Type Here to Get Search Results !

ஹரிவன்ஷ் ராய் பச்சன்

ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், இந்தி இலக்கியங்களின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆவார். இவருடைய கவிதைகள், வாழ்க்கை மற்றும் காதல் உணர்வுகளை உணர்த்தும் அற்புதப் படைப்புகளாக இருந்தது. 1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “மதுஷாலா” என்ற இந்திக் கவிதைப் புத்தகம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது. இந்தி இலக்கியத்தில் அவரது மகத்தான பங்களிப்பிற்காக 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது. மேலும் “சோவியத் லேண்ட் நேரு விருதினை” வென்றுள்ளார். இவர் பிரபல இந்தித் திரைப்பட நடிகரான “அமிதாப் பச்சனின்” தந்தை ஆவார். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அற்புதக் கவிஞராகவும், மொழிப்பெயர்ப்பாளராகும் விளங்கிய ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் படைப்புகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: நவம்பர் 27, 1907
பிறப்பிடம்: பாபுபட்டி, உத்திரப்பிரதேசம் மாநிலம், இந்தியா
பணி: கவிஞர் மற்றும் எழுத்தாளர்
இறப்பு: ஜனவரி 18, 2003
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், 1907  ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27 ஆம் நாள் இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில், அலகபாத்திற்கு அருகிலுள்ள “பாபுபட்டி” என்ற இடத்தில் பிரதாப் நாராயண் ஸ்ரீவாஸ்தவ் மற்றும் சரஸ்வதி தேவிக்கு மூத்த மகனாக ஒரு காயஸ்தா எனப்படும் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய ஆரம்பக் கல்வியை ஒரு நகராட்சிப் பள்ளியில் தொடங்கினார். பிறகு காயஸ்தா பாத்ஷாலஸ்லிருந்து உருது கற்கத் தொடங்கிய அவர், அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து உயர் கல்வி கற்றார். 1941 ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியராக சுமார் பத்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1952 ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘முனைவர் பட்டம்’ பெற்றார்.
ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பணிகள்
இங்கிலாந்தில் முனைவர் படிப்பை முடித்து இந்தியா திரும்பிய அவர், மீண்டும் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். அதே நேரத்தில் அலகாபாத் நிலையத்திலுள்ள “ஆல் இந்திய ரேடியோவிலும்” சில நேரங்களில் பணிபுரிந்தார். பின்னர் 1955 ஆம் ஆண்டு தில்லிக்கு சென்ற அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்தி மொழி சிறப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். சுமார் பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். இந்தி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றியபோது, மக்மத், ஓதெல்லோ, பகவத்கீதை மற்றும் உமர்கயாம் பற்றிய “ருபாயியத்” போன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த புத்தகங்களுக்கு இந்தியில் மொழிப்பெயர்க்கும் பணி இவரிடம் வந்து சேர்ந்தது.
கவிஞர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளராக அவரின் பயணம்
1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “மதுஷாலா” என்ற இந்திக் கவிதைப் புத்தகம் இவருக்கு பெரும் புகழைப் தேடித்தந்தது மட்டுமல்லாமல், மக்களிடைய மதிப்பும், மரியாதையும் பெற்றுத்தந்தது. இதில் ஒவ்வொரு வரிகளிலும் மனிதர்களின் வாழ்க்கையில் மதுவினால் ஏற்படும் சிக்கல்களை மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். மேலும் ‘மதுபாலா’ (1936)  மற்றும் ‘மதுகலாஷ்’ (1937) இவரின் புகழ்பெற்ற படைப்புகளாக கருதப்படுகிறது. 1969 ல் நான்கு பகுதிகள் கொண்ட சுயசரிதை புத்தகத்தின் முதல் பதிப்பை “கியா போலூன் க்யா யாத் கரூன்” என்ற பெயரில் வெளியிட்டார். பின்னர் 1970ல் “நீடு கா நிர்மான் ஃபிர்” என்ற பெயரில் இரண்டாம் பதிப்பையும், 1977ல் “பசெரே சே டோர்” என்ற பெயரில் மூன்றாவது பதிப்பையும், 1985ல் “டாஷ்த்வார் சே சோப்பான் தக்” என்ற பெயரில் நான்காவது பதிப்பையும் வெளியிட்டார். 1998 ஆம் ஆண்டு இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட “இன் தி ஆஃப்டர்நூன் ஆஃப் டைம்” என்ற பதிப்பு இந்தி இலக்கியத்தில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
இல்லற வாழ்க்கை
ஹரிவன்ஷ் ராய் பச்சன், 1926 ஆம் ஆண்டு தன்னுடைய 19 வது வயதில் ஷ்யாமா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஹரிவன்ஷ் ராய் பச்சனுடனான சுமார் பத்து ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஷ்யாமா அவர்கள், 1936 ஆம் ஆண்டு காசநோயால் காலமானார். பிறகு ஐந்து ஆண்டுகள் தனிமையில் இருந்த அவர், 1941ல் தேஜி ஸ்ரீ என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அமிதாப் மற்றும் அஜிதாப் என இருண்டு குழந்தைகள் பிறந்தனர்.
இறப்பு
இறுதிகாலத்தில் சுவாசநோயால் பாதிக்கப்பட்டு வந்த ஹரிவன்ஷ் ராய் பச்சன் 2003 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி தன்னுடைய 95வது வயதில் காலமானார்.
காலவரிசை
1907 – நவம்பர் மாதம் 27 ஆம் நாள் இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலம் அலகபாத்திற்கு அருகிலுள்ள “பாபுபட்டி” என்ற இடத்தில் பிறந்தார்.
1926 – 19 வது இருக்கும் பொழுது ஷ்யாமா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.
1935 – “மதுஷாலா” என்ற இந்தி கவிதைப் புத்தகம் வெளியிடப்பட்டது.
1941 – தேஜி ஸ்ரீ என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
1952 – மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘முனைவர் பட்டம்’ பெற்றார்.
1955 – தில்லியில் “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில்” இந்தி மொழி சிறப்பு அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார்.
1966 – இந்திய பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.
1969 – சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
1976 – இந்திய அரசால் “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது.
2003 – ஜனவரி 18 ஆம் தேதி தன்னுடைய 95வது வயதில் காலமானார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel