குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வுக் கட்டணம் செலுத்த வரும் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) உத்தரவிட்டுள்ளது.
குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இரண்டு மிகப்பெரிய தேர்வுகளும் முதல் முறையாக இணைத்து ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
சுமார் 18 லட்சம் பேர்: தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (டிச. 13) கடைசி நாள் என்பதால், அதிகளவு தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.
ஒரே நாளில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பம் செய்த நிலையில், ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்ததால், மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தாலும், அதற்கான கட்டணத்தைச் செலுத்த வரும் 15 ஆம் தேதி நள்ளிரவு வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:-
தேர்வுக்கட்டணமாக ரூ.100-ஐ இதுவரை செலுத்தாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை இரண்டு நாட்களுக்குள் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த அனைவரும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (APPLICATION STATUS) அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் என்ற இணைப்பினை கிளிக் செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளவும்.
இணைய வங்கி, பற்று மற்றும் கடன் அட்டைகள் வழியாக பணம் செலுத்தியும் விண்ணப்பம் ஏற்கப்படவில்லையெனில் ஆன்-லைன் கட்டண சோதனை என்ற இணைப்பில் அவர்களது பணப்பரிமாற்றம் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்து அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் வழியாக மீண்டும் சரிபார்க்கலாம். அதில் அனைத்து பணப்பரிமாற்ற முயற்சிகளும் தோல்வியடைந்திருந்தால் அவர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் மீண்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். தோல்வியடைந்த பணப்பரிமாற்றத்திற்கான தொகை சரிபார்ப்பிற்குப் பின்னர் அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
அஞ்சலகம் மற்றும் இந்தியன் வங்கி செலுத்துச்சீட்டு மூலமாக தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்கள் அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் என்ற இணைப்புக்குச் சென்று அதில் கோரப்படும் தகவல்களைச் சமர்ப்பித்து வரும் 20 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அதன் பின்னரும் நீங்கள் செலுத்திய தேர்வுக்கட்டணம் ஏற்கப்படவில்லை எனில் தாங்கள் பணம் செலுத்தியதற்கான ரசீதின் நகலினை apdtech2014@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 26 ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
தொழில்நுட்பக் காரணம் உட்பட எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்த இயலாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பு அல்ல என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.