சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக நேர்காணல் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற சிங்கங்கள், தங்கங்களை நேர்காணலுக்கு அழைத்துள்ளது டி.என்.பி.எஸ்.சி. இதற்கான பட்டியலை தனது அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற தளத்தில் வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேர்வாணையம் சார்பில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தகுதிபெற்று, பலர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு பணிகளுக்கு நடத்தப்பட்டத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு விதி, அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தாற்காலிகப் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு எழுதுபொருள், அச்சுப் பணித் துறையில் உதவிப் பணி மேலாளர் பணிக்கான நேர்காணல் வருகிற 24-ஆம் தேதி காலையில் நடைபெற உள்ளது. மொத்தம் 8 காலிப் பணியிடங்களைக் கொண்ட இந்தப் பதவிக்கு கடந்த 2014 நவம்பர் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்ற 432 பேரில் 22 பேர் நேர்காணலுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இதுபோல, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணித் துறையில் 23 காலியிடங்களைக் கொண்ட செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கு 2014 நவம்பர் 16-ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்ற 20,433 பேரில் 49 பேர் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, வருகிற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலச் சான்றிதழ்களுடன் தேர்வாணைய அலுவலகத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் சார்நிலை பணியான புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு கடந்த 2014 அக்டோபர் 11-ஆம் தேதி நடத்தப்பட்டத் தேர்வில் பங்கேற்ற 1,623 பேரில் 18 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 24-ஆம் தேதி பிற்பகல் நடைபெற உள்ளது. நேர்காணலுக்குச் செல்லும் வருங்கால அரசு அதிகாரிகள் தைரியத்துடன் நேர்காணலைச் சந்திக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.