Friday, 10 November 2017

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS NOVEMBER 2017 TAMIL PDF - 10th NOVEMBER 2017


178 பொருட்களின் ஜிஎஸ்டி குறைப்பு:வரும் 15ம் தேதி முதல் அமல்
  • ஜிஎஸ்டி கவுன்சிலின் 23 வது ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது. 
  • இந்த கூட்டத்தில் 178பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், அன்றாடம் பயன்படுத்தக் கூடிய 200 க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  •  28 சதவீதம் ஜிஎஸ்டி கொண்ட பொருட்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. ஷாம்பூ, பிராஸ்டிக் பொருட்கள், சுகாதார பொருட்கள், சூட்கேஸ், காகிதம், எழுது பொருட்கள், வாட்ச்கள், இசைக் கருவிகள் உள்ளிட்டவைகளின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஏசி ரெஸ்டாரன்ட்களில் வழங்கப்படும் உணவுகளின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சாக்லேட்கள், சூயிங் கம், ஷாம்பூ, சோப்பு, ஷூ பாலிஷ், ட்யோடரென்ட், சத்துள்ள பானங்கள், மார்பிள், அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
  • பெண்களுக்கான அழகு சாதன மூலப் பொருட்கள், ஷேவிங் மற்றும் ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள், சலவை பவுடர்கள், கிரானைட் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீதம் ஜிஎஸ்டி பிரிவின் கீழ் உள்ளன. இருப்பினும் பெயிண்ட்கள், சிமெண்ட் ஆகியவை 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழே வைக்கப்பட்டுள்ளன.
  • வாஷிங் மேஷின், ஏசி போன்ற சொகுசு பொருட்களும் 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழே வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 
  • நவ.,15ம் தேதி முதல் அமல் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அமைச்சர் அரண் ஜெட்லி கூறினார். மேலும் அனைத்து வகையான உணவகங்களுக்கான ஜி.எஸ்.டிவரி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • நாள் ஒன்றிற்கு 7 ஆயிரத்து 500 வரை வாடகை வசூலிக்கும் ஓட்டல்களுக்கு 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.13 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த18 சதவீத வரி 12 சதவீதமாகவும், 6 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத வரி 5 சதவீதமாகவும்,8 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 15 சதவீத வரி 5 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.
  •  மேலும் 6 பொருட்கள் மீதான 5 சதவீத வரி ரத்து செய்யப்படுவதாகவும், கணக்கு தாக்கல் தொடர்பாக நாள் ஒன்றிற்கு விதிக்கப்படும் அபராத தொகை ரூ. 200-ல் இருந்து ரூ.20 ஆக குறைக்கப்படுகிறது என அமைச்சர் கூறினார்.
"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தில் தயாரிக்கப்பட்ட விண்கலக் கொள்கலன் இஸ்ரோவிடம் ஒப்படைப்பு
  • பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்காக (இஸ்ரோ) , "மேக் இன் இந்தியா' (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தின்கீழ் முதன்முதலாக கோவையில் தயாரிக்கப்பட்ட விண்கலக் கொள்கலனை ஒப்படைக்கும் விழா, துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  • பொதுவாக, இந்தியாவில் உருவாக்கப்படும் சில ராக்கெட்டுகள் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். ராக்கெட்டுகளை அங்கே கொண்டு செல்வதற்குரிய விண்கலக் கொள்கலன்கள் வெளிநாடுகளிலிருந்தே தருவிக்கப்பட்டு வந்தன. இதற்கு அதிக பொருள் செலவும், நேர விரயமும் ஆயின.
  • இதனைத் தவிர்க்கும் வகையில், விண்கலக் கொள்கலன்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இப்பணி கோவை, வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா ஹைடெக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானி பி.நரேஷ் மேற்பார்வையில் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்த கொள்கலன் தயாரிக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது. 
  • இந்த விண்கலக் கொள்கலனை பெங்களூரில் உள்ள இஸ்ரோவிடம் ஒப்படைப்பதற்கான விழா வெள்ளக்கிணறில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், இஸ்ரோ, ஜியோசாட் பிரிவின் திட்ட இயக்குநர் டி.கே.அனுராதாவிடம் கொள்கலன் ஒப்படைக்கப்பட்டது.
  • வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா ஹைடெக் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்ரோ அனுப்பும் ராக்கெட்டுகளுக்கான உதிரிபாகங்களைத் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடுகதிர் துருவமாதலை அளவிட்ட இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் !
  • அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளில் உள்ள படக்கருவி "கிராப் பல்சார்' நட்சத்திரத்திலிருந்து எக்ஸ்ரே கதிர்களின் மாற்றத்தை முதன்முறையாக அளவிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • வானியல் ஆராய்ச்சிக்கான அஸ்ட்ரோசாட் செயற்கைகோள் முதன்முறையாக பி.எஸ்.எல்.வி -சி30 ராக்கெட் மூலம் 2015-ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது விண்ணில் உள்ள புற ஊதா கதிர்கள், குறைந்த, அதிக ஆற்றல் வாய்ந்த எக்ஸ்ரே கதிர்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு அலைவரிசைகளில் ஆய்வு செய்யக்கூடியது.
  • இவ்வகை செயற்கைக்கோள்களை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விண்ணில் செலுத்தி ஆய்வு செய்து வருகின்றன. அஸ்ட்ரோசாட் செயற்கைகோளை அனுப்பியதன் மூலம் இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. 
  • இதுவரை மற்ற நாடுகள் அனுப்பியுள்ள வானியல் ஆய்வுக்கான செயற்கைக்கோள்கள் குறைந்த அலைவரிசைகளை மட்டுமே ஆய்வு செய்யும் திறன் கொண்டவை. ஆனால், இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் குறைந்த, அதிக ஆற்றல் கொண்ட அலைவரிசைகளை ஆய்வு செய்யும் திறன் கொண்டது என்பது மற்றொரு சிறப்பு.
  • அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் மொத்த எடை 1,513 கிலோ. இதன் ஆயுள் 5 ஆண்டுகள். பூமியிலிருந்து 650 கி.மீட்டர் உயரத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள் நிலைக் கொண்டுள்ளது.
  • மிகக் கடினமான பணி: இந்தியாவின் பல அலைநீளங்கள் கொண்ட விண்வெளி தொலைநோக்கியான அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் எக்ஸ்ரே கதிரை அளக்கும் மிகக் கடினமானப் பணியை வெற்றிகரமாக செய்துள்ளது.
  • ரிஷப நட்சத்திரத் தொகுப்பில் உள்ள கிராப் பல்சாரை 18 மாத காலம் ஆய்வு செய்த குழுவினர், தங்களின் கண்டுப்பிடிப்புகளை "நேச்சர் அஸ்ட்ரானமி' பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
  • நொடிக்கு 30 முறை சுழலும் உயர்காந்த சக்தி கொண்ட இந்த விண்பொருளின் துருவமாதல் மாற்றங்களை குழுவினர் அளவிட்டனர். பல்சர் நட்சத்திரத்தில் இருந்து வெளியாகும் உயர்சக்தி ஊடுகதிர் தொடர்பான இப்போதையக் கொள்கைகளுக்கு இந்த முக்கியமான அளவீட்டுக் கண்டுபிடிப்பு பெரிய சவாலை விடுத்துள்ளது.
  • அனுமானிக்க முடியாத பொருள்கள்: பூமியின் சூழலைக் கடந்த மிகவும் மாறுபட்டவையாக நியூட்ரான் நட்சத்திரங்கள், கருந்துளைகள் உள்ளிட்டவை உள்ளன. இவற்றை முழுமையாக ஆராய்ந்தால்தான் கொள்கை அடிப்படையிலான அனுமானங்கள் உண்மையா என்பதை உறுதி செய்ய முடியும்.
  • அத்துடன், இவை 10 அல்லது 20 கி. மீட்டர் விட்டத்தைக் காட்டிலும் குறைவான அளவு கொண்டவையாக இருந்தாலும், சூரியனின் எடையைக் காட்டிலும் பல மடங்கு அதிக அடர்வு கொண்டவை என கணிக்கப்பட்டுள்ளது.
  • இந்த அதிக அடர்வு கொண்ட கோள்கள், பூமியை விட பல லட்சம் கோடி அளவுக்கு ஈர்ப்புவிசை, காந்தசக்தி கொண்டவை. வலுவான ஊடுகதிரியக்கம், ஒளியைப் போன்ற மின்காந்த அலைகள் ஆகியவற்றின் உற்பத்தி இடங்களாகவும் இவை உள்ளன. இச்சக்தியின் மூலம் அவற்றை புரிந்து கொள்வதற்கான தடயங்கள் கிடைக்கும். மேலும் அவற்றின் கதிரியக்கங்களுக்கு காரணமான இயற்பியல் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியும்.
  • சி.இசட்.டி. படக்கருவி: ஊடுகதிர் துருவமாதல் அளவுகளை காண பிக்சல்கள் கொண்ட சி.இசட்.டி. படக் கருவிகளைப் பயன்படுத்தும் நடைமுறை சில காலமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • ஆனால், விண்ணில் செலுத்தப்படுவதற்கு முன்னதாக, இதைப் பயன்படுத்தி, பின்னர் விண்வெளியிலும் பயன்படுத்துவது இதுவே முதன்முறை.
  • இதுகுறித்து சி.இசட்.டி. (CZT) படக் கருவியின் முதன்மை ஆய்வாளர் ஏ. ஆர். ராவ் கூறியது: விண்வெளியில் உள்ள மிகப் பிரகாசமான கோள்கள் கூட மிகக் குறைவான ஊடுகதிர் ஃபோட்டான்களையே வெளியிடுகின்றன.
  • கிராப் பல்சாரை நாங்கள் பலமுறை உற்றுநோக்க வேண்டியிருந்தது. மேலும் பல்வேறு மாதங்களில் பெற்ற தகவல்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. பல்சரின் சுழல்காலம் மிகக் குறுகியதாக இருக்கும் நிலையில் இத்தகைய ஒருங்கிணைப்பு பெரிய சவால்.
  • இவ்வாறு தகவல்களை ஒருங்கிணைக்கத் தேவைப்படும் குறும நொடி அளவிலானத் துல்லியத் தன்மையைப் பெறுவதற்காக உலகின் மிகச் சிறந்த ரேடியோ தொலைநோக்கி ஒன்றின் உதவியை அஸ்ட்ரோசாட் குழுவினர் நாடினர்.
  • புணே நகருக்கு அருகே கோடாட் என்ற இடத்தில் உள்ள இந்தியாவின் மிகப் பெரிய மீட்டர் அலைநீள தொலைநோக்கியின் உதவிப் பெறப்பட்டது. ஊட்டியில் உள்ள ரேடியோ தொலைநோக்கிக் கண்காணிப்புத் தகவல்களில் உள்ள குறைபாடுகளைக் களைந்து துல்லியமான அளவுகளை வழங்கியது. பின்னர் முழுக் குழுவினரும் இந்தத் தகவல்களை பல மாத காலங்களாக நுணுக்கமாக ஆராய்ந்தனர். இதையடுத்து உலகிலேயே மிகச் சிறந்த கிராப் ஊடுகதிருக்கான அளவீடுகளை அறிவித்தனர் ஏ.ஆர்.ராவ்.
1000 ஆண்டுகள் பழமையான உறைகிணறு: கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டுபிடிப்பு
  • அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சுடுமண்ணால் ஆன உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சுமார் ஒருமீட்டர் அகலமும் 15 அடி ஆழத்துடனும் அந்த உறைகிணறு காணப்பட்டது. இதனையறிந்த அங்கு சென்ற அதிகாரிகள், வரலாற்று பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர்.
  • ஆய்வுக்கு பின் பேசிய அதிகாரிகள், அந்த கிணறு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடிநீருக்காக பொதுமக்கள் பயன்படுத்தியது. இது சுடுமண்ணால் ஆன உறை கிணறு என்றும் இந்த கிணற்றில் இருப்பது சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைகளைகொண்டது.உறைகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் கொண்டது .
அரசுப் பேருந்தில் இலவசப் பயணம்: டெல்லி அரசு முடிவு


டெல்லியில் வரும் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணிக்கலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

  • டெல்லியில் காற்று மாசு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒற்றை மற்றும் இரட்டைப் பதிவெண்களில் முடியும் வாகனங்களை அடுத்தடுத்த நாட்களில் மட்டும் இயக்குவதற்கான கட்டுப்பாடு வரும், 13ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கொண்டு வரப்படுகிறது. 
  • இதனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது. இதற்கிடையில் வாகன நிறுத்தக் கட்டணங்களும் டெல்லியில் மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது
வாடிகனில் சிகரெட் விற்பனைக்கு தடை: போப் உத்தரவு
  • வாடிகன் சிட்டி: வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து போப் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார். 
  • மக்களின் உடல் நலம் பாதிக்கும் செயலில், புனித நகரான வாடிகன் ஈடுபடாது என அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் நடத்த 'தேசியத் தேர்வு முகமை'..மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை ஒன்றை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்து வெளியான செய்திக்குறிப்பில்,'' நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதற்காக என்று தனியாக 'தேசிய தேர்வு முகமை' உருவாக்கப்படும். இது முற்றிலும் தன்னாட்சி பொருந்திய அமைப்பாக செயல்படும். இனி மத்திய பள்ளிக் கல்வி வாரியம் இத்தகைய தேர்வுகளை ஒருங்கிணைக்காது.
  • நாடு முழுவதும் மாவட்டம் தோறும் தேசிய தேர்வு முகமையின் மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் 40 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். தேசிய தேர்வு முகமையினை உருவாக்குவதற்கான பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ.25 கோடி ஒதுக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக வீட்டுக்கே வருகிறது வங்கி சேவை... வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
  • 70வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு வீட்டுக்கே வந்து வங்கிகள் தங்கள் சேவைகளை வழங்க வேண்டும், இந்த வசதியை டிசம்பர் 31-ந்தேதிக்குள் செய்ய வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ்வங்கி உத்தரவிட்டுள்ளது.
  • 70 வயதுக்கு ேமற்பட்ட வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வங்கிகளுக்கு பணம் செலுத்தச் சென்றாலோ அல்லது எடுக்கச் சென்றாலோ மரியாதைக்குறைவாகவும்,சேவைகள் அளிப்பதில் தாமதம் செய்வதாகவும் ரிசர்வ் வங்கிக்கு புகார் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இந்துக்களை சிறுபான்மையினர் என அறிவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • எட்டு மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினர் என அறிவிக்கக் கோரிய மனுவை உச்சநீதி மன்றம் நிராகரித்துள்ளது.
  • சமீபத்தில் எட்டு மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினர் என அறிவிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், லட்சத்தீவு, மிஜோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இந்த அறிவிப்பு தேவை என அந்த மனுவில் கூறப்பட்டது. வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் என்பவரால் இந்த மனு அளிக்கப்பட்டு இருந்தது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment