Type Here to Get Search Results !

ராஜா ரவி வர்மா


ராஜா ரவி வர்மா அவர்கள், இந்திய கலை வரலாற்றில் மிகப் பெரிய ஓவியர்களுள் ஒருவராக கருதப்படுபவர். தமிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார். இவர், இந்திய பாரம்பரிய கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை வழங்கினார். இதன் மூலமாக, உலகத்தின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பினார். ராஜா ரவி வர்மா அவர்கள், அழகான புடவை அணிந்த பெண்களின் ஓவியங்களை மிக மிக சீராகவும், தெய்வீகமாகவும் சித்தரித்தார். அவர் சம்பிரதாயப் பற்றுடையவர்கள் மத்தியில் தற்காலத்தவராகவும், தற்காலத்தவர்கள் மத்தியில் ஒரு பகுத்தறிவுவாதியாகவும் கருதப்பட்டார். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்து, நவீன காலத்துக்கு ஏற்றவாறு மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தியவரான ராஜா ரவி வர்மா அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 29, 1848
பிறந்த இடம்: கிளிமானூர்திருவிதாங்கூர், கேரளா
இறந்து: அக்டோபர் 2, 1906
தொழில்: ஓவியர்
நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு
ராஜா ரவி வர்மா அவர்கள், கேரளாவில், திருவனந்தபுரத்திலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள கிளிமானூர் அரண்மனையில், ஏப்ரல் 29, 1848 அன்று பிறந்தார். அவர் நீலகண்டன் பட்டதிரிபட் மற்றும் உமாம்பா தம்புராட்டி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் போன்ற மொழிகளைப் பயில்வதோடு மட்டுமல்லாமல், ஓவியம் வரைவதிலும் ஆர்வம் காட்டினார். ஏழு வயதில் அவர் கரித்துண்டுகளைப் பயன்படுத்தி அரண்மனை சுவரில் வரையத் தொடங்கினார். அவருள் ஒளிந்திருந்த ஓவியத்திறமையை கவனித்த அவரது மாமாவான ராஜா ராஜாவர்மா, அவருக்கு ஓவியம் வரைவதற்கான ஆரம்பப் பாடங்களையும், நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார். 1862ல், அவரது 14வது வயதில், ஆயில்யம் திருநாளன்று, மகாராஜா அவர்கள் ரவிவர்மரை திருவாங்கூர் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அரண்மனை ஓவியரான ராமஸ்வாமி நாயுடு அவர்கள் உதவியோடு தண்ணீர் ஓவியத்தைக் கற்றுக் கொடுத்தார். பின்னர், 1868ல், ஆங்கிலேய ஓவியரான, தியோடர் ஜென்சன் மூலம் எண்ணெய் ஓவியப் பாடங்களைக் கற்றார்.
ரவிவர்மரின் ஓவியங்களும், விருதுகளும்
மகாராஜா, ராஜவர்மரை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக ‘வீரஸ்ருங்கலா’ என்னும் உயரிய விருதை ரவிவர்மருக்கு அளித்து கௌரவித்தார் 1873ல், ரவி வர்மா அவர்கள், சென்னை ஓவியக் கண்காட்சியில் முதல் பரிசை வென்றார். 1873ல், வியன்னாவில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சியில், அவரது ஓவியங்களும் இடம்பெற்றன. சிறந்த ஓவியத்திற்கான விருதை வென்று, அவரும், அவரது ஓவியங்களும் உலகளவில் பிரசித்திப் பெற்று, பெரும் வரவேற்பையும் பெற்றது. அவர் உரிப்பொருளைத் தேடி, இந்தியா முழுவதும் பயணம் செய்தார். தென்னிந்திய பெண்களை மிகவும் அழகானவர்கள் என்று கருதிய அவர், அவர்களை பயன்பாட்டில் கொண்டு இந்து மத தெய்வங்களை வடிவமைத்தார். அவர் சில ஆண்டுகள், மும்பையிலுள்ள மகாராஷ்டிராவில் தங்கியிருந்த போது, பல அழகான மகாராஷ்டிரப் பெண்களை வரைந்தார்.
ஓவியக்கலை நுணுக்கங்கள்
ரவி வர்மர் அவர்கள், தனது ஓவியங்களில் மகாபாரத கதை அத்யாயங்களான துஷ்யந்தன் – சகுந்தலா, நளன் – தமயந்தி போன்ற தொடர்களை சித்தரித்த விதம்   குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஓவியங்களிலுள்ள சக்தி மற்றும் ஆற்றல் வாய்ந்த வெளிப்பாட்டால் ஈர்க்கப்பட்ட அவர், இந்திய கலைநுட்பத்தை நவீனமயமாக்க முயற்சி செய்தார். நவீன ஓவிய மரபை, இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தினார். அவரது ஓவியங்களில் இந்திய மரபுகளோடு, ஐரோப்பிய கலை நுட்பக் கலந்திணைப்பைக் காணலாம். இதுவே, அவரது ஓவியங்கள்  சிறந்த விளங்கக் காரணமாகும்.
அங்கீகாரங்கள்
இந்திய கலைக்காக ரவிவர்மரின் பரந்த பங்களிப்பைப் பரிசீலிக்கும் விதமாக, கேரளா அரசு, “ராஜா ரவி வர்மா புரஸ்காரம்” என்று ஒரு விருதை, கலை மற்றும் கலாச்சார துறையில் சிறந்து விளங்கும் மக்களைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கௌரவித்து வருகிறது.
கேரளாவில், மவேளிகராவில், ஒரு கலைக் கல்லூரி அவரது நினைவாக அமைக்கப்பட்டது.
கிளிமானூரிலுள்ள ராஜா ரவி வர்மா உயர்நிலைப் பள்ளி அவரது பெயரால் பெயரிடப்பட்டது.
அவரது பெயரில் கேரளா முழுவதும் பல கலாச்சார அமைப்புகள் உள்ளன.
ரவிவர்மரின் புகழ்பெற்ற ஓவியங்கள்
ராஜா ரவி வர்மா அவர்களின் புகழ்பெற்ற ஓவியங்களில் சில:
  • பெண் நினைவுகளில் தொலைந்த ஓவியம்
  • தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம்
  • இசைக்குழு ஓவியம்
  • அர்ஜூனன் மற்றும் சுபத்ரா ஓவியம்
  • ஒரு பெண் பழத்துடன் நிற்கும் ஓவியம்
  • சகுந்தலா ஓவியம்
  • தூதுவராக கிருஷ்ணரின் ஓவியம்
  • ஜடாயுவின் சிறகுகளை வெட்டியெறியும் இராவணன் ஓவியம்
  • மேகநாதனின் வெற்றியை சித்தரிக்கும் ஓவியம்
  • பிச்சைக்காரர் குடும்ப ஓவியம்
  • ஸ்வர்பத் வாசிக்கும் ஒரு பெண் ஓவியம்
  • கோவிலில் ஒரு பெண் பிச்சை கொடுக்கும் ஓவியம்
  • வருணனை வென்ற ராமர் ஓவியம்
  • தம்பதியர் சல்லாபத்தில் இருக்கும் ஓவியம்
  • திரௌபதி அவமானப்படுதல்
  • யசோதா கண்ணனை அலங்கரிக்கும் ஓவியம்
  • சகுந்தலாவிற்கு துஷ்யந்தர் காதல் கடிதம் எழுதும் ஓவியம்
  • முனிவர் கன்வாவின் ஆசிரமத்தில் ஒரு பெண் இருப்பது போன்ற ஓவியம்
இறப்பு
ரவி வர்மர் அவர்கள், 1906ல் அவரது 58ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
காலவரிசை
1848: கேரளாவில், திருவனந்தபுரத்திலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள கிளிமானூர் அரண்மனையில், ஏப்ரல் 29, 1848 அன்று பிறந்தார்.
1862: ராமஸ்வாமி நாயுடு அவர்கள் உதவியோடு தண்ணீர் ஓவியத்தைக் கற்றார்.
1868: ஆங்கிலேய ஓவியரான தியோடர் ஜென்சன் மூலம் எண்ணெய் ஓவியப் பாடங்களைக் கற்றார்.
1873: சென்னை ஓவியக் கண்காட்சியில் முதல் பரிசை வென்றார்.
1873: வியன்னாவில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சியில், சிறந்த ஓவியத்திற்கான விருதை வென்றார்.
1906: 1906ல் அவரது 58ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel