Type Here to Get Search Results !

என். ரவிக்கிரன்

என். ரவிக்கிரன் அவர்கள், புகழ்பெற்ற சித்திர வீணைக் கலைஞராக மட்டுமல்லாமல் ஒரு புகழ் பெற்ற இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சிறப்பு பெற்று விளங்கியுள்ளார். இவருடைய கடுமையான உழைப்பும், இசைத் தேடலில் அவர் மேற்கொண்ட யுத்திகளும், அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றதோடு மட்டுமல்லாமல், இசை உலகில் “சங்கீத சாம்ராட்” எனவும் பெயர் பெறச் செய்தது. இவர், கோட்டு வாத்தியக் இசைக் கலைஞர் அமரர் நாராயண அய்யங்காரின் பேரன் ஆவார். தன்னுடைய அற்புதமான வாசிப்பால் அனைவரையும் வியக்கவைத்த இவர், ‘இந்திய சங்கீத நாடக அகாடமி விருது’, தமிழ்நாடு மாநில அரசின், ‘கலைமாமணி விருது’, மத்தியபிரதேச மாநில அரசின், ‘குமார் கந்தர்வ சம்மான் விருது’, ‘லயன் சர்வதேச விருது’, ‘சங்கீத சூடாமணி’, ‘சங்கீதா ரத்னாகர்’, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ என மேலும் பல வெளிநாட்டு விருதுகளை வென்றுள்ளார். இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் பல விருதுகளை வென்று, இசை மேதையாக விளங்கிய என். ரவிக்கிரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் இசைத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: பிப்ரவரி 12, 1967
இடம்: மைசூர், கர்நாடக மாநிலம், இந்தியா
பணி: இசையமைப்பாளர், பாடகர், திரைப்படப் பின்னணி பாடகர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
என். ரவிகிரன் அவர்கள், 1967  ஆம் ஆண்டு பிப்ரவரி 12  தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “மைசூர்” என்ற இடத்தில் நரசிம்மன் என்பவருக்கு மகனாக ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மற்றும் தாத்தா இந்திய பாரம்பரிய இசைக் கலையில் சிறப்பு பெற்று விளங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், இவருடைய தாத்தாவான அமரர் நாராயண அய்யங்கார், கோட்டு வாத்தியக் இசை கலையில் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே இந்திய பாரம்பரிய இசை நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவராக வளர்ந்தார். இவருடைய தந்தையான நரசிம்மன், இவருக்கு முதல் ஆசானாக விளங்கினார். மிக இளம் வயதிலேயே இந்தியப் பாரம்பரிய இசையில் அற்புதங்களை வெளிப்படுத்திய ரவிகிரன், பல இசை ஜாம்பவான்களின் பாராட்டையும் பெற்றார்.
இசைப் பயணம்
தந்தையின் கீழ் முழு இசைப் பயிற்சியை மேற்கொண்ட ரவிக்கிரன், 1972 ஆம் ஆண்டு  தன்னுடைய ஐந்தாவது வயதில் கோயம்புத்தூரில் ஒரு இசைப் பாடகராக தன்னுடைய இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், பத்து வயதில் சித்திர வீணை கலையில் ஈடுபாடு கொண்ட அவர், பதினொரு வயதிலேயே முதல் சித்திர வீணைக் கச்சேரியை அரங்கேற்றினார். அடுத்த மூன்று ஆண்டுக்குள் இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர்களில் ஒருவராக மாறிய அவர், 1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் 24 மணிநேர இடைவிடாது இசைக் கச்சேரியினை  நிகழ்த்திக்காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
வெற்றிப்பயணம்
இந்தியா மட்டுமல்லாமல், உலகமுழுவதும் தொடர்ந்து பல இசைக் கச்சேரிகளை நிகழ்த்திய அவர், வெகு விரைவிலே இசை உலகில் “சங்கீத சாம்ராட்” என்ற பட்டம் பெற்றார். இவருடைய கடுமையான உழைப்பும், இசைத் தேடலில் மேற்கொண்ட முயற்சியும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது எனலாம். நாட்டை, கவுளை, வராளி, ஆரபி, கைகவசி, ஸ்ரீராகம் மற்றும் நாராயண கவுளை போன்ற ராகங்களில் அற்புதமாக வாசித்து இசை நெஞ்சங்களுக்கு விருது படைத்துள்ளார். ஸ்வரங்களில் ரவிக்கிரனின் நயமான வாசிப்பு, மனம்கவர்ந்த ஒன்றாகும். இவருடைய கோட்டு வாத்திய இசை, மனதை கொள்ளைகொள்ளும் எனலாம். மேலும், அமெரிக்கா லண்டன், கீளிவ்லேண்ட், இங்கிலாந்து, டெக்சாஸ், பிரிட்டன் போன்ற வெளிநாடுகளிலும் தன்னுடைய இசை நயத்தை வெளிபடுத்தினார். ரவிக்கிரன் அவர்களுக்கு, பிரட்டன் அரசால் “மில்லினியம் விருது”, அமெரிக்க அரசால் சிறந்த சமகால உலக இசை தொகுப்பிற்கான “நியூ ஏஜ் வாஸ் அவார்ட்ஸ்” மற்றும் சங்கீதா ரத்னாகர் விருது, ஆஸ்திரேலியாவிலிருந்து “சித்ரவீணா வித்யா வர்த்தி”, டெக்சாஸில் இருந்து “வாத்திய ரத்னாகர் விருது”, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் “ஹார்வர்ட் சங்கீத் விருது”, லண்டனிலிருந்து “ரகளையா சாகர விருது” எனப் பல விருதுகளை வென்று இந்திய பாரம்பரிய இசையின் அழகை வெளிநாட்டு ரசிகர்களிடமும் கொண்டுசேர்த்தார். மேலும் சுமார் 600 க்கும் மேற்பட்ட இந்திய பாரம்பரிய இசை தொகுப்புகளை வழங்கியுள்ளார். இதைத்தவிர இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், ஆசிரியராகவும் சிறப்பு பெற்று விளங்கியுள்ளார்.
விருதுகளும், மரியாதைகளும்
  • 1973 – அருள் இசை செல்வன்.
  • 1979 – இசை அகடமி முதுநிலை விருதுகள்.
  • 1979 – லயன் சர்வதேச விருது.
  • 1985 – சங்கீத் சாம்ராட் மற்றும் ரோட்டரி தொழிற்கல்வி விருது.
  • 1985 – இந்திய ஸ்டார் விருது,
  • 1985 – தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருது.
  • 1986 – மதுர நாட மன்னர்.
  • 1990 – சான்ஸ்கிரிட் அறக்கட்டளையின் மூலம் “சான்ஸ்கிரிட் விருது”
  • 1991 – கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் மூலம் இசை பேரொளி விருது.
  • 1995 – கிருஸ்ண கானா சபா மூலம் சங்கீத சூடாமணி.
  • 1996 – மத்தியபிரதேச மாநில அரசின் குமார் கந்தர்வ சம்மான் விருது.
  • 1996 – சித்ரவீணா வித்யா வர்த்தி (யியர்ல் சங்கம், பெர்த், ஆஸ்திரேலியா)
  • 2000 – பாம்பே குமார் கந்தர்வா அறக்கட்டளை மூலம் குமார் தந்தர்வா விருது.
  • 2000 – பிரட்டன் அரசால் “மில்லினியம் விருது”
  • 2001 – அமெரிக்க அரசால் சிறந்த சமகால உலக இசை தொகுப்பிற்கான “நியூ ஏஜ் வாஸ் அவார்ட்ஸ்”
  • 2002 – வாத்திய ரத்னாகர் விருது (இந்தியா ஃபைன் ஆர்ட்ஸ், ஆஸ்டின், TX)
  • 2003 – இந்திய காஞ்சி அறக்கட்டளை மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது.
  • 2003 – டி.டி.கே விருது (இசை அகாடமி, சென்னை, இந்தியா)
  • 2005 – ஹார்வர்ட் சங்கீத் விருது (ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஐக்கிய அமேரிக்கா)
  • 2005 – சங்கீத சப்த சாகரா (சாந்தி ஃபைன் ஆர்ட்ஸ், சென்னை, இந்தியா)
  • 2006 – நல்லி சீசன் விருது (நல்லி அறக்கட்டளை, சென்னை, இந்தியா)
  • 2007 – இந்திய சங்கீத நாடக அக்காடமி விருது.
  • 2008 – ரகளையா சாகர விருது (ரகளையா அறக்கட்டளை, லண்டன்)
  • 2010 – சங்கீதா ரத்னாகர் (கிளீவ்லேண்ட், அமேரிக்கா)
  • 2011 – ரோட்டரி வாழ்நாள் சாதனையாளர் விருது.
ஒரு குழந்தை மேதையாக இசையுலகில் ஒளிவீசத் துவங்கி, தன்னுடைய கடினமான உழைப்பினால் இசை உலகில் “சங்கீத சாம்ராட்” என புகழ் பெற்றுள்ளார் என்பதற்கு அவர் பெற்ற விருதுகளே சான்றுகளாகும். ரவிக்கிரனின் நயமான வாசிப்பும், கோட்டு வாத்திய இசையில் மேற்கொண்ட புதுமையும் அனைவரையும் வியக்கவைத்தது எனலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel