு ஹீனா சித்து, அங்குர் மிட்டல் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அர்ஜுனா விருதுக்கு அஞ்சும் முட்கில், ஷஸார் ரிஸ்வி, ஓம் பிரகாஷ் மிதர்வால் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி, மதுரிகா பட்கர் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புர்காவை அடுத்து இலங்கையில் இஸ்லாமிய தொலைக்காட்சிக்கும் தடை
- இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பை அடுத்து இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவிற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இப்போது இஸ்லாமிய தொலைக்காட்சியான பீஸ் டிவிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தீவிரவாதிகள் புர்கா அணிந்து கொண்டு பயங்கரவாத செயல்களை செய்து வருகிறார்கள் என்ற தகவலின் அடிப்படையில் இலங்கையில் இஸ்லாமிய பெண்களும் முகத்தை மூடும் எந்த வித ஆடைகளும் அணியக் கூடாது என்று அதிகாரப் பூர்வமாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டிருந்தார்.
- இதனையடுத்து துபாயில் இருந்து ஒளிபரப்பாகும் பீஸ் டிவியை இலங்கையில் ஒளிபரப்ப கூடாது என்று டயலாக் மற்றும் எஸ்.எல்.டி என்ற இரு கேபிள் டிவி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு முதல் இலங்கையில் பீஸ் டிவியின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் தேர்தல்: சோஷலிஸ்ட் கட்சி வெற்றி
- ஸ்பெயின் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், பிரதமர் பெட்ரோ சான்ஷெஸ் தலைமையிலான சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சி அதிக தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
- பிரிவினைக் கட்சிகள் வெற்றி: காடலோனியா பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளும் இத்தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்த முக்கிய இரண்டு கட்சிகள் 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
- இதில், பிரிவினைவாதத்தை முன்வைத்ததால் சிறையில் அடைக்கப்பட்ட 5 நபர்களும் அடங்குவர்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை.. லண்டன் நீதிமன்றம் அதிரடி
- ஜாமின் நிபந்தனையை மீறிவிட்டதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவுக்கு லண்டன் நீதிமன்றம் 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
- ஆனால் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்த அசாஞ்சே, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசிடம் இருந்து தப்பிப்பதற்காக லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்திற்குள் அகதியாக தஞ்சம் புகுந்தார்.
- இந்நிலையில் லண்டனில் நீதிமன்றத்தில் அசாஞ்சே மீது பாலியல் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜாமின் பெற்று ஈக்வடார் தூதரகத்திலேயே தொடர்ந்து அசாஞ்சே வசித்து வந்தார்.