மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த மாமனிதர், இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். கீழ்சாதி என்ற சாதி பாகுப்பாட்டை முறியடித்து, சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகப் பணிபுரிந்தார். தொழிலால் அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும், அவர் ஒரு தலைச்சிறந்த அரசியல்வாதி, தலித் ஆர்வலர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். தலித் இனத்தை சார்ந்த மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளி என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தியாவில் தலித் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக இருந்து வந்த இரட்டமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஜூலை 7, 1859
பிறப்பிடம்: மெட்ராஸ் மாகாணம், இந்தியா
இறப்பு: செப்டம்பர் 18, 1945
பணி: வழக்கறிஞர், பத்திரிகையாளர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், இந்தியாவில் சென்னை மாகாணத்தில் உள்ள பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் ஜூலை மாதம் 7ஆம் தேதி, 1859 ஆம் ஆண்டில், தெய்வபக்தி மிகுந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
தனது தொடக்கக்கல்வியைக் கோழியாளத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்றார். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினரான தலித் சமூகத்தில் பிறந்ததாலும், குடும்ப வறுமைக் காரணமாகவும், சாதியக் கொடுமை காரணமாகவும் அவரது குடும்பம் கோழியாளத்தில் இருந்து தஞ்சைக்கும், பின்பும் கோவைக்கும் குடிபெயர்ந்தது. தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில், தனது பள்ளிப்படிப்பை மீண்டும் தொடர்ந்த அவர், தனது கல்லூரிப்படிப்பைக் கோவையில் முடித்தார். எங்கு சென்றாலும் தீண்டாமைக் கொடுமைத் தலைவிரித்து ஆடுவதைக் கண்டு வெகுண்ட அவர், அதற்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று முடிவெடுத்தார்.
இல்லற வாழ்க்கை
இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், 1887 ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.
ஆரம்பகாலப் பணிகள்
தனது கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர், எழுத்தராக நீலகிரியில் உள்ள நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர், 1890ல் சென்னைக்கு வந்தார். 1891ல் ‘பறையர் மகாசன சபை’ மற்றும் 1893ல் ‘பறையன்’ என்ற திங்கள் இதழை தோற்றுவித்தார். 1900 ஆம் ஆண்டு வரை அவ்விதழை நடத்திய அவர், அதே ஆண்டில் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு ஒரு மொழிப்பெயர்பாளராக நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்த அவர், 1921ல் இந்தியா திரும்பினார்.
சட்டமன்ற உறுப்பினராக அவருடைய பங்கு
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1923 ஆம் ஆண்டு சட்டசபையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட அவர், 1924ல் சட்ட சபையில், ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன்படி, ‘பொது வழியில் எந்தவொரு சாதி பாகுபாடின்றி, யார் வேண்டுமானாலும் நடக்கலாம். இத்தேசத்தில் உள்ள அனைத்து பொது உடைமைகளும், அனைவருக்கும் சொந்தமானவையே. மேலும், பள்ளர், பறையர் என்று அழைக்கப்படாமல், ஆதிதிராவிடர் என்று அழைக்கப்பட வேண்டுமென்றும், மது ஒழிப்புத் தீர்மானம், ஆலய நுழைவுத் தீர்மானம் போன்ற சமூக சீர்த்திருத்தங்களை நிறைவேற்றினார். மேலும், அவர் மணியக்காரர் முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை எழுப்பினார்.
லண்டன் வட்டமேஜை மாநாடு
லண்டனில் 1930, 1931 மற்றும் 1932களில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடுகளின் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் கலந்துகொண்டார் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழு உரிமையைப் பெற்றுத் தர எண்ணி அவர்கள் இருவரும், அம்மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினர்.
இறப்பு
இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி, 1945 ஆம் ஆண்டில், பெரியமேடு என்னும் இடத்தில் தனது இறுதி மூச்சை விட்டார்.
காலவரிசை
- 1859: மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் ஜூலை மாதம் 7ஆம் தேதி, 1859 ஆம் ஆண்டில், தெய்வபக்தி மிகுந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
- 1887: ரெங்கநாயகி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
- 1890: சென்னைக்கு வந்தார்.
- 1891: பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார்.
- 1893: ‘பறையன்’ என்ற திங்கள் இதழை தோற்றுவித்தார்.
- 1900: வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார்.
- 1921: இந்தியா திரும்பினார்.
- 1923: சட்டசபையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
- 1924: சட்ட சபையில், அவர் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
- 1930. 1931 மற்றும் 1932: லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடுகளின் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகப் அம்பேத்கருடன் கலந்துகொண்டார்.