Tuesday, 29 August 2017

TNPSCSHOUTERS CURRENT AFFAIRS - AUGUST 2017 - TAMIL PDF

 • நைஜீரியாவில் நடைபெற்ற Lagos International Challenge Badminton போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராகுல் யாதவ் , மற்றொரு இந்திய வீரர் கரண் ராஜன் ராஜராஜனை தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளார்.
 • இரட்டையர் பிரிவில் இந்தியாவின்  மனு அட்ரி மற்றும் சுமீத் ரெட்டி ஜோடி கோப்பை வென்றுள்ளனர்.
 • ஷாசி & ஸ்ருதி ( Shachi & Shruti ) - RDEL எனப்படும் ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் பொறியியல் நிறுவனம், P - 21 திட்டத்தின் மூலம் உருவாக்கிய  இரண்டு ரோந்து கப்பல்கள்,  கடற்படையிடம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு ஷாசி, ஸ்ருதி என பெயரிடப்பட்டுள்ளன.
 • DRDO அமைப்பு முதன்முறையாக  ரிமோட் மூலம் இயங்க கூடிய , ஆளில்லா டாங்கிகளை உருவாக்கியுள்ளது.இதற்கு முந்த்ரா டாங்க் ( Muntra Tank ) என பெயரிடப்பட்டுள்ளது.இதில் Muntra - S , Muntra - M , Muntra - N என 3 வகையான டாங்குகள் உள்ளது.
 • நாட்டிலுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைகளை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்துவதற்கு இந்திய விமானப்படை அனுமதி வழங்கி இருக்கிறது.இதில், சென்னை - புதுச்சேரி இடையிலான ஈசிஆர் சாலைக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
 • ஏற்கனவே டெல்லி - ஆக்ரா இடையிலான விரைவு சாலை மற்றும் லக்னோ - ஆக்ரா இடையிலான விரைவு சாலையில் போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.
 • நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா , தனது பொறுப்பில் இருந்து ஆகஸ்ட் 31 முதல் விலகுவதாக அறிவித்துள்ளார்.
 • ஜி.எஸ்.டி ரிஜிஸ்ட்ரேஷன்: முதலிடத்தில் மகாராஷ்ட்ரா, ஐந்தாம் இடத்தில் தமிழகம்!
 • புதிதாக ஜி.எஸ்.டி வரிக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் இதுவரை 10 லட்சம் ஆகும். அவற்றில், மகாராஷ்ட்ரா மாநிலம் 1,32,448 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது.
 • அடுத்தடுத்த இடங்களில் குஜராத் (90,000), உத்தரப்பிரதேசம் (87,000) மேற்கு வங்கம் (75,000+) ஆகியவை இடம்பிடித்துள்ளன. தமிழ்நாடு, (75,000) ஐந்தாம் இடத்தில் உள்ளது.
 • சமீபத்தில் எந்த மாநில இளைஞர்கள் வரும்  ஆகஸ்ட் 7 அன்று கொண்டாடப்பட உள்ள ரக்‌ஷா பந்தன் விழாவில் தனது பரிசாக தங்களது சகோதரிகளுக்கு கழிவறைகளை கட்டிக் கொடுக்க உள்ளனர் - உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்ட இளைஞர்கள்
 • சுமார் 854 இளைஞர்கள் இணைந்து இந்தப் பணியை நிறைவேற்றியுள்ளனர்
 • தமிழகத்தில் முதல்முறையாக நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமானது - ‘சிங்காநல்லூர் குளம்’
 • பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரி யாக திகழும் கோவை சிங்காநல்லூர் குளம் தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • கோவையில் நொய்யல் நீரா தாரத்தை நம்பி ஏராளமான குளங்கள் உள்ளன. அதில் நகரின் எல்லையில் இருப்பது சிங்காநல்லூர் குளம். நகருக்குள் இருந்தாலும் மாசுபாடுகள் குறைந்து, சூழல் பாதுகாப்பில் முன்னிலையில் இருக்கிறது.
 • 396 வகை தாவரங்கள், 160 வகையான பறவை கள், 62 வகையான பட்டாம்பூச்சிகள், 22 வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் இந்த குளத்தை நம்பி உயிர் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமாக 200 வகையான மூலிகைச் செடிகள், வெளிநாட்டுப் பறவையினங்கள் ஆகியவற்றுக்கு சிங்காநல்லூர் குளம் அடைக்கலம் கொடுக்கும் இடமாக உள்ளது. நகரில் எங்கும் இல்லாத வகையில் நன்னீர் ஆமை அதிகமாக உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
 • உத்தரப் பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் பசுக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ராமன்சிங் தெரிவித்துள்ளார்.
 • முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோ சாலைகளில் ஆய்வு நடத்தப்படும் என்றும் சிறப்பாக செயல்படும் கோ சாலைகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் சத்திஸ்கர் முதலமைச்சர் ராமன்சிங் தெரிவித்துள்ளார்.
 • முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் பசுக்களுக்கு தனியாக 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
 • எஃப்.பி.ஐ. இயக்குநராக கிறிஸ்டோஃபர் ரே தேர்வு.
 • கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பாக இந்தியா, ரஷியா 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து.
 • தெலுங்கானா போன்று ஆந்திராவிலும் ‘அன்னபூர்ணா கேன்டீன்’: 5 ரூபாய்க்கு உணவு வழங்க அரசு முடிவு.
 • ரஷியா, ஈரான், வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதா - அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டார்.
 • 2028-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்.
 •  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தேவேந்திர ஜெகாரியா கேல் ரத்னா விருதுக்கு தேர்வு.
 • பெங்களூருவில் நடைபெற்ற ஆசிய மகளிர் கூடைப்பந்து கோப்பையின் இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை  வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
 • சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் கிளை ஆறுகளான கிஷன்கங்காவில் 330 மெகாவாட் அளவிலும், ராட்டில் 850 மெகாவாட் அளவிலும் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கு நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தியா அனுமதி பெற்றுள்ளது.
 • நாட்டிலேயே முதன் முதலாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  போக்குவரத்து விதிமீறல் செய்வோர்களுக்கு அபராதப் புள்ளிகள் அளிக்கப்படும் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 • இதன் படி மோட்டார் வாகனச் சட்டப்பிரிவின் கீழ் போக்குவரத்து பலதரப்பட்ட விதிமீறல்களுக்கு ஒன்று முதல் 5 அபராதப் புள்ளிகள் வரை வழங்கப்படும்.
 • 24 மாதங்களில் ஓட்டுநர் ஒருவரின் அபராதப் புள்ளிகள் 12-ஐ எட்டிவிட்டால் அவரது ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும்.
 • ஓராண்டு ரத்திற்குப் பிறகு மீண்டும் 12 அபராதப் புள்ளிகளைப் பெறும் ஓட்டுநர்களின் உரிமம் 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும்.
 • இதே போல் ஒவ்வொரு முறையும் 12 அபராதப் புள்ளிகளைச் சேகரித்துக் கொண்டே வந்தால் ஓட்டுநர் உரிமம் 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும்.
 • இந்த அபராதப் புள்ளிகள் தவிர அபராதத் தொகையும் வசூலிக்கப்படும். உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகு சட்ட விரோதமாக வண்டியை ஓட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டு அவர் 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவதற்கும் இந்த விதிமுறையில் வழியுள்ளது.
 • பட்டாசு தயாரிப்பில் ஆர்சனிக், ஆன்டிமோனி, பாதரசம், காரீயம் , லித்தியம்  உள்ளிட்ட   5 ரசாயனங்களை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.( Arsenic, Antimony, Mercury, Lead, Lithium )
 • காவிரியில் கழிவுநீர் கலப்பது பற்றி ஆராய மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி R.M. பரத்வாஜ் தலைமையில் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 • இக்குழுவில் தமிழக அரசின் சார்பில் S.செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக்
 • 2020  - டோக்கியோ ( ஜப்பான் ) 
 • 2024  -  பாரிஸ் ( பிரான்ஸ் ) 
 • 2028  -  லாஸ் ஏஞ்செல்ஸ் ( அமெரிக்கா )
 • ப்ளூம்பெர்க் ஆசிய பணக்காரர் பட்டியல் அடிப்படையில் ஆசிய அளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உருவாகியுள்ளார்.
 • கனரா வங்கி முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வங்கி கிளையை பெங்களூவில் துவக்கியுள்ளது. இதற்கு #CANDI என பெயரிட்டுள்ளது.
 • கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் “ஹோமுஸ் 2” என்ற சக்தி வாய்ந்த ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ள நாடு?
 • ஈரான்...
 • பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு
 • டெங்கு காய்ச்சலை தடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் புதிதாக கண்டுபிடித்துள்ள பாக்டீரியாவின் பெயர்? உல்பேசியா
 • ஆந்திர அரசின் சிறந்த இசையமைப்பாளர் கான "நந்தி விருதை "பெற்ற தமிழக இசையமைப்பாளர்? இளையராஜா
தடகளத்தில் இருந்து வெண்கலத்துடன் விடைபெற்றார் உசைன் போல்ட்
 • 16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வெள்ளிக்கிழமையுடன் நடந்து முடிந்தது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப்போட்டியில் உலகின் அதிவேக மனிதர் மற்றும் மின்னல் வீரர் என்றழைக்கப்படும் உசைன் போல்ட் பங்கேற்றார். மேலும், இதுவே அவரின் பிரியாவிடைப் போட்டியாகவும் அமைந்தது.
 • ஆனால், இந்தப் போட்டியில் ஒரு துரதிருஷ்டம் அரங்கேறியது. ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பும், ஆதரவும் பெற்றிருந்த உசைன் போல்ட் மூன்றாவதாக வந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர். இதில், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி தடை விதிக்கப்பட்டு மீண்டும் பங்கேற்ற அமெரிக்காவின் காட்லின் 9.92 மணித்துளிகளில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
 • சக நாட்டு வீரர் கோல்மேன் 9.94 மணித்துளிகளில் 2-ஆவதாக வந்து வெள்ளியை வசமாக்கினார். கடைசியாக 9.95 மணித்துளிகளில் வெற்றி இலக்கை அடைந்த ஜமைக்காவின் உசைன் போல்ட் வெண்கலம் வென்றார்.
வரி ஏய்ப்பு விவரங்களைப் பகிர்ந்துகொள்ள இந்தியச் சட்டங்கள் போதுமானவை: ஸ்விஸ் அரசு
 • வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்வதற்குத் தேவையான அளவுக்கு இந்தியாவின் சட்டங்கள் வலிமையாக இருப்பதாக ஸ்விட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
 • இந்தியர்களால் ஸ்விஸ் வங்கிகளில் இயக்கப்படும் வங்கிக் கணக்குகளிலும், ஸ்விட்சர்லாந்து நாட்டவர்களால் இந்தியாவில் இயக்கப்படும் வங்கிக் கணக்குகளிலும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டால், அந்த விவரங்களை உடனுக்குடன் தன்னிச்சையாகப் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.அந்த ஒப்பந்ததுக்கு, ஸ்விட்சர்லாந்தின் தலைமை அதிகார அமைப்பான மத்தியக் கவுன்சில் கடந்த ஜூன் மாதம் சட்ட அங்கீகாரம் வழங்கியது.
 • இந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், இந்த முடிவு குறித்து தனது அரசிதழில் ஸ்விஸ் அரசு விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரி ஏய்ப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ளலாம்.
 • அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்குத் தேவையான அளவுக்கு இந்தியாவின் தகவல் பாதுகாப்பு மற்றும் ரகசியக் காப்புச் சட்டங்கள் வலுவாக உள்ளன. தகவல்களைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளவதற்குத் தகுதி வாய்ந்த சட்டப் பாதுகாப்பு கொண்ட நாடாக அமெரிக்காவின் வரி விதிப்புத் துறை இந்தியாவை அங்கீகரித்துள்ளது. எனவே, அந்த நாட்டுடன் தன்னிச்சையான தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை.
 • அந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய சந்தையில், குறிப்பாக மறுகாப்பீட்டுத் துறை மற்றும் பிற நிதிச் சேவைத் துறைகளில் ஸ்விட்சர்லாந்து நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அரசிதழில் ஸ்விஸ் அரசு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுக்கும், ஸ்விட்சர்லாந்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு (2018) அமலுக்கு வந்து, 2019}ஆம் ஆண்டு முதல் தகவல் பரிமாற்றங்கள் தொடங்கும்.
 • இந்தியாவில் சட்டவிரேதமாக ஈட்டப்பட்ட பெருமளவு கருப்புப் பணம், ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
தந்தத்தால் வடிவமைக்கப்பட்ட எலும்புக் கூட்டை பயன்படுத்தி மருத்துவம் பயின்ற திருவிதாங்கூர் அரசர்!
 • திருவிதாங்கூர் அரசர் ஒருவர், யானைத் தந்தத்தால் வடிவமைக்கப்பட்ட மனித உடல் எலும்புக் கூட்டைப் பயன்படுத்தி மருத்துவம் பயின்றுள்ளார். இந்தச் சம்பவம், கேரள மாநிலத்தில், கடந்த 1850களில் நடைபெற்றுள்ளது.
 • திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட அரசர் ஸ்வாதி திருநாளின் சகோதரரான உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, சிறு வயது முதலே ஐரோப்பிய உடைகள், நாகரிகம், பொழுதுபோக்கு, மருத்துவ சிகிச்சை முறைகள் ஆகியவற்றில் தனியாத ஆர்வம் கொண்டிருந்தார்.
 • வளர்ந்து இளைஞரான பிறகு, அவர் ஆங்கில மருத்துவம் பயில விரும்பினார். மருத்துவம் பயின்றால் மனித உடல் மாதிரிகளை அல்லது இறந்தவர்களின் உடல்களைத் தொட நேரிடும்.
 • ஆனால், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இறந்தவர்களின் உடலைத் தொடக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது.தனக்கு வந்த சோதனையை தகர்ப்பதற்கு, அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
 • கைவினைக் கலைஞர் ஒருவரிடம், யானைத் தந்தத்தைக் கொண்டு மனித உடல் எலும்புக் கூடு மாதிரியை வடிவமைக்குமாறு உத்தரம் திருநாள் கூறினார்.அந்தக் கைவினைக் கலைஞரும், சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட மனித உடல் எலும்புக் கூடு மாதிரியை வைத்து யானைத் தந்தத்தால், எலும்புக் கூடு மாதிரியை தத்ரூபமாக வடிவத்தார்.
 • அந்த எலும்புக் கூடு மாதிரியை வைத்து மருத்துவம் பயின்ற அரசர் உத்தரம் திருநாள், பின்னாளில் தனியாக மருத்துவமனை தொடங்கி, மக்களுக்கு சிகிச்சை அளித்தார். சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சைகளும் செய்திருக்கிறார்.
 • பிரிட்டன் உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்து மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் இறக்குமதி செய்து மக்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்.
 • அவருக்கு, அப்போதைய உறைவிட மருத்துவர் பிரவுன் என்பவர் மருத்துவம் கற்றுக் கொடுத்திருக்கிறார். மருத்துவர் பிரவுன், பிரிட்டன் சென்றபோது, சுயமாகவே மருத்துவ நிபுணர்கள் எழுதிய நூல்களைக் கொண்டு உத்தரம் திருநாள் மருத்துவம் பயின்றுள்ளார்.
 • அவர், மருத்துவம் பயில்வதற்காக உருவாக்கப்பட்ட அந்த எலும்புக் கூடு, இன்னும் சிதையாமல், திருவனந்தபுரம் விலங்கியல் பூங்கா வளாகத்தில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 • அந்த யானைத் தந்த எலும்புக் கூடு, 1853-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது என்று அருங்காட்சிய நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
 • எனினும், அந்த எலும்புக் கூடு மாதிரியை நுட்பமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைத்த அந்தத் திறமை வாய்ந்த கைவினைக் கலைஞர் யார் என்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது என்றும் அருங்காட்சிய நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
 • அருங்காட்சியத்துக்கு வரும் மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும், அந்த எலும்புக் கூட்டின் நேர்த்தியான, துல்லியமான வடிவமைப்புக் கண்டு வியந்து போகிறார்கள் என்று அந்த அருங்காட்சியக நிர்வாகி ஒருவர் கூறினார்.
வெங்கய்ய நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 • துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வருகிற 10-ந் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து நாட்டின் 13-ஆவது துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. 
 • இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெங்கய்ய நாயுடு 516 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
 • தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெங்கய்ய நாயுடு வெற்றிபெற்றதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில், நாயுடுவுடன் பாஜக அரசாங்கத்தில் இணைந்து பணியாற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

11 லட்சம் போலி 'பான் கார்டு' முடக்கம்

 • போலியான மற்றும் மோசடி பெயரில் வாங்கப்பட்ட 11.44 லட்சம், 'பான் கார்டு' எனப்படும் வருமான வரித் துறை நிரந்தர எண் அட்டையை மத்திய அரசு முடக்கியுள்ளது.
 • பான் கார்டு வாங்குவதற்கு ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதை கட்டாயமாக்கி, மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. பலர், போலி பெயர்களில், போலியான முகவரியில், பான் கார்டு வாங்குவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது.
 • இந்நிலையில் ஒருவர் பெயரிலேயே, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள், போலி பெயர் மற்றும் முகவரி கொடுத்து வாங்கிய பான் கார்டு உள்ளிட்ட மோசடி கார்டுகளை மத்திய அரசு முடக்கி வருகிறது. அதன்படி, நாடு முழுவதும், 11.44 லட்சம் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 • இந்நிலையில், நம் பான் கார்டு செயலில் உள்ளதா என்பதை, மிகவும் சுலபமாக தெரிந்து கொள்ளும் வசதியை, வருமான வரித் துறை செய்துள்ளது. இதற்காக, வருமான வரித்துறையின், http://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் சென்று, இந்த தகவலை சரிபார்த்து கொள்ள முடியும்.
 • வருமான வரித் துறையின் இணையதளத்தில், 'சர்வீசஸ்' என்ற தலைப்பின் கீழ், 'நோ யுவர் பான்' என்பதற்குள் நுழைய வேண்டும். அங்கு கேட்கப்படும், பெயர், முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் கேட்கப்படும். அதைத் தொடர்ந்து அலைபேசிக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஒரு ரகசிய எண் வரும். அதைப் பதிவு செய்தால், நம் பான் கார்டு செயலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
 • மத்திய அரசின் புள்ளிவிபரங்களின்படி 29 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 6.2 கோடி பேர், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். நாடு முழுவதும் 5.2 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்கின்றனர்.

டிகிரி முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.51,000 நிதி: மத்திய அரசு

 • பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 • முஸ்லிம் சமுதாயத்தில், கல்லுாரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இதற்காக, அவர்களது பெற்றோரை ஊக்குவிக்கும் வகையிலும், பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 • இது குறித்து, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படும், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர், ஷாகிர் ஹுசைன் அன்சாரி கூறியதாவது: சிறுபான்மையினர் விவகார அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பை முடிக்கும் முஸ்லிம் மாணவியருக்கு, 10 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 முடிக்கும் மாணவியருக்கு, 12 ஆயிரம் ரூபாயும், உதவித் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • இந்த திட்டத்தில், உதவித் தொகை பெற்ற மாணவியர், பட்டப்படிப்பை முடித்ததும், அவர்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். தற்போது, இத்திட்டத்திற்கென தனி இணையதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில், இந்த திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன், திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிறைவடைந்தது அமர்நாத் யாத்திரை

 • ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கும் இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை நேற்றுடன்(ஆக.,7) முடிவடைந்தது. 
 • இந்த ஆண்டு 2.6 லட்சம் பக்தர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். அமர்நாத் யாத்ரிகர்கள் சென்ற பஸ் மீது, சமீபத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் எட்டு பக்தர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

உறியடி விழாவுக்கு கட்டுப்பாடு; மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு

 • கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும், 'தஹி ஹண்டி' எனப்படும் உறியடித் திருவிழாவின்போது, ஒருவர் மீது ஒருவர் ஏறி, உறியை உடைப்பதற்கு உயர கட்டுப்பாடு ஏதும் இல்லை. அதே நேரத்தில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கு அனுமதி கிடையாது' என, மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
உறியடித் திருவிழா
 • கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில், உறியடித் திருவிழா மிகவும் கோலாகலமாக நடக்கும். அப்போது, ஒருவர் மீது ஒருவர் ஏறி, உயரத்தில் இருக்கும் உறியை உடைக்க வேண்டும். 
 • இது தொடர்பான வழக்கில், மும்பை ஐகோர்ட், 2014ல், ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில், 18 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்த உறியடியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதிகபட்சம், 20 அடி உயரத்துக்கு மட்டுமே, ஒருவர் மீது ஒருவர் ஏறிச் செல்லும், மனித பிரமிடை உருவாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
 • இதை எதிர்த்து, மஹாராஷ்டிர அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி, மும்பை ஐகோர்டுக்கு உத்தரவிட்டது. 
அறிவிப்பு:
 • இந்த வழக்கு, ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசின் சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா வாதிட்டதாவது: உறியடித் திருவிழாவை, வீரதீர விளையாட்டாக மஹாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. 
 • போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விளையாட்டில், 14 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிக்க மாட்டோம். இந்த விளையாட்டுக்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர்வாதிட்டார்.
 • அதையடுத்து, ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது: இந்த விவகாரம், மாநில சட்டசபையின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதனால், இதில் எந்தத் தீர்ப்பையும் அளிக்க விரும்பவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு பிறப்பித்துள்ளதால், அதை நாங்கள் ஏற்கிறோம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.யூ.வி கார்களுக்கு செஸ் வரியை உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரை

 • எஸ்.யூ.வி மற்றும் சொகுசு கார்களுக்கான செஸ் வரியை உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரை அளித்துள்ளது.
 • ஜி.எஸ்.டி வரி வதிப்பு முறை கடந்த ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இந்த வரியின் கீழ் கார்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எஸ்.யூ.வி கார்களுக்கு செஸ் என்னும் கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 • கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எஸ்.யூவி, சொகுசு ரக கார்களின் வரியை தற்போதய 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜி.எஸ்.டி. 28 சதவீதம், கூடுதல் வரி 15 சதவீதம் என நடுத்தர ரக கார்களுக்கும், சொகுசு கார்களுக்கும் 43 சதவீத வரி செலுத்த வேண்டியது உள்ளது. இதனால், இந்த வகை கார்களின் விலை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. 

தமிழக ஸ்மார்ட்சிட்டி:ரூ.868 கோடி நிதி ஒதுக்கீடு

 • தமிழகத்தில் மதுரை, தஞ்சை, சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிக்களாக்க 868 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 2020-ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 
 • சென்னை ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி சார்பில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை பயிற்சி முகாம் தொடக்கவிழா மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த விழாவில் 24 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மதுரையில் கலப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு அமைப்பு

 • மதுரை நகரில் கலப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாப்பு ஐகோர்ட் கிளை உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.கலப்பு திருமணம் செய்தவர்கள் ஆணவ கொலை செய்யப்படுவதை தடுப்பதற்காக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் பேரில் இந்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 
 • கலப்பு திருமணம் செய்ததன் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் புகார்களை அளிக்க 0452 - 2346302 என்ற தொலைப்பேசி அழைப்பு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாநகர் காவல் துணை ஆணையர், சமூகநல அதிகாரி, ஆதிதிராவிட நல அதிகாரி ஆகியோர் மேற்பார்வையில் இந்த சிறப்பு தனிப்பிரிவு செயல்படும் எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மோசமாகி கொண்டிருக்கும் ஆறுகள் - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை
 • தமிழகத்தில் 600 கி.மீ. நீளத்துக்கு அதிகமாக ஆறு மாசுபட்டுள்ளன என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது.
 • நாட்டில் ஆறுகளின் மாசுபாடு குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் பதில் அளித்தார். அவர் பேசியதாவது-
 • மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து, நாட்டில் உள்ள ஆறுகளின் நீரின் தரம் ஆகியவற்றை கண்காணித்து வருகிறது. இந்த கண்காணிப்பு தேசிய நீர் தரம் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
 • மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் 150 ஆறுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 275 ஆறுகளில் 302 பாதைகள் மாசுபட்டுள்ளன. மேலும் ஆறுகள் மாசுபடுவதை கண்காணிக்கவும், நீரின் தரத்தை பராமரிக்கவும் கடந்த 2010ம் ஆண்டு 1085 கண்காணிப்பு நிலையங்கள் அமைத்தது. அதை 2015ம் ஆண்டு 1275 ஆக உயர்த்தியது.
 • தமிழகத்தைப் பொருத்தவரை பவானி, காவேரி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, திருமணிமுத்தாறு, வஷிஸ்டா ஆகிய ஆறுகள் மிக மோசமாக மாசுபட்டுள்ளன. இந்த ஆறுகள் சேலம், ேவலூர், ஈரோடு, நாமக்கல், மற்றும் நெல்லை மாவட்டங்களில் பாய்கின்றன. தமிழகத்தில் 7 முக்கியநதிகளும், அதன் கிளைநதிகள் 100க்கும்அதிகமாக இருக்கின்றன.
 • மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து ஆறு மாசுபடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகின்றன. மாசுபடுத்தும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது மாசுக்கட்டுப்பாடு தடுப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

குஜராத் ராஜ்யசபா தேர்தல்: காங்கிரசின் அஹமது படேல் வெற்றி

 • குஜராத் மாநில ராஜ்யசபா தேர்தலில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே காங்கிரசின் அஹமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி மற்ற இரு இடங்களில் வெற்றி பெற்றனர். வியூகங்கள்: குஜராத் மாநிலத்தில் 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜ.,சார்பில் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி ஆகியோரின் வெற்றி உறுதியானது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் காங்.,சார்பில் அஹமது படேல், பா.ஜ., சார்பில் காங்., கட்சியிலிருந்து பா.ஜ.,வுக்கு தாவிய, பல்வந்சிங் நிறுத்தப்பட்டார். இதனையடுத்து அஹமது படேலை தோற்கடிக்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டது. ‛கூவத்தூர் ' பாணி: முன்னதாக காங்., கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.,விற்கு வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகியது. இதையடுத்து குஜராத் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். ‛கூவத்தூர் ' பாணியில் நடந்த இந்த நிகழ்வில் குதிரை பேரம் நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த தனியார் விடுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையும் நடந்தினர்.
 • கோரிக்கையும்.. எதிர்ப்பும்.. இந்நிலையில் நேற்று (ஆக. 8) நடைபெற்ற தேர்தலின் போது காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டு சீட்டை பா.ஜ.,வினருக்கு காண்பித்ததாக புகார் எழுந்தத
 • இதனையடுத்து 2 எம்.எல்,ஏக்களின் ஓட்டுகளை செல்லாததாக அறிவிக்க காங்.,தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. இதற்கு பா.ஜ., சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓட்டு எண்ணும் பணி நீண்ட நேரமாக காலதாமதம் ஏற்பட்டது. செல்லாது: தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஓட்டுபதிவின் வீடியோவை ஆய்வு செய்தது.
 • இதனையடுத்து காங்கிரஸ் 2 எம்.எல்.ஏக்களின் ஓட்டுகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் ஒட்டு எண்ணும் பணி நள்ளிரவு தாண்டிய பின்னர் துவங்கியது. அகமது படேல் வெற்றி: முடிவில் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி ராணி ஆகியோர் தலா 46 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர். இழுபறியாக இருந்த 3 வது சீட்டிற்கான போட்டியில், வெற்றிக்கு தேவையான 44 ஓட்டுகளை பெற்று காங்., கட்சியின் அஹமது படேல் வெற்றி பெற்றார்.
 • அவரை எதிர்த்து போட்டியிட்ட பல்வந்த் சிங் 38 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இந்த தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமித்ஷா, ஸ்மிரிதி ராணி, மற்றும் காங்., சார்பில் போட்டியிட்ட அஹமதுபடேல் ஆகியோர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது. என தலைவர்கள் கருத்து: வெற்றி பெற்றது குறித்து அஹமது படேல் தனது டுவிட்டரில் ‛‛வாய்மையே வென்றது'' என பதிவிட்டுள்ளார். அஹமது படேலின் வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ம் ஆண்டு: நாடாளுமன்றத்தில் கூட்டுக்கூட்டம்

 • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ம் ஆண்டையொட்டி நாடாளுமன்றத்தில் கூட்டுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்திய பின் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 
10 சதவிகிதம் கூடுதல் செஸ் - எஸ்யூவிகளின் விலை உயருகிறது

 • 4 மீட்டருக்கும் அதிக நீளத்தில் இருக்கும் எஸ்யூவி மற்றும் செடான்கள் மீது, இதுவரை 43% வரி (28% GST + 15% Cess) விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசாங்கத்தின் பரிந்துரைக்கு ஏற்ப, 53% வரி ( (28% GST + 25% Cess) என மாற்றியமைக்கப்பட உள்ளது. ஆகவே, செஸ் 10% சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு, லக்ஸூரி கார் தயாரிப்பாளர்களான ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 • இதன் எதிரொலியாக, 4 மீட்டருக்கும் அதிக நீளத்தில் இருக்கும் எஸ்யூவி மற்றும் செடான்களின் விற்பனை, விலை உயர்வால் சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு, சில நாள்களில் வெளிவரும் எனத் தெரிகிறது. 
 • ஜூலை 1, 2017 முதலாக, நாடெங்கும் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரியினால், 4 மீட்டர் நீளத்துக்கு உட்பட்ட ஹேட்ச்பேக், காம்பேக்ட் செடான் மற்றும் எஸ்யூவிகளின் விலைகள் குறைந்தது கவனிக்கத்தக்கது. மேலும், எலெக்ட்ரிக் கார்களின் மீது 12% வரி மட்டுமே விதிக்கப்பட்டாலும், ஹைபிரிட் கார்களின் மீது 43% வரி விதிக்கப்பட்டது அறிந்ததே.
கழிவறை இல்லாவிட்டால் ரேஷன் பொருள்கள் இல்லை- புதுச்சேரி அரசு அதிரடி
 • புதுச்சேரி அரசின் உள்ளாட்சித்துறை செயலர் ஜவஹர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கழிப்பறை கட்ட வசதியில்லாத புதுச்சேரி மக்களுக்குக் கழிப்பறை கட்டிக்கொள்ள 20 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிதிதான் நாட்டில் வழங்கப்படும் நிதிகளிலேயே உயர்வானது. 
 • ஆனால், இந்த நிதியைப் பெற்ற பயனாளிகளின் செயலின்மையால், அகில இந்திய அளவில் பொது சுகாதாரம் மற்றும் தூய்மையான நகரங்களின் தரவரிசை குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புதுச்சேரி நகராட்சி 189-வது இடத்திலும் உழவர்கரை நகராட்சி 206-வது இடத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறது. அதனால், புதுச்சேரி அரசின் கழிவறை கட்டும் நிதியைப் பெற்றவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் கழிவறைகளைக் கட்டத் தவறினால், அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
 • இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கழிவறைகளைக் கட்டி முடிக்கவில்லை என்றால் கட்டி முடிக்கப்படும் வரை அவர்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் இலவச உணவுப் பொருள்கள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசின் அனைத்துத் திட்டங்களும் நிறுத்தப்படும். கழிவறைகளைக் கட்டி முடித்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்குத் தகுதியுடமை இருப்பின் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் அவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.
2018-19-ம் ஆண்டு முதல் உருது மொழியிலும் நீட் தேர்வு வினாத்தாள்: மத்திய அரசு தகவல்
 • 2018-19-ம் ஆண்டு முதல் உருது மொழியிலும் நீட் தேர்வு வினாத்தாள் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உருது மொழியிலும் நீட் வினாத்தாளை வெளியிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
முரசொலி பவளவிழா- சென்னையில் இன்று கொண்டாட்டம்- நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு
 • திமுகவின் அதிகாரப்பூர்வ அரசியல் நாளிதழ் முரசொலி. அதன் பவளவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதில் முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.

 • கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காட்சி அரங்கத்தை தி ஹிந்து குழுமத்தலைவர் என்.ராம் இன்று காலை 10 மணிக்குத் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக வீரமணி தலைமை வகிக்கிறார்.

 • இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பவளவிழா நிகழ்வில், கவிஞர் வைரமுத்து, நடிகர் கமல்ஹாசன், தி ஹிந்து குழுமத் தலைவர் என்.ராம், தினத்தந்தி குழும அதிபர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், தினமணி நாளிதழ் ஆசிரியர் கி.வைத்தியநாதன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், டெக்கான் கிரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், ஆனந்த விகடன் குழும மேலாண் இயக்குனர் பா.சீனிவாசன், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

 • விழாவில், முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் வரவேற்புரை ஆற்றுகிறார். முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் நன்றி கூறுகிறார்.

 • முரசொலி பவளவிழா கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.சி.எம்.ஏ. விளையாட்டு மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு பேராசியர் க.அன்பழகன் தலைமை வகிக்கிறார்.

 • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர். நல்லக்கண்ணு பவள விழா மலரை வெளியிட, முரசொலி முதல் மேலாளர் சி.டி. தட்சிணா மூர்த்தி பெறுகிறார்.

 • திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்வுகள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தெலுங்கானாவில் வாகன பதிவிற்கு இனி ஆதார் கட்டாயம்
 • இலவச சமையல் காஸ் மானியம், வருமான வரி தாக்கல், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு உள்ளிட்ட விவகாரங்களுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகின்றது. இறப்பு சான்றிதழ் பெறவும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாகன பதிவிற்கு அதன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. 
 • அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெலுங்கானா போக்குவரத்து துறை அமைச்சர் மகேந்தர் ரெட்டி இந்த உத்தரவை பிறப்பித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில்(தெலுங்கானா) சுமார் 95 லட்சம் வாகனங்கள் உள்ளது. அதேபோல், பெரிய அளவில் வாகன மாற்றம் நடைபெறுகிறது. வாகனங்கள் பதிவு மற்றும் வேறு ஒருவருக்கு மாற்ற ஆதார் எண்ணை கட்டாயமாக்குங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
பா.ஜ.,வே வெளியேறு இயக்கம்; மம்தா பானர்ஜி துவக்கினார்
 • வரும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் வகையில், 'பா.ஜ.,வே வெளியேறு' என்ற இயக்கத்தை துவக்கியுள்ளதாக, திரிணமுல் காங்.,கை சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.சுதந்திர போராட்டத்தின்போது, ஆங்கிலேயரை விரட்ட, 'வெள்ளையனே வெளியேறு' போராட்ட இயக்கம் துவக்கப்பட்டது. 
 • இதன், 75வது தினம், நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அச்சுறுத்தல் : இதையொட்டி, மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'பா.ஜ.,வே வெளியேறு' என்ற இயக்கத்தை, திரிணமுல் காங்., தலைவரும், மாநில முதல்வருமான, மம்தா பானர்ஜி துவக்கினார்.அப்போது, அவர் பேசியதாவது: மத்தியில், பா.ஜ., தலைமையில் நடக்கும் ஆட்சியில், மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. 
 • மதச் சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது; அதை, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வரும், 2019ல் நடக்கும் லோக்சபா தேர்தலில், பிரசார வாசகமாக, 'பா.ஜ.,வே, வெளியேறு' என்பது இருக்கும். இது குறித்து, பிற எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்து, திட்டம் உருவாக்குவோம்.
 • பா.ஜ.,வை எதிர்த்து, ஒருங்கிணைப்புடன் போராடுவோம். முற்றுப்புள்ளி : பா.ஜ.,வின், மதவாத, வெறுப்புணர்வை துாண்டும் அரசியலுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஆட்சியிலிருந்து, பா.ஜ., துாக்கி எறியப்படும் வரை, ஓய மாட்டோம். எத்தனை இடர்கள் ஏற்பட்டாலும், இறுதியில், ஜனநாயகம் வெல்லும்.
 • அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., போன்றவற்றை வைத்து, எங்களை, பா.ஜ., அச்சுறுத்தலாம்; அதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். பீஹார் தலைநகர், பாட்னாவில், இம்மாத இறுதியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் நடத்தும் பேரணியில் பங்கேற்க உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். 'டார்ஜிலிங்கை பிரிக்க சதி!' : மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மேலும் பேசியதாவது: டார்ஜிலிங், தெராய், தோவார்ஸ் ஆகிய பகுதிகள், மேற்கு வங்கத்தின் பெருமைகள்.
 • இவற்றை பிரித்து, மேற்கு வங்கத்தை பிளக்க, பா.ஜ., - மார்க். கம்யூ., கட்சிகள் சதி செய்கின்றன. டார்ஜிலிங் விஷயத்தில், கம்யூனிஸ்ட் தலைவர்கள், இரட்டை வேடம் போடுகின்றனர். டார்ஜிலிங் விவகாரத்தை பொறுத்தவரை, பா.ஜ.,வுக்கும், மார்க் கம்யூ.,வுக்கும், வித்தியாசம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
80 நாடுகளுக்கு சலுகை.. விசா இல்லாமல் இந்தியர்கள் இனி கத்தாருக்கு செல்லலாம்
 • விசா இல்லாமல் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கர்த்தாருக்கு இனி சென்று வர முடியும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 • கத்தாருக்கு செல்ல விரும்பும் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசாவிற்கு இனி விண்ணப்பிக்க வேண்டாம். பணமும் கட்டத் தேவையில்லை. இந்த சலுகையைப் பெற வரையறை எதுவும் கிடையாது. பல முறை பயணம் செய்யும் வகையில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்தச் சலுகைகள் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலையும் அந்நாடு அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் விசா இன்றி கத்தாருக்கு பயணிக்கலாம்.
 • இந்தச் சலுகையைப் பெற விரும்புவோர் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும் வகையிலான பாஸ்போர்ட் மற்றும் நாடு திரும்புவதற்கான டிக்கெட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
 • இதுகுறித்து, கத்தார் சுற்றுலாத்துறை தலைவர் ஹாசன் அல் இப்ராஹிம், கத்தார் இப்போது மிகவும் திறந்தவெளி நாடாகிவிட்டது என்றும் புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பார்க்க பயணிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
 • கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலவச டிரான்சிட் விசாவை கத்தார் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயணிகள் குறைந்தபட்சம் 5 மணி நேரம் முதல் நான்கு நாட்கள் வரை டிரான்சிட் விசாவில் கத்தாரில் இருக்கலாம். இதனைத் தொடர்ந்து தற்போது 80 நாடுகள் விசா இல்லாமல் பயணிக்கும் சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பீம் செயலி விழிப்புணர்வை ஏற்படுத்த மோடி அறிவுரை
 • எல்.இ.டி பல்புகள், பீப் செயலி பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத் வேண்டும் எனபிரதமர் மோடி மாவட்ட கலெக்டர்களுக்குஅறிவுறுத்தி உள்ளார். வீடியோ கான்பரசிங் முறை மூலம் நாடு முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி நடத்திய உரையாடலின் போது இதனை தெரிவித்தார். 
 • மேலும் போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே பல சமயங்களில் திட்டங்கள் தோல்வியடைகின்றன. பீம் செயலின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

சூப்பர் கப்: ரியல் மாட்ரிட் சாம்பியன்
 • ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்புகளின் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சூப்பர் கப் போட்டி நடத்தப்படும். இதில் நடப்பு சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், யூரோப்பா லீக் சாம்பியன் அணிகள் மோதும். ஒவ்வொரு ஆண்டும் சீசன் தொடங்குவதற்கு முன், ஆகஸ்ட் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இந்த சூப்பர் கப் நடக்கும். அந்த வகையில் 2017-ம் ஆண்டுக்கான சூப்பர் கப் போட்டி மெசடோனியாவில் நேற்று நடந்தது. இதில் சாம்பியன்ஸ் லீக் சாம்பியனான ரியல் மாட்ரிட், யூரோப்பா லீக் சாம்பியனான மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின.
 • ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் டேனி கர்வஜல் கொடுத்த பாஸை நேர்த்தியாக இடது கால் மூலம் ஒரே மூச்சில் கோல் அடித்தார் பிரேசிலைச் சேர்ந்த காஸ்மிரோ. ஆனால், இது ஆஃப் சைட் கோல் என மான்செஸ்டர் யுனைடெட் பயிற்சியாளர் ஜோசே மொரினியோ போட்டி முடிந்தபின் குற்றம் சாட்டினார். முதல் பாதியில் ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலை பெற்றது.
 • இரண்டாவது பாதியில், 52-வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸில் புகுந்து விளையாடிய இஸ்கோ, கோல் கீப்பரை ஏமாற்றி ஒரு கோல் அடிக்க, ரியல் மாட்ரிட் 2-0 என முன்னிலை பெற்றது. மான்செஸ்டர் யுனைடெட் தரப்பில் லுகாகு 62-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். யுனைடெட் கிளப்புக்கு வந்தபின் இவர் அடிக்கும் முதல் கோல் இது. ஆனால், அதற்கு முன் அவர் இன்னொரு அருமையான கோல் வாய்ப்பை மிஸ் செய்திருந்தார்.
 • அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சூப்பர் கப்பை வென்றது. அத்துடன் இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
சோழமண்டலக் கலைக் கண்காட்சி - அழகின் அணிவகுப்பு!
 • மனித உணர்வுகளை வெளிப்படுத்த மொழியே உதவுகிறது. ஆனால், `இதுதான் மொழி' எனக் குறிப்பிட்டுச் சொல்ல, இன்றளவும் இயலவில்லை. பல சமயம் வார்த்தை மொழி, சில நேரம் மௌன மொழி. ஒரு பொழுதில் கண்ணீர் மொழி, மறு பொழுதிலோ நாணம் மொழி. ஆனால் இங்கோ, வண்ணங்களும் சிற்பங்களுமே மொழியாகின்றன. சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட் கிராமத்தின் 50-ம் ஆண்டுகால நிறைவு விழா, அதன் வண்ணங்களுக்கு ஏற்ப மிகச் சிறப்பாக நடைபெற்றது. சோழ மண்டலம் ஆர்ட்டிஸ்ட் நிறுவனர் கே.சி.எஸ்.பனிக்கர் மகனான எஸ்.நந்தகோபாலுக்குச் சமர்ப்பணமாக, இந்தக் கலைக் கண்காட்சி ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. ``சோழ மண்டலம் கிராமத்தில் வாழும் கலைஞர்களின் படைப்புகளை, மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதே தங்களது நோக்கம்'' என்பதற்கேற்ப, படைப்புகள் ஒவ்வொன்றும் ஆயிரம் அர்த்தம் பேசுகிறது.
 • உள்ளே நுழைந்தது முதல் தன் ரம்மியமான அழகாலும் மெருகேற்றிய கலை வெளிப்பாட்டாலும் கண்களை நகரவிடாமல் செய்யும் காந்தங்களாக மாறி ஈர்க்கின்றன. கண்ணனின் காதல் லீலைகளை ஓவியமாகக் காண்கையில் நம்மில் பலருக்கும் ஒருமுறை காதலித்தே ஆக வேண்டும் என்ற ஏக்கம் உண்டாகிறது. சுவரில் தொங்கும் ஓவியத்தின் பேசும் மொழியை முழுதாக உணர வேண்டும் என ஏக்கம் உண்டாகிறது.
 • 1970-ம் ஆண்டில் தேசிய விருதும், 1978-ம் ஆண்டில் லலித்கலா அகாடமி விருதும் பெற்றுள்ளார் நந்தகோபால். தன் தந்தையின் அஸ்திவாரத்தில் வெற்றிகரமாகக் கோட்டை எழுப்பியவர். இவரின் கைவண்ணத்தில் எழுந்த பல சிற்பங்கள், நாம் கற்றது கையளவே என்பதை மறுபடியும் நினைவூட்டுகின்றன. இந்த வருடம் ஏப்ரல் 14-ம் தேதி அன்று தன் கலையை விண்ணுலகுக்குக் காட்ட விடைபெற்றுகொண்டார். ``இவர் நினைவாக ஒவ்வொரு வருடமும் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதற்கு இது ஒரு முயற்சியே!'' என டிம்பிள் கேலரி குழுமத்தினர் கூறியுள்ளார்.
 • நூலிழை முதல் கடவுள் வரை கலை புகுந்து சந்தம் நிறைத்து ஆயிரம் எண்ண அலைகள் பின்னி இதயத்தில் பொறிக்கப்பட்டு ஒப்புயர்வற்று விளங்கும் அந்தக் கலை வெளிப்பாட்டை காண்கையில் இந்த உலகில் இருக்கும் தேவலோகத்தைக் காண தவறிவிட்டோம் என்பது வெளிச்சம். ​
அதிரடி சபதம் பூண்டார் மோடி..! "செய் அல்லது செத்துமடி"-உருவாகிறது புதிய எழுச்சி..!
 • சுதந்திரதினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்காக, மக்களவையில் எழுச்சிமிக்க உரையை நிகழ்த்தியுள்ளார் மோடி.
 • அப்போது, சுதந்திர போராட்டத்திற்காக உருவான “வெள்ளையனே வெளியேறுஇயக்கம்” ஒட்டு மொத்த இந்தியாவையும் வலிமை கொள்ள செய்தது என்றும், 1942 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கமானது, இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது என்பதை நினைவு கூர்ந்தார்.
 • தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட சமயத்தில், மகாத்மா காந்தியின் செய் அல்லது செத்து மடி என்ற கூற்றை மக்கள் பின்பற்றத் தொடங்கினர்.மக்களும் பின்பற்றி வெற்றி கண்டனர்.
 • அதே போன்று, தற்போது நம் நாட்டில் ஊழல், வறுமை, ஊட்டச்சத்து குறைப்பாடு, முழுமையான கல்வி கற்க இயலாமை என அனைத்தும், மாபெரும் சவாலாக உள்ளது. இதனை வென்றெடுக்கும் பொருட்டு, 1942 முதல்1947 ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் நடைப்பெற்ற அதே எழுச்சியை, மீண்டும் உருவாக்க சபதம் ஏற்போம் என பிரதமர் மோடி உறுதிபூண்டுள்ளார்.
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா
 • கடந்த ஐந்து நாட்களில் இரு பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்ததை அடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறார்.
 • பிரதமரை சந்தித்து தனது ராஜினாமா முடிவை தெரிவித்ததாக சுரேஷ் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இரு ரயில் விபத்துகளுக்கும் முழுமையாக தானே பொறுப்பேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ள அவர், துரதிருஷ்டவசமான இந்த விபத்துக்கள், மற்றும் உயிரிழப்புகள் தன்னை மிகவும் வேதனை அடைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 • முன்னதாக இன்று காலை ரயில்வே வாரியத்தலைவர் ஏ.கே.மிட்டல் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே முதன்முறையாக யானைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை... சத்தியமங்கலத்தில் அறிமுகம்

 • வனப்பகுதிகளில் காயமடைந்த யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளைக் காப்பாற்றி அதற்குத் தேவையான சிகிச்சை அளிப்பதற்கும், யானைகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்கும் மருத்துவ வசதி கொண்ட பிரத்யேக ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 • ' ரூ. 20 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ். யானைக்காக இந்தியாவில் முதன்முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இந்த ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 • இந்த ஆம்புலன்ஸில் யானைகளை ஏற்றுவது மிகவும் எளிது. ஹைட்ராலிக் முறையில் டிரக்கை கீழே இறக்கி வைத்து மோட்டார் உதவியுடன் கயிறு கட்டி யானையை எளிதில் உள்ளே ஏற்றிவிடலாம். இதில், 10 டன் வரை உள்ள யானைகளை ஏற்ற முடியும். மேல்தளத்தில் பாதுகாப்பு வலை, 5 அடி உயரத்தில் நிறுத்தும் வசதி, பக்கவாட்டுக் கதவுகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 • யானைகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. இந்த ஆம்புலன்ஸை அடர்ந்த வனத்தில் நிறுத்தி வைத்து, வனத் துறையினர் அதிலிருந்தபடியே விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம். சில கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு, வரும் செப்டம்பர் மாதம் வனத் துறையினரின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்' என்று தெரிவித்தனர்.

குமரியில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் நடத்திய சஜாக் ஆபரேஷன்

 • இந்தநிலையில் இன்று நாடு முழுவதும் சஜாக் ஆபரேஷன் என்ற பெயரில் கடல் பகுதிகளை அதிநவீனப் படகுகள் மூலம் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தியாவின் தென் முனையாக கன்னியாகுமரி மாவட்டம் இருக்கிறது. 
 • கடல் சார்ந்த சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும் ஆயுதங்கள் மற்றும் போதப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் சஜாக் ஆப்ரேஷன் கடலோரப் பாதுகாப்பு படையால் நடத்தப்பட்டு வருகிறது. 
 • அதன்படி இன்று கன்னியாகுமரியில் சஜாக் ஆபரேஷன் நடந்தது. சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீஸார் அதிநவீன ரோந்து படகில் சஜாக் ஆபரேஷனை நடத்தினார்கள். 
 • அவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் கூடங்குளம் வரையிலான பகுதி வரை கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களிடமும் அடையாள அட்டை சோதனையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 •  சந்தேகப்படும்படியாக எதாவது படகுகள் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். இதுபோல் கடலோர சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோர பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனால், குமரி மாவட்டத்தின் மீனவக் கிராமங்களும் பதற்றமாக உள்ளன.
அதிகபட்சமாக 31.84 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் சாதனை
 • தற்போது அதிகபட்சமாக 31.84 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் வரலாற்று சாதனை படைத்துள்ளது. வரும் நாட்களில் கொள்முதல் மேலும் அதிகரிக்கும் என நிர்வாக இயக்குநர்ங சி.காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதால் இந்த வரலாற்று சாதனையை எட்டியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். 
அதிர்ச்சி அறிக்கை : இந்தியாவில் அதிகரித்து வரும் வேலை இழப்பு.
 • இந்திய பொருளாதார மையம் சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவில் ஜனவரி 2017 முதல் ஏப்ரல் 2017 வரை வேலை இழப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
 • சமீப காலமாக வேலை இழப்பு என்பது பல துறைகளிலும் அதிகரித்து வருகிறது. பா ஜ க அரசு பதவியேற்கும் போது ஐந்தாண்டுகளில் சுமார் 2 கோடி புது வேலைவாய்ப்புக்கள் உண்டாக்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் நிஜத்தில் வேலைவாய்ப்புக்கள் விவசாயம், கட்டுமானம் போன்ற இடங்களில் கூலித் தொழிலாளர்களுக்கு மட்டுமே அதிகரித்துள்ளது. மற்ற துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்பும் குறைந்து பலர் வேலை இழந்துள்ளனர்.
 • கடந்த ஜனவரி 2017 முதல் ஏப்ரல் 2017 வரை 40.47 கோடி வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகும் என கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் 21% மட்டுமே வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 8.6 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இது அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பு ஆகும்.
 • இது போன்ற வேலை இழப்புகள் ஊழியர்களை தங்கள் தகுதிக்கு குறைவான வேலைகளை தேர்ந்தெடுக்க வைக்கின்றது. வெகு காலம் வேலையின்றி இருப்பதை விட கிடைத்த வேலை பரவாயில்லை என்னும் எண்ணத்தை தோற்றுவிக்கிறது. இதனால் அவர்களால் முழு மனதுடன் தங்கள் பணியில் ஈடுபட முடியாமல் போய் அவர்களின் முழுத்திறமையும் வெளிப்படுவதில்லை.
மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது
 • ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு 2017-ம் ஆண்டுக்கான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 • மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்துவோருக்கு ராஜுவ்காந்தி கேல்ரத்னா விருதும், தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோருக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்படுகிறது. சிறந்த பயிற்சியாளருக்கு துரோணாசாரியார் விருதும், விளையாட்டு துறைக்கு வாழ்நாள் சேவை செய்தவர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.
 • ராஜிவ்காந்தி கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுக்குரியோரை, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.கே.தாகுர் தலைமையிலான குழு தேர்ந்தெடுத்தது. துரோணாசாரியார் மற்றும் தயான்சந்த் விருதுக்குரியவர்களை, முன்னாள் பாட்மின்டன் வீரர் பி. கோபிசந்த் தலைமையிலான குழு தேர்ந்தெடுத்து.
 • இந்த ஆண்டுக்கான விருதுகளில், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளனர். அதில், தமிழகத்தைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன், அர்ஜூனா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில், தங்கம் வென்று அசத்தியவர் மாரியப்பன்.
 • சமீபத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலக்கிய ஹர்மன்பிரீத் கவுர் உள்பட, 17 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதியில், ஆஸ்திரேலியாவுககு எதிராக, 115 பந்துகளில், 171 அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ஹர்மன்பிரீத் கவுர்.
 • பாரா ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறியும் பிரிவில் தங்கம் வென்ற, தேவேந்திர ஜாஜாரியா, ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் ஆகியோர், ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 • புபேந்திர சிங் (தடகளம்), சையத் ஷாகித் ஹகீம் (கால்பந்து), சுமராய் டீடே (ஹாக்கி) ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனைக்கான தயான்சந்த் விருது, வழங்கப்பட உள்ளது..
 • சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாசாரியார் விருது ஏழு பேருக்கு வழங்கப்பட உள்ளது. மறைந்த டாக்டர் ஆர். காந்தி (தடகளம்), ஹீரா நந்த் கடாரியா (கபடி), சி.எஸ்.எஸ்.வி. பிரசாத் (பாட்மின்டன்), பிரிஜ் பூஷண் மொகந்தி (குத்துச்சண்டை), பி.ஏ. ரபேல் (ஹாக்கி), சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கி சுடுதல்), ரோஷன் லால் (மல்யுத்தம்) ஆகியோர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 • தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, வரும், 29ம் தேதி நடக்கும் விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், விருதுகளை வழங்குகிறார்.
 • பதக்கத்துடன், ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதுடன், ரூ.7.5 லட்சம், துரோணாசாரியார், தயான்சந்த் மற்றும் அர்ஜூனா விருதுடன், ரூ 5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.
விருது பெறுவோர் பட்டியல்:

