- குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளை ஒரே நேரத்தில், ஒரே தேர்வாக நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
- இது குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-
- குரூப் 4 பிரிவில் அடங்கிய பல்வேறு பணியிடங்களுக்கும், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும். இவற்றை தனித் தனியே நடத்தும் போது குரூப் 4 பணியிடங்களுக்கு 15 லட்சம் பேரும், வி.ஏ.ஓ. பதவிக்கு சுமார் 12 லட்சம் பேரும் விண்ணப்பம் செய்கின்றனர்.
- தேர்வுக்கு விண்ணப்பம் செய்தோரின் விவரங்களை ஆராயும் போது, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் 60 சதவீதம் பேர் குரூப் 4 தேர்வுக்கும் விண்ணப்பம் செய்கின்றனர். இரண்டு தேர்வுகளையும் தனித் தனியாக நடத்தும் போது ஒவ்வொரு தேர்வுக்கும் சுமார் ரூ.15 கோடி வரை செலவாகிறது.
- பணத்துடன், மனிதவளம், கால விரயம் ஆகியனவும் ஏற்படுகின்றன.
- மேலும், விண்ணப்பதாரர்கள் இரண்டு முறை விண்ணப்பக் கட்டணம் செலுத்தி தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியுள்ளதுடன், தனித் தனியே தேர்வுக்கும் தயார் செய்ய வேண்டியுள்ளது.
- ஒரே தேர்வாக நடத்தப்படும்: தேர்வுகளை தனித்தனியே நடத்துவதால், விண்ணப்பதாரர்கள் இரண்டு பதவிகளில் தங்களுக்கு விருப்பமான பதவியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் கிடைக்கும் பதவியைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதன் பின், அடுத்த தேர்வுகளில் மற்ற பதவியை தேர்ந்தெடுப்பதால் ஏற்கெனவே இவர்களால் நிரப்பப்பட்ட பணியிடம் காலியாகி சம்பந்தப்பட்ட துறையிலும் பணிகளில் தொய்வு ஏற்படுகின்றன.
- அலைச்சலைத் தவிர்க்க...இரண்டு தேர்வுகளையும் ஒரே அறிவிக்கையில் வெளியிட்டு ஒரே தேர்வாக நடத்துவதன் மூலம் விண்ணப்பதாரர்கள் இரண்டு முறை தேர்வு எழுதுவது, இருமுறை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருவது ஆகியன முற்றிலும் தவிர்க்கப்படும்.
- மேலும், ஆறு மாத கால அளவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமின்றி தேர்வாணையத்துக்கும் கால தாமதம், பண விரயம் தவிர்க்கப்படும்.
- இந்தக் காரணங்களால் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. ஆகிய தேர்வுகளை தனித்தனியாக நடத்தாமல், ஒரே தேர்வாக நடத்தி விரைவில் முடிவுகள் வெளியிடப்படும்.
- இது தொடர்பான தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 4, விஏஓ தேர்வை ஒன்றிணைத்து ஒரே தேர்காக நடத்த முடிவு 2017 (TNPSC DECIDES TO CONDUCT VAO & GROUP - 4 EXAM AS COMBINED EXAM NAMELY CSSE - IV)
November 03, 2017
0
Tags