எஸ். ராமகிருஷ்ணனுக்கு 'சஞ்சாரம்' நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது
- இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதி 2015ல் வெளியான 'சஞ்சாரம்' நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- பக்கிரி என்ற பாத்திரத்தின் மூலம் நகரும் இந்த நாவல் நாதஸ்வர இசை, நாதஸ்வர இசைக் கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டது. பெரிதும் அவர்களது துயரம் குறித்துப் பேசுகிறது.
- "நாதஸ்வர இசைக் கலைஞ்களில் தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படும் அளவுக்கு கோவில்பட்டி போன்ற கரிசல் பகுதியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படவில்லை. இந்தக் கலைஞர்களின் துயரத்தை, வாழ்க்கையை, வாழ்க்கை இவர்களை அடிக்கும் அடியை இந்த நாவல் சொல்கிறது
- "தஞ்சாவூரில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்களுக்கு கிடைத்த வாழ்க்கைபோல இவர்களுக்கு அங்கீகாரமோ, ஊதியமோ கிடைக்கவில்லை. இவர்கள் தங்கள் ஊர்களில் விவசாயம் சார்ந்து வாழ்ந்தார்கள். விவசாயம் அழிந்தவுடன் இவர்களும் அழிந்தார்கள். இவர்களுக்கு படிப்பு இல்லை. நாதஸ்வரக் கலையைக் கற்றுக்கொள்ள 7 - 8 வருடம் பயிற்சி தேவை. அதைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு வசதியில்லை. ஆகவே மெல்ல மெல்ல அந்தக் கலையிலிருந்து இந்தக் கலைஞர்கள் வெளியேறிவருகிறார்கள்" என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.
- 1966ல் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்த எஸ். ராமகிருஷ்ணன், ஒரு முழுநேர எழுத்தாளர். 18 சிறுகதைத் தொகுப்புகள், சஞ்சாரம், உபபாண்டவம் உள்பட 9 நாவல்கள், 36 கட்டுரைத் தொகுப்புகள், 8 திரைப்பட நூல்கள், குழந்தைகளுக்கென 15 புத்தகங்கள், இரண்டு வரலாற்று நூல்கள், 3 நாடகத் தொகுப்புகள், 2 நேர்காணல் தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
- விருது வழங்கப்பட்ட சஞ்சாரம் நாவலை 2015ல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. தற்போது தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சாட்சி பாதுகாப்பு திட்டம் உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
- வழக்குகளில் சாட்சியம் அளிப்போருக்கு, போதிய பாதுகாப்பு அளிக்கும், மத்திய அரசின் வரைவு திட்டத்துக்கு, உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
- வழக்குகளின் கண் மற்றும் காதாக இருக்கும் சாட்சிகளுக்கு, போதிய பாதுகாப்பு அளிக்கும் திட்டம், அமெரிக்கா, சீனா, கனடா உட்பட, பல நாடுகளில், நடைமுறையில் உள்ளது.குற்றவியல் நீதி நடைமுறை தொடர்பாக அமைக்கப்பட்ட, நீதிபதி, வி.மலிமாத் குழு, 'சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, 2003ல் பரிந்துரை செய்திருந்தது.
- அதன்பின், 2006ல் வெளியிடப்பட்ட, மத்திய சட்டக் கமிஷன் அறிக்கையில், இது தொடர்பான வரைவு திட்டம் அறிவிக்கப்பட்டது.
- இந்நிலையில், பாலியல் பலாத்காரம் வழக்கில் சிக்கிய, சாமியார் ஆசாராம் வழக்கில், சாட்சியம் அளித்தவர்கள் மாயமானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, 'சாட்சியம் அளிப்போருக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்' என, பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
- உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்துக்கான வரைவு திட்டம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில திருத்தங்களுடன், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
- 'சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் அமல்படுத்தப்படும் வரை, இந்த வரைவு திட்டத்தை அனைத்து மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் மிக நீண்ட ரயில் பாலம்: டிச.25-ல் மோடி திறக்கிறார்
- இந்தியாவின் மிகவும் நீளமான ரயில் பாலத்தை டிச.25-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்வடகிழக்கு மாநிலங்களன அசாம், அருணாச்சல் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து ரயில் பாலம் கட்டும் பணி போகிபீல் என்ற இடத்தில் நடந்து வருகிறது.
- 4.94 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும்.1997-ல் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவால்அடிக்கல் நாட்டப்பட்டு 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 3-ம் தேதி பணிகள் நிறைவடைந்தன. வரும் 25-ம் தேதி இப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கண்காணிக்க அமைப்பு ஏற்படுத்த ஆர்பிஐ முடிவு
- வளர்ந்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கண்காணிக்க அமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக புகார்களை விசாரிக்க ஆர்பிஐ நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. இதனை வரும் ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.
சீக்கிய கலவரத்தை விசாரிக்க புதிய குழு அமைக்க ஒப்புதல்
- கடந்த, 1984ல் பிரதமராக இருந்த, அப்போதைய காங்., தலைவர் இந்திரா, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதையடுத்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் ஏற்பட்டது. டில்லியில் மட்டும், 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
- இது தொடர்பாக நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, 186 வழக்குகளை பதிவு செய்தது. ஆனால், முழுமையாக விசாரணை நடத்தாமல், அவற்றை முடிப்பதாக அறிவித்தது. அதையடுத்து, 'புதிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
- அதன்படி, டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, எஸ்.என். திங்க்ரா, ஹிமாசலப் பிரதேச, ஐ.பி.எஸ்., அதிகாரி, அபிஷேக் துலார் மற்றும் ஓய்வு பெற்ற, போலீஸ் ஐ.ஜி., ராஜ்தீப் சிங் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவர்களில், ராஜ்தீப் சிங் இந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
- அதையடுத்து, இரண்டு பேர் அடங்கிய விசாரணை குழுவை அமைக்க, மத்திய அரசு அனுமதி கோரியது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இரண்டு பேர் அடங்கிய, சிறப்பு விசாரணைக் குழுவுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது.
தென்னாப்பிரிக்க குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக இந்தியர் நியமனம்
- தென்னாப்பிரிக்க நாட்டின் தேசிய குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷமிலா படோஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதற்கு முன்னர் தேசிய குற்ற விசாரணை அமைப்பின் தலைவராக இருந்த செளன் ஆபிரஹாம்ஸ், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரைக் காப்பாற்றும் வகையில் விசாரணையை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதை அடுத்து, அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து 11 மாதங்களாக காலியாக இருந்த அந்த அமைப்பின் இயக்குநர் பதவிக்கு படோஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரூ.320 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் வைகை மாசுபடுவதை தடுக்க புதிய திட்டம்
- கங்கை, யமுனை நதிகளைப் போல் வைகை ஆற்றை மாசுபாட்டில் இருந்து காக்க ரூ. 320 கோடியில், புதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் மூலம் மதுரையில் வைகை ஆற்றில் இருபுறமும் கரையோரச் சாலைகளை சீரமைத்து, 10 கி.மீ. நீளத்துக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க ஆங்காங்கே, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
- தேனி மாவட்டம், வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் வழியாக 250 கி.மீ. தூரம் பாய்ந்து, ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கலக்கிறது. சுமார் 7 ஆயிரத்து 723 சதுர கி.மீ. பரப்புடையது. இதில், மதுரை நகரில் பாதாள சாக்கடை நீர் கலப்பதால் வைகை மாசுபடுகிறது. இதனை தடுக்க, கடந்த 2000ல் மத்திய அரசு ரூ. 165 கோடி ஒதுக்கியது.
- இந்த திட்டம் முழுமை அடையாமல் அரைகுறையாக நிற்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக வைகையில் கழிவுநீர் கலப்பது அதிகரித்து வருகிறது. இதனால், ஆறு மாசடைந்து கூவமாக மாறி வருகிறது. இந்நிலையில் கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டம் போல, வைகை ஆற்றையும் புண்ணிய நதி பட்டியலில் சேர்த்து, மாசுபாட்டில் இருந்து காக்க ரூ.320 கோடியில் புது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
திருச்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.6.44 கோடியில் சூரிய ஒளி மின்சாரத்துக்கு மாறும் மாநகராட்சி
- நாடு முழுவதும் 100 நகரங்களைத் தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கடந்த 2015 ஜூன் 15-ம் தேதி அறிவித்தது.
- தொடர்ந்து, 2017-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சி மாநகராட்சி தேர்வு செய்யப் பட்டது. இதையடுத்து, திருச்சி மாநகராட்சியில் 2020-ம் ஆண்டுக்குள் ரூ.1,000 கோடியில் பல் வேறு வளர்ச்சி மற்றும் மேம் பாட்டுத் திட்டப் பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளன.
- அதன்படி, ரூ.50 கோடியில் அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் குவிந்துள்ள குப்பையை தரம் பிரித்து அப்புறப் படுத்துவது, ரூ.20 கோடியில் உய்யக் கொண்டான் வாய்க்கால் கரை மேம்பாடு, தில்லைநகரில் ரூ.15 கோடியில் வணிக வளாகம் கட்டுவது என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வருகின்றன.
- இதைத்தொடர்ந்து, திருச்சி மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடங்களுக்கு ரூ.6.44 கோடியில் சூரியஒளி மின்சார வசதி அளிக்கும் திட்டம் தொடங்கப் படவுள்ளது.
- திருச்சி மாநகராட்சிக்குச் சொந்த மான 206 கட்டிடங்களில் ஆண்டுக்கு 17 லட்சம் யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
- இதற்காக மின் வாரியத்துக்கு ஆண்டுதோறும் ரூ.1.3 கோடி மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சியின் 206 கட்டிடங்களின் மேற்கூரையில், சூரியஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக தேவைக் கேற்ப 1 கிலோவாட் முதல் அதிகபட்சம் 100 கிலோ வாட் வரை சூரியஒளி தகடுகள் ரூ.6.44 கோடியில் பொருத்தப்படவுள்ளன.
- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் அருகேயுள்ள கழிவுநீர் பண்ணைப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 13.75 ஏக்கரில் ரூ.13.5 கோடியில் சூரியஒளி தகடுகள் நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யும் மையம் நிறுவப்படவுள்ளது.
0 comments:
Post a Comment