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது 
 1. தேவேந்திர ஜாஜாரியா (பாரா தடகளம்)
 2. சர்தார் சிங் (ஹாக்கி)
 3. தயான்சந்த் விருது-
 4. புபேந்திர சிங் (தடகளம்)
 5. சையத் ஷாகித் ஹகீம் (கால்பந்து)
 6. சுமராய் டீடே (ஹாக்கி)
துரோணாசாரியார் விருது
 1. மறைந்த டாக்டர் ஆர். காந்தி (தடகளம்)
 2. ஹீரா நந்த் கடாரியா (கபடி)
 3. சி.எஸ்.எஸ்.வி. பிரசாத் (பாட்மின்டன்)
 4. பிரிஜ் பூஷண் மொகந்தி (குத்துச்சண்டை)
 5. பி.ஏ. ரபேல் (ஹாக்கி)
 6. சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கி சுடுதல்)
 7. ரோஷன் லால் (மல்யுத்தம்)
அர்ஜூனா விருது
 1. வி.ஜே. சுரேகா (வில்வித்தை)
 2. குஷ்பிர் கவுர் (தடகளம்)
 3. அரோக்கிய ராஜிவ் (தடகளம்)
 4. பிரசாந்தி சிங் (கூடைப்பந்து)
 5. லைஷ்ராம் தேபேந்த்ரோ சிங் (குத்துச்சண்டை)
 6. சதேஸ்வர் புஜாரா (கிரிக்கெட்)
 7. ஹர்மன்பிரீத் கவுர் (கிரிக்கெட்)
 8. ஒய்னம் பெம்பெம் தேவி (கால்பந்து)
 9. எஸ்.எஸ்.பி., சவ்ராசியா (கோல்ப்)
 10. எஸ்.வி. சுனில் (ஹாக்கி)
 11. ஜஸ்விர் சிங் (கபடி)
 12. பி..என். பிரகாஷ் (துப்பாக்கிச் சுடுதல்)
 13. ஓ. அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்)
 14. சாகேத் மைனேனி (டென்னிஸ்)
 15. சத்யவிரத காடியான்(மல்யுத்தம்)
 16. மாரியப்பன் (பாரா தடகளம்)
 17. வருன் சிங் பட்டி (பாரா தடகளம்)
ஒரே நிமிடத்தில் 5,366 கத்தரி செடிகளை நட்டு கின்னஸ் சாதனை முயற்சி: நடிகர் ஆரி ஏற்பாடு
 • ஒரே நிமிடத்தில் 5,366 கத்தரிச் செடிகளை நடும் கின்னஸ் சாதனை முயற்சி விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 • திரைப்பட நடிகர் ஆரி-யின் ஏற்பாட்டின் பேரில், நாட்டு விதைகளின் மகத்துவத்தை உணர்த்தவும்,கின்னஸ் சாதனை முயற்சியாகவும் 'மாறுவோம், மாற்றுவோம்' அறக்கட்டளை சார்பில் 'நானும் ஒரு விவசாயி' என்னும் தலைப்பில் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 • இதில் சென்னையை சேர்ந்த 2 தனியார் கல்லூரிகள் சார்பில் 2,683 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் இணைந்து ஒரே நிமிடத்தில் 5,366 நாட்டு கத்தரிச் செடிகளை விளைநிலங்களில் நட்டனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் ஆரி ஒருங்கிணைத்தார். 
திருப்பத்தூர் அருகே கி.பி.14-ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

 • திருப்பத்தூர் அருகே கி.பி.14-ஆம் நூற்றாண்டின் வீரமங்கை நடுகல் கண்டறியப்பட்டது.
 • திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் ஆ.பிரபு மற்றும் சிவசந்திரகுமார் ஆகியோர் திருப்பத்தூரை அடுத்த வெங்காயப்பள்ளி அருகே கருப்பனூர் ஏரியில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பழைமை வாய்ந்த வீரமங்கை நடுகல் கண்டறியப்பட்டது.
 • இந்த நடுகல்லில் ஒரு பெண் குதிரையில் அமர்ந்தப்படி பக்கவாட்டில் பார்ப்பது போன்றும், அவரது ஒரு கையில் குதிரையின் கடிவாளமும், மற்றொரு கையில் ஆயுதமும் உள்ளது.
 • அதன் கீழே ஒரு ஆண் உருவமும் இடம் பெற்றுள்ளது. அந்த ஆண், தனது வலது கையை தனது மார்பின் மீது மடக்கி வைத்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • அதாவது, குதிரை மீது அமர்ந்திருக்கும் வீர மங்கைக்கு அந்த ஆண் மரியாதை செலுத்துவது போல உள்ளது. குதிரை மீது உள்ள பெண்ணின் தலையில் கிரீடம் போன்ற தலைப்பாகை உள்ளதால் அவர் அரச குலத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
 • இந்த நடுகல் கி.பி.14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயக்கர்கள் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். போரில் உயிர்நீத்த வீர மங்கைக்காக இக்கல் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தக் கல்லை பொதுமக்கள் கோடி மாரி என்று அழைக்கின்றனர்.
உலகிலேயே அதிகம் பேசப்படும் மொழிகளில் 3-ம் இடத்தில் இந்தி!
 • உலகில், அதிகம் பேசப்படும் மொழிகளில் மூன்றாம் இடத்தில் இந்தி மொழி இடம்பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் உள்ளன.
 • இந்நிலையில் Money Control என்னும் தளத்தில் டாப் 10 மொழிப் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கில மொழியை 1500 மில்லியன் மக்களும், சீன மொழியை 1100 மில்லியன் மக்களும் பேசுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி மொழியை 650 மில்லியன் மக்கள் பேசுகிறார்களாம். அதன்படி, இந்தியாவில் சரிபாதி மக்கள் இந்தி மொழியைப் பேசுகிறார்கள். ஃப்ரெஞ்ச், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளைக் காட்டிலும் இந்தி அதிகம் பேசப்படுகிறது. அதிகம் பேசப்படும் டாப் 10 மொழிகளில் இடம்பிடித்துள்ள மற்றோர் இந்திய மொழி, பெங்காலி ஆகும். 
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட-ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள்
 • கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 7 செயற்கைகோள்களை திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 
 • இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.
 • 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படுகிறது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment