Type Here to Get Search Results !

திருபாய் அம்பானி

‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும்’, ‘இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகவும்’ தேர்வு செய்யப்பட்டார். ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தற்பொழுது இந்தியாவின் பொருளாதாரத்தை அளகிடக்கூடிய அளவில், தன்னுடைய வர்த்தகப் பங்குகளை உயர்த்தி, பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, திருபாய் அம்பானி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 28, 1932
பிறப்பிடம்: குஜராத் மாநிலம், இந்தியா
பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்
இறப்பு: ஜூலை 06, 2002
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
திருபாய் அம்பானி அவர்கள், 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலம் சோர்வாத் அருகிலுள்ள “குகஸ்வாடாவில்”, ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென் என்பவருக்கும் மகனாக ஒரு நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பிறகு தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஏமனுக்கு சென்று ஏ.பெஸி & கோ நிறுவனத்தில் சிறிது காலம் வேலைப் பார்த்தார். அந்நிறுவனத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றி வந்த அவர், பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். பின்னர், தன்னுடன் ஏமனில் வேலைப்பார்த்து வந்த சமபக்லால் தமானி என்பவருடன் இணைந்து, ‘மஜின்’ என்ற நிறுவனத்தை மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா என்ற இடத்தில் ஆரம்பித்தார். இந்நிறுவனம் முதலில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. ஒரு காலகட்டத்திற்க்கு பிறகு, சமபக்லால் தமானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாகப் பிரிந்த திருபாய் அம்பானி அவர்கள், தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
வெற்றிப் பயணம்
1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், துணி வியாபாரத்தில் நல்ல லாபம் இருப்பதை உணர்ந்த அவர், தன்னுடைய முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977 ஆம் ஆண்டு துவங்கினார். விமல் என்னும் பெயரில் துணிகளை விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இதனால், 1977 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 55000-க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள், ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். இதனால், நாளுக்கு நாள் சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக இது மாறியது. குறிப்பாக சொல்லப்போனால், 1982 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, அவர் பங்கு சந்தையில் தன்னுடைய பங்குகளின் விலையை பன்மடங்கு அதிகப்படுத்தி, ‘பங்கு சந்தைகளின் முடிசூடா மன்னனாக’ விளங்கினார்.
பல பிரச்சனைகள் வந்தாலும், முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் துவங்கிய அவர், தொடர்ந்து தன்னுடைய வணிகத்தை விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பெட்ரோலிய வேதிகள் உற்பத்தி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், சரக்குப் போக்குவரத்து எனப் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, மாபெரும் வளர்ச்சிப் பாதையில் தன்னுடைய வர்த்தக நிறுவனத்தை விரிவுபடுத்தினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
திருபாய் அம்பானி அவர்கள், கோகிலா பென் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோத்தாரி மற்றும் நினா சல்கோகர் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.
இறப்பு
மும்பையில் முல்ஜி-ஜீதா துணிச் சந்தையில் ஒரு சிறு வணிகராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானி அவர்கள், 2002 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6 ஆம் தேதி தன்னுடைய 69 ஆம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
விருதுகளும், மரியாதைகளும்
  • 2000 – இந்தியாவின் வேதித் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவருடைய பங்களிப்பைப் பாராட்டி, கெம்டெக் ஃபவுண்டேஷன் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் வோர்ல்ட் அமைப்புகள் அவருக்கு, ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர் விருதினை’ வழங்கி கௌரவித்தது.
  • 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டிடு ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார்.
  • 2001 – தி எக்கனாமிக் டைம்ஸ், பெருநிறுவன சிறப்பு செயல்பாட்டிற்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கியது.
  • இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் ‘இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக’ தேர்வு செய்யப்பட்டார்.
  • 2000 – டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில், ‘நூற்றாண்டுகளில் மிகப்பெரும் சொத்து உருவாக்க சாதனையாளராக’ தேர்வு செய்யப்பட்டார்.
உழைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை என அனைத்தையும் தன்னுடைய முன்னேற்றத்தின் மூலதனங்களாக சமர்பித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்தியாவை மற்ற நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கிற வகையில், வணிகத்தில் மாபெரும் புரட்சிக் கண்டவர் திருபாய் அம்பானி அவர்கள். குறிப்பாக சொல்லப்போனால், திறமையும் உழைப்பும்தான் முக்கியமான விஷயம் எனக் கூறிய திருபாய் அம்பானி, இன்று சுயமாகத் தொழில் செய்யும் ஒவ்வொருவரின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel