1200 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
- சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி வரதராஜபெருமாள் கோயிலில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
- இக்கல்வெட்டின் உயரம் 70 செ.மீ. அகலம் 65 செ.மீ. தடிமன் 10 செ.மீ ஆகும். இதன் மேல்பகுதி உடைந்துள்ளது. உடைந்த மேல்பகுதி அங்கு காணப்படவில்லை.
- 8 வரிகளில் வட்டெழுத்துடன் கல்வெட்டு உள்ளது. இதன் முதல் இரு வரிகளும் படிக்க முடியாதபடி சிதைந்துள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டாக கருதலாம். எழுத்தமைதியானது 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்தை ஒத்து காணப்படுகிறது.
- கல்வெட்டுகள் ஆரம்ப காலத்தில் தமிழ் பிராமியிலும் பின் வட்டெழுத்திலும், 9 ஆம் நூற்றாண்டுக்கு பின் இப்போது நாம் பயன்படுத்தும் வடிவிலும் பொறிக்கப்பட்டன.
- கல்வெட்டின் இறுதியில் சக்கரம் போன்ற வட்ட வடிவ கோட்டு உருவம் ஒன்று வரையப்பட்டுள்ளது. ஒரு வேளை இது சுருள் வாளாக இருக்கலாம். வாணன் வம்சத்தை சேர்ந்தவர்கள் சங்ககாலம் முதலாகவே குறுநில மன்னர்களாக அறியப்படுகிறார்கள். வாணர்களின் நடுகல் கல்வெட்டுகள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, செங்கம் போன்ற பகுதிகளில் நிறைய கிடைத்து உள்ளது.
- 12 ஆம் நூற்றாண்டில் இவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறகழூரை தலைநகராக கொண்டு வாணகோவரையர்கள் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட இக்கல்வெட்டின் மூலம் வாணர் பரம்பரையை நேர்ந்த வாணன் வாரமன் என்பவர் 8 ஆம் நூற்றாண்டில் மேச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக ச.நாகராஜன் பொறுப்பேற்றார்
- மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக ச.நாகராஜன் பொறுப்பேற்றார். பொது சுகாதாரம் மற்றும் நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தவர்.
- சில தினங்களுக்கு முன்பு, மதுரை வாக்குப் பதிவு மையத்திற்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த சம்பவம் அறிந்த திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, வட்டாட்சியர் சம்பூரணம் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
- மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரும் ,தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரிகளையும் மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய நடைமுறைகளில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
ஜான்சன் நிறுவன பேபி ஷாம்பூ விற்பனைக்கு தடை விதித்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
- தமிழ்நாடு, ஆந்திரா, உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் ஷாம்பூ போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து ஷாம்பூவை தடை விதிக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
- ராஜஸ்தான் ஆய்வுக்கூடத்தில் நடத்திய சோதனைகளில் ஜான்சன் நிறுவனத்தின் ஷாம்பூ தரமற்றது என்றும், அதில் கட்டுமான பணியில் பயன்படுத்தப்படும் கார்சினோஜின் போன்ற ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் பர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது
- இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. இதில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
- இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். அவர்கள் உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, இலங்கையில், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
- இந்த சூழலில், இலங்கையில் பொது இடங்களில் பர்கா உள்பட முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கை அதிபர் சிறிசேனா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
லா லிகா கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் பார்சிலோனா
- லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனில் 20 கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் லெவன்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 62-வது நிமிடத்தில் அடித்தார்.
- இன்னும் 3 லீக் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் பார்சிலோனா அணி பட்டத்தை உறுதி செய்தது. பார்சிலோனா அணி இதுவரை 35 போட்டிகளில் விளையாடி 25 வெற்றி, 8 டிரா, 2 தோல்வி என்று 83 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
- லா லிகா பட்டத்தை பார்சிலோனா அணி வெல்வது இது 26-வது முறையாகும். இவற்றில் பார்சிலோனா கோப்பையை வென்ற 10 தொடரில் மெஸ்சி அங்கம் வகித்துள்ளார். இதன் மூலம் பார்சிலோனாவுக்காக அதிக முறை லா லிகா கோப்பையை வென்றுத் தந்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்தியா முதலிடம்
- உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது.
- சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்று வந்த இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி பதக்கம் என 4 பதக்கங்களுடன் முதலிடம் பெற்றது.
- சீனா தலா 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்தையும், ரஷியா 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கத்துடன் மூன்றாவது இடத்தையும் பெற்றன.
- அபிஷேக் வர்மா, மானு பாக்கர்-செளரவ் செளதரி இணை, அஞ்சும் முட்கில்-திவ்யான்ஷ் சிங் இணை ஆகியோர் தங்கப் பதக்கத்தை வென்றனர். மேலும் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்றார் திவ்யான்ஷ் சிங்.
- 5 ஒலிம்பிக் போட்டி தகுதி இடங்களையும் இந்திய வீரர்கள் பெற்றுள்ளனர். புது தில்லியில் நடைபெற்ற முந்தைய உலகக் கோப்பை போட்டியிலும் ஹங்கேரியுடன் இணைந்து முதலிடத்தைப் பெற்றிருந்தது இந்தியா.
ஆசிய பேட்மிண்டன் தொடர் : சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பானை சேர்ந்த அகானே யமகுச்சி சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் 21-19, 21-19 என நேர்செட் கணக்கில் யமகுச்சி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்து உள்ளார்.